காற்பந்து மூலம் வசதி குறைந்த மாணவர்களுக்கு உதவி

காற்பந்து மூலம் வசதி குறைந்த மாணவர்களுக்கு உதவி

2 mins read
3eea519f-14f2-4032-9bbb-198a13730ac3
காற்பந்து மூலம் வசதி குறைந்த மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிறது ‘காற்பந்து பிளஸ்’ அமைப்பு. - படம்: ஷின் மின்

சிங்கப்பூரில் பத்தாண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட ‘காற்பந்து பிளஸ்’ அமைப்பு, வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 200 மாணவர்களுக்கு ஆதரவு அளித்துள்ளது.

உலகளாவிய சமூக சேவை அமைப்பான ‘ரோட்டரி’ இதற்கு உறுதுணையாக விளங்குகிறது.

ஜூலை 2022 முதல் டிசம்பர் 2023 வரை, ரோட்டரி ஏறத்தாழ 280,000 வெள்ளியை காற்பந்து பிளஸ் அமைப்புக்கு நன்கொடையாக அளித்துள்ளது. அந்த நிதியைக் கொண்டு, ‘சாம்பியன்ஸ் அன்லிமிடெட்’ என்னும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது காற்பந்து பிளஸ். 

இத்திட்டத்தின்கீழ், 6 முதல் 16 வயது வரையிலான மாணவர்களுக்கு நற்பண்புகளை மையமாகக் கொண்ட காற்பந்துப் பயிற்சி அளிக்கப்படும்.  

திரு டாம்  உல்ஃப்.
திரு டாம் உல்ஃப். - படம்: ஷின் மின்

சிங்கப்பூர் ரோட்டரி சங்கத்தின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டாம் உல்ஃப், அனுபவமிக்க பயிற்றுவிப்பாளர்கள் மாணவர்களுக்கு நற்பண்புகளைக் கற்றுத் தருவதாகக் கூறினார்.  

“2023ல் சில மாணவர்களை ஜெர்மனிக்கு அழைத்துச் சென்றோம்.  அங்கே ‘பொருஷியா டோர்ட்மண்ட்’ என்னும் புகழ்பெற்ற காற்பந்துக் குழுவுடன் அவர்கள் விளையாடி மகிழ்ந்தனர். அவர்களுக்குள் அதன் மூலம் ஓர் அணுக்கமான நட்பு உருவானது,” என்றார் அவர். 

காற்பந்து மூலம் மாணவர்கள் நற்பண்புகளைக் கற்றுக்கொண்டு, விளையாட்டில் வெற்றி பெற்றால் பெருமையாகவும் இல்லாவிடில் அதை ஒரு கற்றல் அனுபவமாகவும் உணர்வதுதான் முக்கியம் என்று இவ்வமைப்பின் தலைவர்கள் கருதுகிறார்கள். 

நித்திய நாராயணன், 11.
நித்திய நாராயணன், 11. - படம்: ஷின் மின் 

காற்பந்து பிளஸ் அமைப்பின் உதவியைப் பெறும் நித்திய நாராயணன், 11, குழு உணர்வு, விடாமுயற்சி, உறுதி போன்றவற்றைத் தன் பயிற்றுவிப்பாளர்கள் கற்றுத் தருவதாகக் கூறினார். 

சீடார் தொடக்கப்பள்ளி மாணவரான இவர், “ஈராண்டுகளில், காற்பந்துப் பயிற்சி வகுப்புகள் மூலம் பல நண்பர்களைச் சந்தித்தேன். என் பயிற்றுவிப்பாளர்கள் இருவரும் நான் ஏதாவது தவறு செய்தாலும் பொறுமையாக மீண்டும் கற்றுத் தந்தனர்,” என்றார். 

ஆனந்தகிருஷ்ணன், 23
ஆனந்தகிருஷ்ணன், 23 - படம்: ஷின் மின் 

பயிற்றுவிப்பாளரான ஆனந்தகிருஷ்ணன், 23, சிங்கப்பூர் நிர்வாகக் கழகத்தில் (சிம்) படிக்கிறார்.

“ஒவ்வொரு மாதமும், ஒரு காற்பந்துத் திறனை மையக் கருப்பொருளாக வைத்துக் கற்றுத் தரப்படும். வகுப்பு முடிவில், ‘அன்றைய தினத்தின் சிறந்த விளையாட்டாளர்’ ஆகத் தெரிவு செய்யப்படுபவருக்குப் புள்ளிகள் வழங்கப்படும். மாத இறுதியில், அதிக புள்ளிகள் பெற்ற மாணவருக்குப் பரிசு வழங்கப்படும்.

“குழு உணர்வை மேம்படுத்தும் நிகழ்ச்சிகள், மாணவர்களின் குடும்பங்களைச் சென்று சந்திப்பது போன்ற பல முயற்சிகள் எடுக்கப்படுகின்றன,” என்றார். 

அருணேஷ் சிவபிரபு முத்துராமன்,12
அருணேஷ் சிவபிரபு முத்துராமன்,12 - படம்: ஷின் மின் 

சீடார் தொடக்கப்பள்ளியில் படிக்கும் அருணேஷ் சிவபிரபு முத்துராமன்,12, “பயிற்றுவிப்பாளர்கள், எனது பலவீனங்களைச் சரிசெய்ய உதவுவார்கள். இத்திட்டத்தில் இணைந்தது மிகவும் மகிழ்ச்சி தருகிறது,” என்றார். 

ஆண்டுதோறும் நடத்தப்படும் ரோட்டரி அனைத்துலக மாநாடு சிங்கப்பூரில் இவ்வாண்டு மே 25 முதல் 29ஆம் தேதி வரை நடைபெறும். உலகெங்குமிருந்து பலர் அதில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

குறிப்புச் சொற்கள்