தென்றல் தேயாது; தெய்வீகக் குரல் ஓயாது

3 mins read
2705cb34-d1b2-42fa-aacd-a7f821e6e6f0
சிங்கப்பூரில் 28 ஆண்டுகளாக ஓதுவராகப் பணியாற்றிய வே. சுந்தரமூர்த்தி. - படம்: ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயம்

ஆலயங்களில் தமிழ் அதிகமாக ஒலிக்க வேண்டும், அன்பர்கள் தேவாரம் ஓதவேண்டும் என்பது பல்லாண்டுகளாக ஓதுவாராகப் பணியாற்றி அண்மையில் பணி ஓய்வுபெற்ற வே. சுந்தரமூர்த்தி ஓதுவாரின் விருப்பம்.

ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயத்தில் 28 ஆண்டுகளாகத் தேவாரப் பாடலைப் பாடிய திரு சுந்தரமூர்த்திக்கான மரியாதை செய்யும் நிகழ்வு, அந்த ஆலயத்தில் கடந்த மாதம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரு சுந்தரமூர்த்தியை அவருடைய முன்னாள் மாணவர்கள் கெளரவப்படுத்தி, தாங்கள் கற்ற பதிகங்களை ஓதி, தங்கள் ஆசிரியருக்குப் பெருமை சேர்த்தனர்.

ஓதுவார் அய்யாவிடமிருந்து ஒன்பது ஆண்டுகளாகப் பலவற்றைக் கற்றுக்கொண்டதாக பல்கலைக்கழக மாணவி சக்திவேல் மோஹிதா, 20, தெரிவித்தார்.

மாணவர்களுடனும் இந்து தர்ம, சைவ சித்தாந்த ஆர்வலர்களுடனும் சுந்தரமூர்த்தி ஓதுவார் (நடுவில்).
மாணவர்களுடனும் இந்து தர்ம, சைவ சித்தாந்த ஆர்வலர்களுடனும் சுந்தரமூர்த்தி ஓதுவார் (நடுவில்). - படம்: ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயம்

“உதாரணத்திற்கு, ஒரு பாடலைப் பண்ணுடன் சேர்ந்து பாடுவது; பார்வையாளர்களுக்கு முன் பாடல்களைப் பாடும்போது அவர்களுக்கு தெரிந்த பாடலாக அது இருந்தாலும் அவர்களுக்கு எப்படி பாடுவது என்பதை தன் ஆசிரியரிடம் கற்றுக்கொண்டதாக சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் கணிதவியல் மற்றும் சட்டத்துறையில் பயிலும் திருவாட்டி சக்திவேல் மோஹிதா கூறினார்.

ஆலயத்தில் திரு சுந்தரமூர்த்தி பாடுவதைக் கேட்டு இன்புற்ற பலரில் தாமும் அடக்கம் என்று கூறிய இல்லத்தரசி லதா மகேந்திரன், 47, அவரிடம் ஐந்து ஆண்டுகள் தேவாரம் கற்றுக்கொண்டு கோயில்களில் இப்போது தனியாகப் பாடும் அளவுக்குத் திறன் பெற்றிருப்பதாகக் கூறுகிறார்.

1996ல் சிங்கப்பூருக்கு வந்த திரு சுந்தரமூர்த்தி, பெரும்பாலும் வீரமாகாளியம்மன் கோயிலில் பாடினாலும் கேலாங் ஈஸ்ட் ஸ்ரீ சிவன் கோயில், மார்சிலிங் ஸ்ரீ சிவகிருஷ்ணா ஆலயம், ஈசூன் புனிதமரம் பாலசுப்ரமணியம் ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களிலும் சமய விழாக்களின்போதும் பாடுவது வழக்கம்.

தேவாரப் பாடல்களைப் பாடுவதுப் பரம்பரைத் தொழிலாகக் கொண்ட திரு சுந்தரமூர்த்தி, 1964ல் தஞ்சை மாவட்டம், பனங்காடியில் பிறந்து வளர்ந்தார். தருமபுர ஆதீன பாடசாலையில் ஐந்து ஆண்டு இசையும் தமிழும் கற்று, பின் மதுரை ஆதீனத்தில் ஓதுவாராகப் பணியாற்றினார்.

“200க்கும் மேற்பட்ட பதிகங்களை மனனம் செய்து பண்ணுடன் பாடப் பயிற்சி பெற்றேன். கற்றுக்கொள்வது சவாலாக இருந்தாலும் இறைவனின் மீதான பற்றுதலாலும் ஆர்வத்துடன் கற்பித்த தருமபுரம் வேலாயுதம் ஓதுவாராலும் கற்றேன்,” என்று அவர் கூறினார்.

ராகங்களில் தமக்குப் பிடித்தது நாட்டை என்றும் தேவாரப் பாடல்களில் பிடித்தது திருநாவுக்கரசர் இயற்றிய ‘தலையே நீ வணங்காய்’ பாடல் என்றும் திரு சுந்தரமூர்த்தி தமிழ் முரசிடம் பகிர்ந்தார்.

மனித உடல் அங்கங்களின் பயனையும் மேன்மையையும் அந்தப் பாடல் சிறப்பிப்பதால் அது அவருக்குப் பிடிக்கும். திருஞானசம்பந்தர் இயற்றிய ‘யாமாமாநீ ’ உள்ளிட்ட சில பாடல்கள் கற்பதற்குக் கடினமாக இருப்பதைக் குறப்பிட்டார்.

தற்போது தேவக்கோட்டையில் மனைவி மற்றும் மகன், மகளுடன் வசிக்கும் திரு சுந்தரமூர்த்தி, வீட்டுக்கு அருகிலுள்ள கோயில்களில் பாடித் தொண்டாற்றுகிறார்.

சிங்கப்பூர் கோயில்களில் பாடும்போது பக்தர்கள் சிலர் தம்மை அணுகி பாராட்டிய இனிய நினைவுகள் அவ்வப்போது அவர் மனதில் வந்துபோவதுண்டு.

“நான் பாடிக்கொண்டே இருக்கவேண்டும். எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கு பாட ஆசைப்படுகிறேன்,” என்று அவர் கூறினர்.

தேவாரப் பாடல்களைப் பாடுவோர்க்கு நோய் நோடிகள் அண்டாது, வாழ்க்கை சீராக இருக்கும், நற்சிந்தை அதிகரிக்கும் என்பது அவரது நம்பிக்கை.

குறிப்புச் சொற்கள்