சிங்கப்பூர்க் குடியரசு ஆகாயப்படைக்கு, மே 30 முதல் ஜூன் 14ஆம் தேதி வரை அமெரிக்காவில் நடந்த ‘சிவப்புக் கொடி அலாஸ்கா’ பயிற்சியில் இரு விருதுகள் கிடைத்துள்ளன.
‘தலைசிறந்த போர் விமானத் தலைமுறைப் படைப்பிரிவு’, ‘தலைசிறந்த போர்ப்பயிற்சி ஆணை அதிகாரி’ ஆகியவை அவை.
சிங்கப்பூர், இந்திய, அமெரிக்க ஆகாயப்படைகளுக்கு ஒருங்கிணைந்த பயிற்சி கொடுத்தது அமெரிக்க ஆகாயப்படை நடத்திய இம்முகாம்.
அமெரிக்காவில் அமைந்திருக்கும் இரு சிங்கப்பூர் ஆகாயப்படைப் பிரிவுகளைச் சேர்ந்த - ‘பீஸ் கார்வின் II’ (பிசி II), பிசி V - 300க்கும் மேற்பட்ட வீரர்கள் இப்பயிற்சியில் கலந்துகொண்டனர்.
‘பிசி II’விலிருந்து பத்து ‘எஃப்-16’ ரக போர் விமானங்களும் ‘பிசி V’லிருந்து 14 ‘எஃப்-15எஸ்ஜி’ ரக போர் விமானங்களும் பங்குபெற்றன.
ஒட்டுமொத்தத்தில் அமெரிக்க ஆகாயப்படையின் ‘எஃப்-16’, ‘ஏ-10’ மற்றும் இந்திய ‘ரஃபேல்’ போர் விமானங்கள் உட்பட 90க்கும் மேற்பட்ட விமானங்கள் பங்குபெற்றன.
சில சிங்கப்பூர் ஆகாயப்படைவீரர்கள் ஒவ்வொரு முறையும் அதிகபட்சம் 50 விமானங்களை உள்ளடக்கிய போர்ப் பயிற்சிகளை வழிநடத்தினர்.
முதல் முறையே வெற்றி
‘தலைசிறந்த போர் விமானத் தலைமுறைப் படைப்பிரிவு’ பட்டத்தை வென்ற ‘பிசி V’வைச் சேர்ந்த, முதலாம் ராணுவ வல்லுநர் நாவனி அமுதலிங்கம், 25, தன் முதல் சிவப்புக் கொடிப் பயிற்சியில் பங்குபெற்றுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
‘மவுண்டன் ஹோம்’ நகரிலுள்ள ‘பிசி V’ல், 2022ஆம் ஆண்டு டிசம்பரிலிருந்து மின், கருவியியல் நிபுணராகப் பணியாற்றி வந்துள்ள நாவனிக்கு முதல்முறையே இப்பயிற்சியில் வெற்றி கிடைத்துள்ளது.
“வழக்கமானதைவிட பன்மடங்குக் கூடுதலான விமானங்கள் இருந்ததால் அதிவிரைவாக செயல்பட வேண்டியிருந்தது. வானிலையும் எதிர்பாரா விதமாக இருந்தது.
“வேகமாக விமானங்களைப் பழுதுபார்த்துவிட்டு வெளியேற வேண்டியிருந்தது,” எனத் தாம் எதிர்நோக்கிய சவால்களை விவரித்தார் நாவனி.
ஈராண்டுகளுக்குத் தம் குடும்பத்தைவிட்டுப் பிரிந்திருந்தாலும் ‘ஃபேஸ்டைம்’ மூலம் அவர்களுடன் தொடர்ந்து இணைந்திருப்பதாகவும், ‘பிசி V’ சிங்கப்பூரில் இருப்பதுபோன்ற கம்பத்து உணர்வைக் கொடுப்பதாகவும் கூறினார் நாவனி. அடுத்த ஆண்டு அவர் சிங்கப்பூர் திரும்புவார்.
தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் வான்வெளி மின்னணுவியல் படித்து முடித்ததும் தன் குடும்பத்திலேயே முதன்முதலாக 2020ல் சிங்கப்பூர் ஆகாயப்படையில் சேர்ந்த நாவனி, “ஆண்-பெண் சமத்துவத்தில் நம் ஆகாயப்படை நெடுந்தூரம் கடந்து வந்துள்ளது. இன்று பெண்கள் பலரும் முக்கியப் பொறுப்புகளை வகிக்கின்றனர்,” என்றார்.
குடும்பத்தின் அளவற்ற ஆதரவு
அரிசோனாவிலுள்ள ‘பிசி II’வில் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பணியாற்றியுள்ள 35 வயது மூன்றாம் ராணுவ வல்லுநர் தீபன்ராஜ் சந்திரனுக்கு ஆதரவாக அவரோடு அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்தனர் அவருடைய மனைவியும் இரு மகள்களும்.
அவருடைய 11 வயது மூத்த மகளின் கல்வி தடைப்படாமல் இருக்க சிங்கப்பூர் கல்வித் தரம்வாய்ந்த அமெரிக்கப் பள்ளியில் சேர்த்ததோடு, சிங்கப்பூர் பாடத்திட்டத்திற்கேற்ப வாரயிறுதிகளில் இணையவழிப் பயிற்சிகளிலும் சேர்த்துள்ளதாகக் கூறினார் தீபன்ராஜ்.
சிவப்புக் கொடிப் பயிற்சியில் அவர் பங்குபெறுவது இது மூன்றாவது முறை. 2012, 2014 பயிற்சிகளிலும் அவர் பங்குபெற்றிருந்தார்.
எஃப்-16 ரக விமான ஆயுதப் பிரிவுக்குத் தலைமை தாங்கும் அவர், விமானிகளுக்கு எத்தகைய ஆயுதங்கள், ஆயுதப் பயிற்சிகள் தேவை எனத் திட்டமிடுகிறார். அவசரத்தில் விமானத்திலிருந்து விமானியைப் பாதுகாப்பாக வெளியேற்றும் இருக்கை வெடிபொருள்களையும் அவர் மேற்பார்வையிடுகிறார்.
“இம்முகாமிற்கென நாங்கள் ஒரு மாதம் தீவிரமாகப் பயிற்சி செய்து வந்துள்ளோம்.” என்றார் தீபன்ராஜ்.
1984லிருந்து சிங்கப்பூர் ஆகாயப்படை, ‘சிவப்புக் கொடி அலாஸ்கா’ பயிற்சியில் (முன்பு ‘கோப் தண்டர் பயிற்சி’ என்ற பெயர்) பங்கேற்று வந்துள்ளது. அமெரிக்கா உட்பட மற்ற நாட்டு ஆகாயப்படைகளுடன் தன் திறன்களை ஒப்பிட சிங்கப்பூருக்கு இது வாய்ப்பளிக்கிறது.

