தமிழ் வழி மாண்டரின் மொழி கற்பிப்பதில் சாதனை நிகழ்த்தி வருகிறார் 41 வயது ஸ்ரீதேவி மணி.
கடந்த 10 ஆண்டுகளில் 1,000 மாணவர்களுக்கு மேல் மாண்டரின் மொழி கற்றுக்கொடுத்துள்ளார் மலேசியரான ஸ்ரீதேவி.
தற்போது அவரிடம் 900க்கும் அதிகமானோர் பயில்கின்றனர். இணையம் வழியாகவும் நேரடியாகவும் வாரத்தில் ஏழு நாள்களும் வகுப்புகளை நடத்துகிறார்.
தமிழரான ஸ்ரீதேவி, சீனப் பள்ளியில் தொடக்கநிலைக் கல்வியைப் பயின்றார். மாண்டரின் மொழியில் நல்ல அடித்தளத்தை அது அமைத்துக் கொடுத்தது. மலேசியாவில் பொதுவாக சீன மொழிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் கிட்டத்தட்ட 30 விழுக்காட்டினர் சீனர் அல்லாதவர்கள்.
சிறுவயதிலிருந்தே வீட்டில் தமிழிலும் பள்ளியில் மாண்டரின், மலாய் மொழிகளும் பேசிப் பழகியதால், தமிழ், மாண்டரின், மலாய் மொழிகளிலும் அவரது திறன் இயல்பாக வளர்ந்தது. சீன கம்பத்தில் வளர்ந்ததால் சீன மொழிகளான மாண்டரினும் ஹொக்கியன் மொழியும் எளிதாகப் பேசப் பழகினார்.
ஸ்ரீதேவி மாண்டரின் மொழியில் அதிக மதிப்பெண்கள் வாங்காவிட்டாலும், அந்த மொழியில் அவரால் சரளமாகப் பேச முடிந்ததால் அவருக்கு இயல்பாகவே அம்மொழியில் ஆர்வம் ஏற்பட்டது.
பல மொழிகளில் பேச முடிந்தபோதும் அவருக்கு ஆங்கிலம் சவாலாகவே இருந்தது. அது அவரது தன்னம்பிக்கையைக் குறைத்தது. தன்னை மேம்படுத்திக்கொள்ள சீன மொழியில் தன் திறனை வளர்க்க நினைத்தார். சீனர் அல்லாதவர்களுக்கான சீனாவின் மொழித் திறன் சான்றிதழான ‘ஹன்யு ஷுயிபிங் காவோஷி’ (HSK) என்ற சீன பாடநெறியைப் பயின்றார்.
17 வயதில் மலேசிய உயர் கல்வி சான்றிதழ் (STPM) பெற்ற ஸ்ரீதேவி, பாலர் பள்ளி ஆசிரியையாகப் பணியைத் தொடங்கினார்.
தொடர்புடைய செய்திகள்
ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் பாலர் பள்ளி ஆசிரியையாகப் பணிபுரிந்தார். அப்போது சீன மொழி ஆசிரியர் வேலையை விட்டுச் செல்ல, சீன மொழி கற்பிக்கும் பொறுப்பை தலைமை ஆசிரியர் ஸ்ரீதேவியிடம் ஒப்படைத்தார். சீன மொழி கற்பித்த அந்த முதல் அனுபவம் ஸ்ரீதேவியின் நம்பிக்கைக்கு உரம் சேர்த்தது.
ஆசிரியர் தொழிலில் ஆர்வம் இருந்தாலும், சம்பளம் மிகக் குறைவாக இருந்ததால் வங்கிப் பணியில் சேர்ந்தார். அவரது மாண்டரின் மொழிப் புலமை அவருக்கு எளிதாக வங்கியில் வேலை வாய்ப்பைப் பெற்றுத் தந்தது.
எனினும் ஆசிரியையாக வேண்டும் என்ற ஆர்வம் வளர்ந்துகொண்டே இருந்தது. வேலை பார்த்துக்கொண்டே, பாலர் பள்ளிக் கல்வித்துறையில் பட்டயப் படிப்பை முடித்தார். தானே பாலர் பள்ளியைத் தொடங்க முடிவுசெய்தார்.
பத்து ஆண்டுகள் வரை பார்த்த வங்கி வேலை சுய தொழிலை நிர்வகித்து, நடத்தும் அறிவையும் நம்பிக்கையையும் அவருக்குத் தந்தன.
ஆனால், அவர் பள்ளியைத் தொடங்கியபோதுதான் கொவிட்-19 பெருந்தொற்று பரவியது. பள்ளிகள் மூடப்பட்டன.
எனினும் நம்பிக்கை இழக்காத, ஸ்ரீதேவி சீன மொழியை தமிழ் வழியாகவும் தமிழை சீன மொழி வழியாகவும் விளக்கும், காணொளிகளை ‘டிக்டாக்’ சமூக ஊடகத் தளத்தில் பதிவேற்றத் தொடங்கினார்.
அக்காணொளிகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. அதன் வழியே ஸ்ரீதேவிக்கு அறிமுகமான சிங்கப்பூரர் ஒருவர், அவரை இணையம் வழி சீனமொழி வகுப்புகளை நடத்த ஊக்குவித்தார்.
இணையம் வழியாக வகுப்புகள் நடத்துவதில் விருப்பமில்லாதபோதும், வேலை இல்லாத சூழ்நிலையில் வாழ்வாதாரத்தை வலுப்படுத்த இணையம்வழி வகுப்புகளை நடத்த முடிவு செய்தார்.
அந்த வகுப்புகள் பலரது கவனத்தையும் பெற்றன.
தற்போது மலேசியாவிலிருந்தும், சிங்கப்பூரிலிருந்தும் மாணவர்கள் பலர் அவரிடம் தமிழ் வழியாக சீன மொழியைக் கற்று வருகின்றனர்.
ஸ்ரீதேவியின் ‘டிக்டாக்’, ‘இன்ஸ்டகிராம்’ உள்ளிட்ட சமூக ஊடகங்களில் 70,000க்கும் மேலானவர்கள் தொடர்ந்து வருகின்றனர்.
தமிழ் தெரிந்தால் எளிதாக சீன மொழியைக் கற்கலாம் என்பது ஸ்ரீதேவியின் அனுபவம்.
“பிற மொழியைக் கற்க வேண்டுமானால் முதலில் நம் மொழியை நன்கு அறிந்து கற்க வேண்டும். ஒரு மொழியில் சிறக்க, அந்த மொழியைப் பயன்படுத்த வேண்டும். பேச வேண்டும். வகுப்பறைக்கு வெளியே நம்பிக்கையுடன் பயன்படுத்த வேண்டும்,” என்றார் ஸ்ரீதேவி. அவர் தற்போது ஆங்கில மொழியையும் தன்னம்பிக்கையுடன் புழங்குகிறார்.