சட்டத்தின் வழி முதியோருக்கு ஆதரவு

சட்டத்தின் வழி முதியோருக்கு ஆதரவு

2 mins read
30e4f852-a09a-45c4-8984-23d1960142dd
முனீஸ்வரன் சமூக சேவை அமைப்பின் தொண்டூழியர்களும் சட்ட நிபுணர்களும். - படம்: பிரீத்தி அசோகன்
multi-img1 of 3

முனீஸ்வரன் சமூக சேவை அமைப்பு ஜூன் 15ஆம் தேதி சட்ட விழிப்புணர்வுச் சேவைகள் வழங்க லிட்டில் இந்தியாவில் உள்ள தேக்கா சந்தையில் ஏற்பாடு செய்திருந்தது.

காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

நீண்டகால அதிகாரப் பத்திரம் பற்றிய விழிப்புணர்வை முதியவர்கள் இடையே அதிகரிக்க, முனீஸ்வரன் சமூக சேவை அமைப்பு தமிழ் சமூகத்தில் முதல் முறையாக இம்முயற்சியை மேற்கொண்டுள்ளது.

50 வயதிற்கு மேற்பட்டோருக்கு இது பற்றித் தெரிவிக்கும் நோக்கில், வழக்கறிஞர்களும் முனீஸ்வரன் சமூக சேவை தொண்டூழியர்களும் இணைந்து இந்நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்தனர்.

இப்பத்திரம் மூலம் ஒருவரின் சார்பாகச் செயல்பட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களை நியமிக்கலாம்.

ஒருவருக்குச் சொந்த முடிவுகளை எடுக்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டால் இப்பத்திரம் உதவும். நியமிக்கப்படும் நபருக்கு குறைந்தது 21 வயதாக இருக்க வேண்டும்.

நியமிக்கப்பட்ட நபர், ‘தனிப்பட்ட நலன்’, ‘சொத்து, விவகாரங்கள்’ ஆகிய இரண்டு பிரிவுகளில் முடிவெடுக்கலாம்.

இது, பத்திரத்திற்குப் பதிவு செய்தவருக்கும் அவரின் அன்புக்குரியவர்களுக்கும் உறுதியையும் மன அமைதியையும் அளிக்கும்.

இரண்டாவது முறையாக நடைபெறும் இந்நிகழ்ச்சி இம்மாதம் முதல் அடுத்த 12 மாதங்களுக்கு, ஒவ்வொரு மாதமும், சிங்கப்பூரில் வெவ்வேறு இடங்களில் நடைபெறவிருக்கிறது.

முனீஸ்வரன் சமூக சேவைகளின் தலைவர் எம்.பி கணிசன், 70, “நாங்கள் பல சேவைகளை அளிக்கிறோம். இம்முயற்சி மூலம் இப்பத்திரம் பற்றி இந்திய சமூகத்தில் விழிப்புணர்வை அதிகரிக்க விரும்புகிறோம். இக்காலத்தில், மருத்துவ வளர்ச்சியால் முதியோர் நீண்ட காலத்திற்கு வாழும் சாத்தியம் அதிகரித்துள்ளது. அதனால், அவர்களுக்கு நோய்கள் ஏற்படும் சாத்தியமும் அதிகரிக்கக்கூடும். அதற்கு, இப்பத்திரம் உதவும்,” என்றார்.

இந்நிகழ்ச்சியில் டான் லெரோய் அசோசியேட்சில் பணிபுரியும் மூத்த சட்ட நிபுணர் கந்தன் ராகவேந்தரா, 39, “நாங்கள் இந்தியர்களை மையமாகக் கொண்டு இது பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கவிருக்கிறோம். எங்களிடம் பேசிய பலருக்கு இப்பத்திரம் என்னவென்றே தெரியவில்லை. எனவே, அதைப் பற்றி பேச இந்நிகழ்ச்சி ஒரு நல்ல வாய்ப்பு அளிக்கிறது.

“மக்கள் முடிவெடுக்கும் தன்மையை இழக்கும்போது, அவர்கள் சட்ட முடிவுகளை எடுக்க முடியாது. அவர்கள் வங்கிக் கணக்கைப் பயன்படுத்த முடியாது. ஆனால், நபர் ஒருவரை நியமிக்கும்போது அவர்கள் அம்முடிவுகளை எடுக்க முடியும்,” என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் தொண்டூழியராக இருக்கும் கோவிந்தா ராஜு, 50, “இது போன்ற முயற்சி இந்திய சமூகத்தில் முதல் முறையாக நடைபெறுகிறது. அரசாங்கத்தின் ஆதரவுடன் செயல்படும் இம்முயற்சியின் மூலம், உயர் நீதிமன்றத்திற்கும் மருத்துவமனைகளுக்கும் பத்திரம் அளிக்கப்படும்.

“இதனால், உடல் சார்ந்த பிரச்சினைகள் குறித்த முடிவுகளை நீங்கள் முன்கூட்டியே எடுத்துக்கொள்ளலாம். இது பணம் சம்பந்தப்பட்ட தடைகளை விலக்கும்; முடிவெடுக்க வேண்டிய மன அழுத்தத்தை குறைக்கும்,’’ என்று கூறினார். 

குறிப்புச் சொற்கள்