பிரதமராக திரு லீ சியன் லூங் செயல்பட்ட காலத்தில் சிங்கப்பூர் கண்டுள்ள மாற்றங்களை இந்தியச் சமூகத் தலைவர்களும் தமிழ் முரசும் நினைவுகூர்கின்றனர்.
இளம்பிள்ளைகளுக்கான தேவைகள், கல்வி, வேலை வாய்ப்பு, முதியோர் பராமரிப்பு எனப் பல்வேறு துறைகளில் பிரதமர் லீ தலைமையிலான அரசாங்கம் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களை அந்தத் தலைவர்கள் விவரித்தனர். அத்துடன், இந்திய வர்த்தங்களில் பெரும்பாலானவையாக உள்ள சிறிய, நடுத்தர வர்த்தகங்கள் பற்றியும் சமய விவகாரங்களிலும் மொழி வளர்ச்சிக்கான முயற்சிகளிலும் திரு லீ ஆர்வம் காட்டுகிறார் என்பது இந்தத் தலைவர்களின் அனுபவமாக உள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர், சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் தலைவர் ரா. அன்பரசு, சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழில்சபையின் முன்னாள் தலைவர் டி சந்துரு, ஸ்ரீ மாரியம்மன் கோவிலின் தலைவர் எஸ்.லட்சுமணன், சமூக அடித்தளத் தலைவர் ஜெகதீஷ்வரன் ராஜு, முன்னாள் செய்தியாளர் எஸ். ரமேஷ், ஸ்ரீ நாராயண மிஷன் பராமரிப்பு இல்லத் தலைவர் எஸ். தேவேந்திரன், இந்திய முஸ்லிம் பேரவைத் தலைவர் முகமது பிலால், ‘சைலன்ட் ஹீரோஸ்’ அறநிறுவனர் எம் பி செல்வம், சுகாதாரத் துறை முன்னோடி டாக்டர் உமா ராஜன் ஆகியோர் இந்தக் காணொளித் தொடரில் இடம்பெற்றுள்ளனர்.
திரு லீயின் தலைமைத்துவத்தில் இந்தியர்கள் கண்டுள்ள ஏற்றம் குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய இந்தத் தலைவர்கள், திரு லாரன்ஸ் வோங்கின் தலைமைத்துவம் சிங்கப்பூர் இந்தியர்களின் நலனைத் தொடர்ந்து பேணும் எனக் கருத்திணக்கம் கொண்டுள்ளனர். அத்துடன், திரு வோங், இளையர்கள் உள்ளிட்ட எல்லாத் தரப்பு மக்களுடன் ஒன்றிணையக் கூடியவராக இருப்பார் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.