நாய்களுக்காகத் தீவைக் கடக்கும் சகோதரிகள்
வீட்டில் பூனைகளையும், வெளியே நாய்களையும் வளர்க்கின்றனர் சகோதரிகள் சபிதா, ஷனிதா கரப்பன்.
பாசிர் ரிஸ்ஸிலிருந்து சுங்கை தெங்காவில் இருக்கும் ‘எஸ்ஓஎஸ்டி’ நாய்க் காப்பகத்திற்கு 2016லிருந்து வாரந்தோறும் அவர்கள் இரண்டு மணி நேரப் பயணம் செய்துவந்துள்ளனர். அதற்கான வெகுமதி, செல்ல நாய்களின் அன்பு முத்தங்களும் வாலாட்டுதலும்.
நாய்களைத் தாமாகத் தத்தெடுக்க அவர்கள் ஆசைப்பட்டாலும், தத்தெடுக்க ஏதுவான சூழல் அமையவில்லை.
“நாய் பராமரிப்பு முழுக் குடும்பத்தின் பொறுப்பாகும்; அப்பொறுப்பை ஏற்க எங்கள் பெற்றோர் தயாராக இல்லை. எங்கள் பள்ளி, வேலையினால் எங்களாலும் போதுமான நேரம் வீட்டில் நாயோடு செலவிட முடியவில்லை,” என்றார் ஷனிதா, 28.
அதனால் நாய்களைத் தம் சொந்த செல்லப்பிராணிகள் போல் பராமரிக்க ‘எஸ்ஓஎஸ்டி’ வாய்ப்பு வழங்கியதும் அதை இரு கரங்களால் அவர்கள் ஏற்றனர்.
“ஒவ்வொரு சனிக்கிழமையும் நாய்களை நடக்க அழைத்துச் செல்வதே எனக்கு அந்த வாரத்தில் ஆகப் பிடித்த விஷயம்,” என்றார் 35 வயது சபிதா.
இன்று அவர் நாய்களை நடக்க அழைத்துச் செல்வதோடு, தொண்டூழியர்களை நிர்வகிக்கும் பொறுப்பையும் ஏற்றுள்ளார். புதிய தொண்டூழியர்களுக்கு அவர் நாய்ப் பராமரிப்பில் பயிற்சியும் வழங்குகிறார்.
சபிதாவின் அழைப்பை ஏற்று மாணவத் தொண்டூழியராகச் சேர்ந்த தங்கை ஷனிதா, சமீபத்தில் அங்கேயே முழுநேரம் பணியாற்றவும் தொடங்கியுள்ளார். இன்று ஷனிதா ‘எஸ்ஓஎஸ்டி’யின் நிதி திரட்டுக்கும் பொது விழிப்புணர்வு முயற்சிகளுக்கும் தலைமை தாங்குகிறார்.
தொடர்புடைய செய்திகள்
சாலை நாய்களையும் நிராகரிக்கப்பட்ட நாய்களையும் காப்பாற்றி, பேணி, அவற்றுக்கு மறு இல்லம் கண்டுபிடித்துவரும் ‘எஸ்ஓஎஸ்டி’யின் முயற்சிகளுக்கு அவர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். தற்போது ஏறக்குறைய 300 நாய்கள் ‘எஸ்ஓஎஸ்டி’யின் பராமரிப்பில் உள்ளன.
பூனை நலச் சமூகத்திலிருந்து ஒரு பூனையையும், வடிகாலில் தன் தாயாரால் கைவிடப்பட்ட மற்றொரு பூனையையும் தத்தெடுத்து வளர்க்கின்றனர் இச்சகோதரிகள்.
‘சிங்கப்பூரில் விலங்குசார்ந்த பலவித துறைகள் உள்ளன’
ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் உயிரியல் மருத்துவ அறிவியல் பயிலும் 19 வயது ஹரிஹரன் பாரதி, ‘அனிமல்ஸ் அண்ட் அஸ் அகேடமி’யில் கடந்த ஐந்து மாதங்களாகப் பயிற்சி பெற்றுவந்துள்ளார்.
அவர் அங்குள்ள கால்நடை மருத்துவர்களிடமிருந்து அரிய விஷயங்களைக் கற்பதோடு சிறுவர்களுக்கும் விலங்குகளைப் பற்றிய சுவையான பயிலரங்குகளையும் நடத்துகிறார்.
“விலங்குகளுடனும் சிறுவர்களுடனும் பணியாற்றும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. இந்த அனுபவம் எனக்குப் புதிய கதவுகளைத் திறந்துள்ளது. சிங்கப்பூரில் விலங்குசார்ந்த பலவிதத் துறைகள் இருப்பதை அறிந்துகொண்டேன்,” என்றார் ஹரிஹரன்.
‘கூடுதல் தொண்டூழியர்கள் தேவை’
மார்ச் மாதத்தில் ‘எஸ்பிசிஏ’வில் தொண்டூழியராகச் சேர்ந்த 30 வயது சிவனேஷ்வரி சிங், நாய்க் காப்பகத்தைச் சுத்தம் செய்தல், வாடகை வீடுகளில் வளரும் செல்லப்பிராணிகளைச் சுகாதாரச் சோதனைகளுக்குப் பதிவுசெய்தல் போன்ற வகைகளில் சேவையாற்றி வந்துள்ளார்.
“வாடகை வீடுகளில் தங்குவோர் பலரும் தாராள மனம் படைத்து நிராகரிக்கப்பட்ட பல செல்லப்பிராணிகளைப் பார்த்துக்கொள்வர். ஆனால் அவர்களுக்குப் போதிய பணவசதி இல்லை என்பதால் ‘எஸ்பிசிஏ’ உதவுகிறது,” என்றார் சிவனேஷ்வரி.
“கால்நடை மருந்தகங்களிலும் காப்பகங்களிலும் சேவையாற்ற கூடுதலானோர் முன்வரவேண்டும்,” என்றார் அவர்.
தனிநபராக சாலை நாய்களுக்கு உதவும் சமாந்தா
ஒவ்வொரு நாளும் 40 உணவுப் பொட்டலங்களைத் தயாரித்து இரவில் தெம்பனிஸ், பாசிர் ரிஸ், சிலேத்தார், மாண்டாய் ஆகிய இடங்களில் உள்ள சாலை நாய்களுக்கு உணவு வழங்கிவருகிறார் ‘நம் சமூக நாய்களின் நலம்’ எனும் அறநிறுவனத்தின் நிறுவனர் சமாந்தா துரை.
அங்கிருந்த பண்ணைகள் இடம்பெயர்ந்ததும் அவை காத்த நாய்கள் அங்கேயே விட்டுவிடப்பட்டன என்றார் அவர். அவை குப்பைத்தொட்டிகளில் உணவுக்காகத் தேடுவதைக் காணும்போது அவர் வேதனையடைந்தார்.
“ஒரு வாரத்திற்கு ஒரு முறை நண்பர்கள் உதவுகின்றனர். இருப்பினும், எனக்குக் கூடுதல் உதவி தேவை,” என்றார் சமாந்தா. “Welfare For Our SG Community Dogs” என்ற ஃபேஸ்புக் குழுவில் (https://www.facebook.com/groups/278239878411429/) மக்கள் இணைந்து அவருக்கு உதவலாம்.
விலங்குத் துன்புறுத்தல் சம்பவங்களுக்கு எதிராகக் கூடுதல் நடவடிக்கைகள் தேவை என்றும் அவர் கூறினார்.

