சிண்டாவின் ஏற்பாட்டில் முதியோருக்கு மறதிநோய்ப் பரிசோதனை

சிண்டாவின் ஏற்பாட்டில் முதியோருக்கு மறதிநோய்ப் பரிசோதனை

2 mins read
0ef230ac-c559-4e63-9203-824ca92f2c97
சிண்டா முதல்முறையாக முதியோருக்கான மறதிநோய்ப் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்திருந்தது.   - படம்: பிரீத்தி அசோகன் 

சிண்டா முதியோருக்கான மறதிநோய்ப் பரிசோதனைகளை ஜூன் 8ஆம் தேதி, பிரஹம் மையத்தில் ஏற்பாடு செய்தது.

முதல்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் முதியோர் 25 பேர் கலந்துகொண்டனர். முதியோர் தொடர்பில் சிண்டா ஏற்பாடு செய்த ஆறாவது நிகழ்ச்சி இது.

மேலும், முதியோர் சமூக ரீதியாக தனிமைப்படுத்தப்படவில்லை என்பதை உணர்த்துவது இத்தகைய நிகழ்ச்சியின் நோக்கம்.

சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன்,“பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் முதியோர்க்குக் கூடுதல் உதவி வழங்க, கடந்த சில ஆண்டுகளாகப் பல நிகழ்ச்சிகளை நடத்திவருகிறோம்.

“வயது காரணமாக, அவர்களுக்குச் சில பிரச்சினைகள் ஏற்படுவதுண்டு. எனவே உடல்நலம் சார்ந்த மருத்துவ ரீதியான நிகழ்ச்சிக்குத் திட்டமிட்டோம்,’’ என்று கூறினார்.

வீட்டிலேயே செய்யக்கூடிய எளிமையான உடற்பயிற்சி முதியவர்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டது. மேலும், மனநலத்தை மேம்படுத்தும் வழிகளையும் அதற்கான வாழ்க்கைமுறை நெறிகளையும் அவர்கள் கற்றுக்கொண்டார்கள். 

கைவினை நடவடிக்கையில் ஈடுபடும் முதியோர். 
கைவினை நடவடிக்கையில் ஈடுபடும் முதியோர்.  - படம்: பிரீத்தி அசோகன் 
முதியோருடன் நடவடிக்கையில் ஈடுபடும் சிண்டா தொண்டூழியர்கள். 
முதியோருடன் நடவடிக்கையில் ஈடுபடும் சிண்டா தொண்டூழியர்கள்.  - படம்: பிரீத்தி அசோகன் 

மேலும், கைவினை நடவடிக்கைக்கும் சிண்டா ஏற்பாடு செய்திருந்தது. அதில், முதியோர் தங்களுக்குப் பிடித்த வடிவத்திலும் வண்ணத்திலும் சிறிய தட்டுகளை உருவாக்கினார்கள்.

சிண்டா தொண்டூழியர்கள் முதியோருடன் பாடல், நடனம், விளையாட்டுகள் எனப் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.  

40 நிமிடப் பரிசோதனையில் மறதிநோய்க்கான அறிகுறிகள் உள்ளோருக்கு அது குறித்து நிகழ்ச்சிக்குப் பின்னர் தெரிவிக்கப்பட்டது. அவர்களின் வீட்டுக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் கூடுதல் பரிசோதனைகளுக்குச் செல்ல ஊக்குவிக்கப்பட்டனர். தேவைப்பட்டால், முதியவர்களின் குடும்பத்தினர்களுடன் இது குறித்து பேசவும் பிரஹம் மையம் முன்வந்துள்ளது.

மையத்தின் வாரிய இயக்குநர் திலீப் நாயர், “பிரஹம் மையத்தில், முதியோருக்கு ஆதரவான சூழலை உருவாக்கக் கடமைப்பட்டுள்ளோம். 

“தனிமைப்படுத்தப்பட்ட இந்திய முதியோரின் வாழ்க்கையை மேம்படுத்த இந்த அர்த்தமுள்ள முயற்சியில் எங்களுடன் இணைந்ததற்காக சிண்டாவுக்கு நன்றி கூறுகிறோம்,” என்றார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சரோஜா குப்பன், 59, “இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டதில் மிக்க மகிழ்ச்சி. சிண்டா ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகள் எப்போதும் மன நிம்மதியை அளிக்கும். கைவினை நடவடிக்கை, ஆடல், பாடல், போன்ற எல்லாவற்றையும் நான் ரசித்து மகிழ்ந்தேன்,” என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்