தேசிய சிங்கப்பூர் கபடிக் கழகம் சிங்கப்பூரின் முதல் அனைத்துலகப் பதக்கத்தை வென்றுள்ளது.
பாலித் தீவின் லாட்டரிங் உள்ளரங்கில் ஜூன் 16ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் திமோர் லெஸ்டி அணியைத் தோற்கடித்து முதல் வெண்கலப் பதக்கத்தைச் சிங்கப்பூர் வென்றது.
‘கோனி படுங் விளையாட்டு சுற்றுலா 2024’ என்ற இந்தோனீசியாவின் அனைத்துலக பொது கபடிப் போட்டியில் (KONI Badung Sports Tourism 2024 Indonesia Open International Kabaddi Championship) சிங்கப்பூர், மலேசியா, இந்தோனீசியா, தாய்லாந்து, திமோர் லெஸ்டி ஆகிய நாடுகளைச் சேர்ந்த அணிகள் போட்டியிட்டன.
ஜூன் 14ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை பாலித் தீவில் நடந்த அந்தப் போட்டியில் சிங்கப்பூரின் தேசிய அணியும் பங்கேற்றது.
பதக்கம் வென்ற திரு அன்பு நவீனின் தலைமையிலான ஐவர் குழுவின் ஆட்டக்காரர்களான யதுகுலன் ஆதித்யன், குவெக் கா செங், ராகுல் தேவ், ஷேக் தமீம், கண்ணன் கோகுல், கோலின் பூன் உள்ளிட்ட எழுவரும் 25 வயதிற்குக் குறைந்தவர்கள்.
போட்டியில் பங்கேற்ற நாடுகளில் மிகவும் குறைந்த வயதுடைய விளையாட்டாளர்களைக் கொண்ட நாடு சிங்கப்பூர்.
அந்த முதல் பல பாணி அனைத்துலகப் போட்டியில், தேசிய பாணி அல்லது எழுவர் குழு, ஐவர் குழு, மூவர் குழு ஆகிய மூன்று பாணி போட்டிகள் இடம்பெற்றன. ஐவர் குழு, மூவர் குழு போட்டிகள் அனைத்துலகப் போட்டியில் இடம்பெற்றது இதுவே முதல் முறை.
ஆசிய கபடி சம்மேளனம், அனைத்துலக கபடி சம்மேளனம் ஆகியவற்றின் அங்கீகாரத்தைப் பெற்ற இந்த விருது, சிங்கப்பூர் அணிக்கு உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
“இந்த வெற்றி எங்கள் பயணத்தில் ஒரு படிக்கல். மேலும் பல வெற்றிகளைப் பெற இது ஓர் உந்துதல். தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கபடிப் போட்டியைச் சேர்ப்பதற்கு இதுபோன்ற வெற்றிகள் பெரும் பங்கை ஆற்றும்,” என்றார் சிங்கப்பூர் கபடிக் கழகத்தின் தலைவர் திரு சிவா.
“அனுபவம் குறைந்த அணிகளில் ஒன்றான சிங்கப்பூர், சிறந்த ஆட்டத்தை வழங்கியது. இதில் பதக்கம் வென்றதுடன், மிகவும் அனுபவம் வாய்ந்த, திறமையான அணிகளுடன் போட்டியிட்டது சிறந்த சாதனை,” என்று கூறினார் சிங்கப்பூர் தேசிய கபடி அணியின் தலைவரான விஷ்ணுவர்த்தன் விஷ்வ தேவா.
பகுதி நேர விளையாட்டாளர்களின் அணிக்குக் கபடிக் கழகத்தின் (மத்திய சிங்கப்பூர்) தொண்டூழியர்கள் சிங்கப்பூர் குழுக்களுக்கு ஆதரவு அளித்தனர். இந்தியாவின் தேசிய பயிற்சி முகாமிற்குத் தகுதி பெற்ற சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியரான திரு சுந்தர் அண்ணாதுரை, குழுக்களுக்கு கூடுதல் ஆதரவை வழங்கினார்.
“எனது அறிவையும் திறனையும் குழுவினருக்கு என்னால் முடிந்தவரையில் பயிற்றுவித்தேன். பெரும்பாலானவர்கள் வேலை பார்ப்பவர்கள் அல்லது படிப்பவர்கள். அவர்களால் வார இறுதி நாள்களில் மட்டுமே பயிற்சி பெற முடியும். கிடைத்த குறைந்த நேரத்தில், சிங்கப்பூர் பயிற்சியாளர்களும் நானும் எங்களால் முடிந்ததைச் செய்துள்ளோம்,” என்றார் திரு சுந்தர் அண்ணாதுரை.