சிராங்கூன் சமூக மன்றத்தில் திருவள்ளுவர் தமிழ்ப் பேச்சாளர் மன்ற அறிமுக விழா கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை (மே 26) நடந்தேறியது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அல்ஜுனிட் குழுத்தொகுதி அடித்தள அமைப்புகளின் பொதுப்பணிப் பதக்கத்துக்கான ஆலோசகர் சான் ஹுய் யூ ர், தமிழின் பெருமைகளை எடுத்துக் கூறியதோடு, ஒரு சில வார்த்தைகளை தமிழில் பேசியது பார்வையாளர்களைக் கவர்ந்தது.
நிகழ்ச்சியில் பாரம்பரிய நடனங்கள், பரதநாட்டியம், சிறார்களின் கலை நிகழ்ச்சிகள் எனப் பல்சுவை அங்கங்கள் இடம்பெற்றன.
திருக்குறள் அதிகாரங்களை நடிப்பு, பாடல், நடனம் மூலம் எளிமையாக பார்வையாளர்களை ஈர்க்கும் விதத்தில் சிறார்கள், திருமதி சாவித்திரி, திருமதி ராதிகா ராமலிங்கம் ஆகியோர் நடித்துக் காட்டினர். தொடர்ந்து திருவள்ளுவர் மன்ற அறிமுக விழா நடந்தேறியது.
‘இணக்கமான வாழ்விற்குப் பெரிதும் துணைநிற்பது செயலாற்றலா? பேச்சாற்றலா?’ என்ற தலைப்பில் சிறப்பு அங்கமான பட்டிமன்றம் இடம்பெற்றது.
‘செயலாற்றலே’ என்ற அணியில் திருமதி அகிலா முத்து, திரு கேத்திரபாலன் மூக்காண்டி, திருமதி ஹேமா சுவாமிநாதனும், ‘பேச்சாற்றலே’ என்ற அணியில் திருமதி ராதிகா ராமலிங்கம், திரு தியாகராஜன் நடராஜன், திரு உமாசங்கர் நாராயணனும் விவாதித்தனர்.
பேச்சாளர்களின் வாதத்தைத் தொகுத்து வழங்கிய நடுவர் முனைவர் இரத்தின வேங்கடேசன், ‘இணக்கமான வாழ்விற்கு பெரிதும் துணைநிற்பது செயலாற்றலே’ என்று தீர்ப்புக் கூறினார்.
சிறந்த பேச்சாளர் விருதை திருமதி ஹேமா சுவாமிநாதன் வென்றார்.
தொடர்புடைய செய்திகள்
தொடர்ந்து அனைவரும் பங்கேற்கும் வகையில் போட்டிகளும் விளையாட்டுகளும் நடத்தப்பட்டன.
திருமதி முருகசாமி குமுதப்பிரியா நாட்டுப்புறப் பாடல் பாடியும் திரு வசந்த் குமார் ஆறுமுகம் திரையிசைப் பாடல்கள் பாடியும் பார்வையாளர்களை மகிழ்வூட்டினர்.