உலகம் முழுவதும் ஜூன் 21ஆம் தேதி யோகா தினமாகத் கொண்டாடப்படுகின்றது. அதனை ஒட்டி, சிங்கப்பூருக்கான இந்தியத் தூதரகம் ஒரு யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது.
கரையோரப் பூந்தோட்டங்களின் வாட்டர்ஃபிரன்ட் பிளாசாவில் காலை 8 மணி முதல் 9 மணிவரை இந்நிகழ்ச்சி நடைபெற்றது. மழையையும் பொருட்படுத்தாது 200க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் அதில் கலந்துகொண்டனர்.
தொடர்பு, தகவல் மற்றும் சுகாதார துணை அமைச்சர் ரஹாயு மஹ்ஸாம் நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக வருகை தந்தார்.
“பத்தாவது ஆண்டாக அனைத்துலக யோகா தினம் கொண்டாடப்பட்டாலும் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே யோகக் கலையானது இந்தியாவில் தோன்றிவிட்டது. இன்று, யோகா பல வழிகளில் நம்மை ஒன்றிணைத்து வருகிறது. இன்றைய நிகழ்ச்சியில் பலதரப்பினரும் பங்கேற்றுள்ளது மகிழ்ச்சி தருகிறது,” என்றார் திருவாட்டி ரஹாயு.
கரையோரப் பூந்தோட்டங்களின் தலைமை நிர்வாக அதிகாரி பிளீஸ் லோவும் சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் டாக்டர் ஷில்பக் அம்புலேயும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
“10வது அனைத்துலக யோகா தினத்தை ‘தனக்கும் சமூகத்திற்கும் யோகா’ என்ற கருப்பொருளுடன் கொண்டாடும்போது, நாம் ஒற்றுமையைக் கொண்டாடுகிறோம். சிங்கப்பூர் மக்கள் உற்சாகத்துடன் யோகாவை ஏற்றுக்கொண்டதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை, உடல், மனநலத்திற்கான இந்த நாளைக் கொண்டாட அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர்,” என்றார் திரு அம்புலே.
யோகக்கலையானது தற்போது புவியியல், கலாசார எல்லைகளைத் தாண்டி உலக அளவில் கொண்டாடப்படும் ஒரு கலையாக மாறியுள்ளது.
எண்ணற்ற நன்மைகளைத் தரும் யோகா, உடல், மனம் மற்றும் ஆன்மாவை ஒருங்கிணைக்கிறது. முழுமையான நலத்தையும் நல்வாழ்வையும் ஊக்குவிக்கிறது.
யோகப் பயிற்சி உடலுக்கு நெகிழ்வுத்தன்மையை வழங்கி, உடல்வலுவை மேம்படுத்துகிறது. அத்துடன், மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் குறைக்கின்றது.
நிகழ்ச்சியில் வியாச யோகா நிறுவனத்தைச் சேர்ந்த பயிற்றுநர்கள், பங்கேற்பாளர்களுக்கு பல்வேறு ஆசனங்கள், பிராணாயாம நுட்பங்களைக் கற்றுக்கொடுத்தனர்.
இந்நிகழ்ச்சியில் பங்கெடுத்த, ஆஸ்திரேலியாவில் படிக்கும் ஷார்மினி விஷ்ணு, 25, “மழை பெய்தாலும் நிறைய மக்கள் இந்நிகழ்சியில் பங்கெடுத்தனர். யோகக்கலைக்கு மக்கள் ஆதரவளித்து வருவது மகிழ்ச்சி தருகிறது,” என்று சொன்னார்.
மற்றொரு பங்கேற்பாளரான, சிட்டிபேங்க் மூத்த துணைத் தலைவர் கலைவாணி கண்ணன், 54, “இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டதைப் பெருமிதமாக உணர்கிறேன். யோகக்கலை உலகம் முழுவதும் பரவி, புகழ் பெற்று, முத்திரை பதித்துள்ளதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.” என்றார்.