உடற்குறையுள்ளவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் ‘கோ சோக் டோங் எனேபல்’ விருதுகள் ஆண்டுதோறும் அளிக்கப்பட்டு வருகின்றன.
விருதுகள், ‘அச்சீவ்மென்ட்’ மற்றும் ‘பிராமிஸ்’ என இரு பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. அந்த விருதுகளின் இவ்வாண்டுக்கான முன்மொழிவுகள் ஏற்கெனவே தொடங்கிவிட்ட நிலையில் முன்பு இதில் விருது பெற்ற இருவரின் கதைகளை அறிந்து வந்தது தமிழ் முரசு.
உடற்குறை ‘ஊனமன்று’
முதுமையிலும் துடிப்பாகக் காணப்படும் பழனிசாமி ஆவடை, 74, உடற்குறை ஒரு தடையல்ல என்பதற்குச் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறார்.
அவருக்கு ஏழு வயதிலேயே ‘போலியோ’ இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், அவரால் நடக்க முடியாது. இருந்தாலும் அவர் முடங்கிப் போகாமல் உடற்குறை இல்லாத ஒருவர் போல்தான் செயல்படுகிறார்.
சக்கர நாற்காலியைச் சார்ந்திருந்தாலும் அதனால் அவர் ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ முடியாமல் தவிக்கவில்லை.
நண்பர் ஒருவரின் ஊக்கத்தால் பழனிசாமி தமது கவனத்தை விளையாட்டுகளின் மீது திருப்பினார்.
நீச்சல், கூடைப்பந்து, வில்வித்தை, சக்கர நாற்காலி பந்தயம், டென்னிஸ் எனப் பல ஆண்டுகளுக்கு முன்னர் உடற்குறை விளையாட்டுகள் அதிகம் அறியப்படாத காலத்திலேயே இவர் விளையாட்டுகளை ஒரு கை பார்த்து விட்டார்.
“நான் சிறுவனாக இருந்தபோது என்னுடைய சகோதரர்களும் அம்மாவும் என்னைச் சுமந்துகொண்டு தான் பள்ளிக்கு அழைத்துச் செல்வார்கள்.
தொடர்புடைய செய்திகள்
திருமணத்திற்குப் பிறகு என் மனைவி எனக்கு முழுமையான ஆதரவு அளித்து வருகிறார். என் மனைவி எனக்குக் கடவுள் போல,” என்று உணர்ச்சிபொங்க பழனிசாமி தெரிவித்தார்.
‘பிஸ்லிங்க்’ எனும் ஒரு லாபநோக்கற்ற அமைப்பில் கடந்த 35 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் பழனிசாமி, அதில் பயிற்சி மற்றும் தளவாடங்கள் நிர்வாகியாக உள்ளார்.
உடற்குறையுள்ளவர்களிடத்தில் வேலைவாய்ப்புத் திறன்களை வளர்ப்பது அவரின் முக்கியப் பொறுப்புகளில் ஒன்று.
“விளையாட்டுகளில் அதிகம் ஈடுபட்டேன். அடுத்து என்ன என்று யோசித்தபோது எனக்கு தொண்டூழியத்தில் ஈடுபட வேண்டும் எனத் தோன்றியது. தாமான் ஜூரோங் குழுத்தொகுதியில் நான் அடித்தள தலைவராக உள்ளேன். 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் சமூகத்திற்கு உதவிக்கரம் நீட்டி வருகிறேன்,” என்று பழனிசாமி சொன்னார்.
அனைவரும் சமமே
வெளிநாடுகளில் அதிக காலத்தைப் போக்கிய ரிச்சர்ட் சியன்-மிங் குப்புசாமி, 47, உடற்குறையுள்ளவர்களுக்கு ஆதரவாளராக இருந்து வருகிறார்.
இவர் படித்தது கட்டடக்கலை. பிரிட்டனில் 11 ஆண்டுகளுக்கும் மேலாகக் கட்டடக் கலைஞராகப் பணியாற்றிய அவர், 2012ல் சிங்கப்பூர் திரும்பினார்.
இவருக்குப் பிறவியிலேயே ‘ஸ்பைனா பிஃபிடா’ எனப்படும் ஒருவகை நரம்பு குழாய் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது.
இதனால் அவரால் நடக்க முடியாது. சக்கர நாற்காலியைச் சார்ந்திருக்கும் ரிச்சர்ட் உடற்குறை இருப்பவர்கள் சாதாரண மனிதர்களாக பார்க்கப்பட வேண்டும் என்பதில் திடமாக உள்ளார்.
சிங்கப்பூரில் உடற்குறை இருப்பவர்கள், வெவ்வேறு இடங்களுக்குச் செல்ல அமைத்துத் தரப்பட்டுள்ள தடங்கலில்லாத பாதைகளை மேம்படுத்த வேண்டும் என்பது இவரது நோக்கம். ஒரு கட்டடக் கலைஞராக அவர் சிங்கப்பூரில் பெரிய திட்டங்களுக்குத் தனது பங்களிப்பை ஆற்றியுள்ளார்.
கம்போங் அட்மிரல்டி, எனேபலிங் வில்லேஜ் போன்றவை அவற்றில் அடங்கும்.
“சிங்கப்பூரில் உடற்குறையுள்ளவர்களுக்கு ஏற்புடைய வசதிகள் பல உள்ளன. ஆனால், அவை இன்னும் மேம்படுத்தப்படலாம்,” என்றார் ரிச்சர்ட்.
தற்போது மனை விற்பனை மற்றும் முதலீட்டு குழுமத் துறையில் பணிபுரியும் ரிச்சர்ட், இதுவரை மேம்படுத்தப்பட்ட தடங்கலில்லாத பாதைகள் இல்லாமல் எந்தக் கட்டடத்தையும் வடிவமைத்தது இல்லை என்றார்.