ஓய்வுபெற்ற பின்பும் உடல், மன உறுதிக்குச் சவால்விடும் எவரெஸ்ட் சிகர அடிவார முகாமுக்கு மலையேற்றப் பயணம் மேற்கொண்டுள்ளனர் 65 வயதுடைய நண்பர்கள் ந மதியழகன், விஜயமோகன்.
இவர்களது உறுதியான நோக்கத்தைக் கண்டு வியந்த விஜயமோகனின் மகள் சுபாஷினி, அவரின் கணவர் ஒஸ்வின் சூர்யா இருவரும் சேர்ந்து இப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துத் திரும்பியுள்ளனர்.
கடுங்குளிர், கடுமையான நிலப்பரப்பு, வழக்கத்திற்கு மாறான உணவு, தங்குமிட வசதிக்குறைவு எனச் சில சிரமங்களுக்கிடையே தினமும் சராசரியாக ஏழு முதல் எட்டு மணி நேரம் நடந்து எட்டு நாள்களுக்குப் பின் அடிவாரத்தை இவர்கள் சென்றடைந்தனர்.
ஒரு பெருங்கனவை நிறைவேற்றிய உணர்வு தனக்கு ஏற்பட்டுள்ளதாகச் சொன்னார் இப்பயணத் திட்டத்தை முதலில் வகுத்த ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி விஜயமோகன்.
ஆண்டுதோறும் ஏதேனும் ஒரு பயணம் மேற்கொண்டு வரும் விஜயமோகன், மலையேற்றம் மேற்கொள்ள எண்ணித் தன் விருப்பத்தைத் தம் நண்பரிடம் கூறினார்.
உடற்பயிற்சி செய்யும் பழக்கமில்லாத மதியழகன் முதலில் சற்று தயங்கியபோதும் பின்னர் தன்னால் முடியும் என்கிற உந்துதலுடன் பயணத்தில் இணைந்தார்.
கடந்த ஆண்டிறுதியில் திட்டமிட்டு, தகவல்களைத் திரட்டிக் கோடைக்காலமான ஏப்ரல், மே மாதங்களில் பயணம் மேற்கொள்ள முடிவு செய்தனர்.
நீண்ட பயணம் என்பதால் ஜனவரி மாதம் முதலே மெக்ரீட்சிப் பகுதியில் மூன்று நான்கு மணிநேர நடைப்பயிற்சி, முதுகில் எடை சுமந்து நடப்பது என நால்வரும் தொடர்ந்து பயிற்சி எடுத்ததாகக் கூறினர்.
தொடர்புடைய செய்திகள்
மலையேற்றத்தின்போது வழியில் பலமுறை சோர்வு ஏற்பட்டு திரும்பிவிடலாம் என்ற எண்ணம் வந்ததுண்டு எனக் கூறிய மதியழகன், ‘இப்போது முடியாவிட்டால் எப்போதுமே முடியாது’ எனும் எண்ணம் தந்த ஊக்கம்தான் இப்பயணத்தை முடிக்க உதவியதாகச் சிலிர்ப்புடன் சொன்னார்.
தம்மால் அதிகம் குளிர் தாங்க முடியாததால் முன்னேற்பாடாகக் குளிர்கால ஆடைகள், கையுறைகள் ஆகியவற்றை அணிந்தவாறு நடந்தபோதும் பனிப்பொழிவு உடலில் ஊசி குத்தியது போல் இருந்ததாகச் சொன்னார் மதியழகன்.
அடிவார முகாமை அடைந்ததும் சோர்வு குறைந்து ஒருவித உற்சாகம் தம்முள் பிறந்ததாக விஜயமோகன் குறிப்பிட்டார்.
சுடுநீர், குளிர் உடைகள், தின்பண்டங்கள் என மூன்று, நான்கு கிலோ எடையுள்ள பையைச் சுமந்து நடந்தது மற்றொரு கடினமான அம்சம் என்றார் சூர்யா. சிரமமான நடைப்பயணத்துக்குச் சுற்றியுள்ள அழகு இதமளித்ததாக அவர் கூறினார்.
தந்தை தம் இதயத்துக்கு ‘ஆஞ்சியோபிளாஸ்டி’ சிகிச்சை மேற்கொண்ட நிலையிலும் உடல்நிலையை நன்கு பராமரித்து வந்ததால் சிக்கல்களைச் சந்திக்காமல் பயணத்தை நிறைவு செய்ததாகக் கூறினார் சுபாஷினி.
கணவர் விளையாட்டுத் துறைப் பயிற்சியாளர், தந்தை காவல் அதிகாரி என்பதால் அவர்கள் இயல்பாகவே உடலுறுதி மிக்கவர்கள். மதியழகன் பெரும் மனவுறுதியுடன் இருந்தார்.
“இவற்றில் எதுவும் எனக்கு இல்லை என்பதால் அதிக சிரமப்பட்டேன்,” என்றார் சுபாஷினி. இருப்பினும், அந்த மூவரின் மூலம் தான் ஊக்கம் பெற்றதாகக் குறிப்பிட்டார்.
தாங்கள் இருவரும் அடிவாரத்தை அடைந்ததை விட, பேரார்வத்துடன் நடந்து வந்த மூத்தோர் இருவரும் அடைந்ததைப் பார்ப்பது பேருவகை அளித்ததாகக் கூறினர் சுபாஷினி, சூர்யா இணையர்.
தேவையான, குறைந்த எண்ணிக்கையிலான பொருள்களுடன் பயணச் சிரமங்களைக் கடந்து மீள்திறனுடன் தாங்கள் மேற்கொண்ட இப்பயணம், வாழ்க்கை குறித்த தங்களின் கண்ணோட்டத்தை முற்றிலும் மாற்றியுள்ளதாக நால்வரும் கூறினர்.
இதற்குப் பிறகு அடுத்து என்ன புதிதாகச் செய்யலாம் என்ற உற்சாகத்தை நால்வரும் பெற்றுள்ளனர்.