தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சமூகத்தைச் சென்றடையும் உதவித் திட்டங்களுக்கு கூடுதல் மாற்றங்கள்

3 mins read
4dd34f51-49c0-4226-8432-2960d2ae0fb0
சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் ஏற்பாடு செய்யும் திட்டங்களில் ஒன்று. - படம்: யாயாசான் மெண்டாக்கி, சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்
multi-img1 of 2

சமுதாயத்தில் எழும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முனைவது, சமூகத்தை தூக்கி நிறுத்துவதற்கான வழிகள், உரையாடல்கள், கல்வியறிவு பகிர்தல் ஆகியவற்றின் மூலம் சமூகத்தினரின் ஈடுபாட்டை அதிகரிப்பது போன்ற காரணங்களுக்காக பல ஆண்டுகளுக்கு முன்னர் சமூகத் தலைவர்கள் மன்றம் தொடங்கப்பட்டது.

உதவி தேவைப்படும் குடும்பங்களுக்கு கல்வி, இளையர்கள், குடும்பம், வேலைவாய்ப்பு போன்றவற்றின் மூலம் உதவிக்கரம் நீட்டும் விதமாக மன்றம் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

மன்றத்தின் திட்டங்கள் அனைத்துக்கும் மலாய்/முஸ்லிம் சமூக மேம்பாட்டு நிதி, நிதியுதவி வழங்கி வருகிறது. மன்றத்தில் ஈடுபடும் மலாய்/முஸ்லிம் நிறுவனங்கள் சமூகத்திற்குக் கூடுதல் உதவி செய்யும் வகையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கு முன்பு சமூகத் தலைவர்கள் மன்றத்தின் நிதியுதவி திட்டம், அங்கீகரிக்கப்பட்ட தொகையில் 60 விழுக்காடாக இருந்தது. அது இப்போது 80 விழுக்காட்டிற்கு உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், மெண்டாக்கி தொடங்கிவைக்கும் அனைத்துத் திட்டங்களுக்கும் மன்றம் முழு நிதியாதரவு வழங்கும். இந்த வரவேற்கத்தக்க மாற்றங்கள் மூலம் சமூகத்தைச் சென்றடையும் உதவி அதிகமாகும் என நம்பப்படுகிறது.

சங்கங்கள் பதிவாளர், உத்தரவாதத்திற்கு உட்பட்டு பொறுப்பு வரையறுக்கப்பட்ட நிறுவனங்கள், தொண்டு அறக்கட்டளைகள், சமூகத் தொழில் நிறுவனங்களுக்கான சிங்கப்பூர் நிலையத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ள சமூகத் தொழில் நிறுவனங்கள் ஆகிய பிரிவுகளில் அடங்கும் லாப நோக்கமற்ற அமைப்புகள் இதற்குப் பதிவுசெய்து மன்றத்தின் நிதியுதவியைப் பெறலாம்.

கடந்த 17 ஆண்டுகளாக ஐக்கிய இந்திய முஸ்லிம் சங்கம், சமூகத் தலைவர்கள் மன்றத்தின் பங்காளியாக இருந்து வருகிறது. அது வழிநடத்தும் திட்டங்களில் ஏழு திட்டங்கள், சமூகத் தலைவர்கள் மன்றம் மூலம் நிதியளிக்கப்பட்டவை.

தொண்டூழிய சமூகநல நிறுவனமாக செயல்பட்டுவரும் ஐக்கிய இந்திய முஸ்லிம் சங்கம், ஒன்றுபட்ட சிங்கப்பூர் சமுதாயத்தை உருவாக்குவதற்கு அப்பாற்பட்டு, பின்தங்கிய குடும்பங்களுக்கும் உதவிக்கரம் நீட்டி வருகிறது.

சமூகத் தலைவர்கள் மன்றம் அளித்த நிதியுதவி மூலம் ஐக்கிய இந்திய முஸ்லிம் சங்கம் ஈராண்டுகளுக்கு முன்னர் ‘டால்ஃபின்ஸ் பிஃபிரண்டர்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது. எளிதில் பாதிப்புக்கு ஆளாகக்கூடிய இளையர்களுக்கு அதன் மூலம் கூடுதல் ஆதரவு வழங்கப்படும்.

“இப்புதிய மாற்றங்கள் எங்களுக்குப் பேருதவியாக இருக்கும். நாங்கள் ஏற்பாடு செய்யும் உதவித் திட்டங்களுக்கு அதிக பணம் செலவிடப்படுவதால் இந்த மாற்றத்தின் மூலம் எங்களால் கூடுதலான திட்டங்களை அறிமுகப்படுத்த முடியும்,” என்று ஐக்கிய இந்திய முஸ்லிம் சங்கத்தின் தலைமை நிர்வாகி ஹாஜா மைதீன் கூறினார்.

அதுபோல சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்கும், சமூகத் தலைவர்கள் மன்றமும் பங்காளியாக இருந்து வருகிறது. அது வழங்கும் திட்டங்களில் மூன்று திட்டங்கள் மன்றம் மூலம் நிதியளிக்கப்பட்டவை.

முதியவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்குவது, தனியாக வசிக்கும் முதியவர்களுடன் நட்புறவு வைத்துக்கொள்வது, பெண்கள் ஆங்கில மொழி கற்கவும் மின்னிலக்கத் திறன்களை வளர்க்க உதவுவது என பல்வேறு வகைகளில் சமூகத்தினருக்கு கடையநல்லூர் முஸ்லிம் லீக் உதவி வருகிறது.

“இதை வெறும் வசதி குறைந்த குடும்பங்களுக்கு வழங்கும் உதவி திட்டங்களாக பார்க்கக்கூடாது. சமூகத்தில் இருக்கும் அனைவரும் பயன்பெற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். சிங்கப்பூரர்களுக்கு அப்பாற்பட்டு நாங்கள் ஏற்பாடு செய்யும் திட்டங்கள் மற்றவர்களையும் சென்றடைகின்றன,” என்று சங்கத்தின் தலைவர் ராஜா முஹம்மது, 60, சொன்னார்.

சமூகத் தலைவர்கள் மன்றத்தின் பங்காளியாக சேர இம்மாதம் இறுதி வரை விண்ணப்பிக்கலாம்.

குறிப்புச் சொற்கள்