தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திகில், மர்மம், செயற்கை நுண்ணறிவை அறிமுகப்படுத்திய ‘விடை’

3 mins read
386ab2d9-f64f-4db7-9da6-add65cccabe4
‘எஸ்கேப் ரூம்’ என்ற புதிர் அறை விளையாட்டை மையமாக வைத்து உருவான உள்ளூர் திகில்-மர்ம திரைப்படம் ‘விடை’ , கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 30) கார்னிவல் திரையரங்கில் முதன்முறையாக திரைகண்டது.  - படம்: ஷஃப்பல் ஸ்டூடியோஸ்

புதிர் அறை என்றும் அழைக்கப்படும் ‘எஸ்கேப் ரூம்’ என்பது பலரிடையே ஒரு பிரபல விளையாட்டாகும். பெரும்பாலும் ‘எஸ்கேப் ரூம்’ விளையாட்டுகளில் உள்ள தடயங்கள் அல்லது புதிர்களை தீர்த்து குறிப்பிட்ட நேரத்துக்குள் அந்த அறையிலிருந்து விளையாட்டாளர்கள் வெளியாக வேண்டும். 

‘எஸ்கேப் ரூம்’ என்ற  புதிர் அறை விளையாட்டை மையமாக வைத்து உருவான உள்ளூர் திகில்-மர்ம திரைப்படம் ‘விடை’ ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 30) கார்னிவல் திரையரங்கில் முதன் முறையாக அரங்கேறியது. கொவிட் பெருந்தொற்றுக்கு முன் எடுக்கப்பட்ட இந்த படம் தற்போது நான்கு ஆண்டுகளுக்கு பிறகு திரையரங்கில் ஒளிபரப்பான அனுபவத்தைப் பற்றி பகிர்ந்தார் இயக்குநரும் நடிகருமான ரிஷி வர்மன், 26. 

“நானும் என் நண்பர்களும் சேர்ந்து ஒரு ‘எஸ்கேப் ரூம்’ புதிர் அறை விளையாட்டில் கலந்து கொண்டோம். இதை ஒட்டி ஏன் ஒரு திரைப்படத்தை எடுக்க முடியாது என்ற எண்ணத்தில் பிறந்த யோசனை தான் ‘விடை’.” 

சிங்கப்பூர், மலேசியா, இந்தியா, லண்டன் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து கலைஞர்கள் மற்றும் திரைப்படக் குழு உறுப்பினர்கள்  ஒன்றிணைந்தனர். வெறும் 30 நாட்களில் இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டது ஒரு சிறப்பு எனக் கருதுகிறார் ரிஷி. 

“திரைப்படத்தில் நடித்த ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட திறமைகள் இருந்தன. குறுகிய காலத்தில் அந்த எதிர்பார்புகளை எப்படி நிர்வகித்து, அவர்களுடைய நடிப்பு பாணிகளை கூர்ந்து கவனித்து அதை திரையில் காண்பிப்பது என்பது பற்றி நான் அதிகம் கற்றுக்கொண்டேன்.” 

தற்போதைய காலத்திற்கு உகந்த தொழில்நுட்பத்தின் அறிமுகத்தால் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்த திரைப்படத்தின் கதையை மாற்றியமைக்க நேரிட்டது என்று கூறினார் துணை திரைக்கதை எழுத்தாளரும் நடிகருமான கீர்த்தனா குமரேசன், 25. 

“திகில், மர்மம் போன்ற கருப்பொருள்களை தாண்டி செயற்கை நுண்ணறிவு, மருத்துவ அறிவியல், தொழில்நுட்பம் போன்றவற்றையும் இந்த திரைப்படம் மேலும் ஆராய்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கதையை எவ்வாறு தொடர்ந்து இன்றைய காலத்துக்கு மாற்றியமைத்து பொருந்த எழுதுவது என்பது சுவாரசியமான சவாலாக இருந்தது,” என்றார் கீர்த்தனா. 

திகில், மர்மம் கொண்ட உள்ளூர் தமிழ்த் திரைப்படங்களைக் காண்பது அரிது என்பதால் ‘விடை’ திரைப்படம் சிங்கப்பூர் திரைப்பட துறையில் ஒரு வித்தியாசமான முயற்சி எனக் கருதுகிறார் பார்வையாளர் சிவா மகேந்திரன், 32.  

அவரைப் போல திரைப்படத்தை ரசித்த ஐஸ்வரியா, 37, இது இளையர்களின் துணிச்சலான ஒரு முயற்சி எனக் கருதினார். 

படத்தின் தொடக்கம் சற்று மெதுவாக இருப்பினும், இறுதியில் முற்றிலும் மாறுபட்ட திருப்பம் அவரை மிகவும் கவர்ந்தது, என்றார் ரேணுகா. மேலும், பரவலாகப் பேசப்பட்டது ஒரு உளவியல் கருத்தை இந்தப் படம் நன்று கையாண்டது, என்றார். 

தற்போது சமூகத்தில் மக்களிடமிருந்து மிகுந்த ஆதரவு கிடைத்துள்ளது என்றார் கீர்த்தனா. இருப்பினும், உள்ளூர் திரைப்படத் துறையின் வளர்ச்சிக்கு நிறைய இடம் உள்ளது, எனக் கருதுகிறார்.  

“கலைஞர்களுக்கும் எங்கள் படைப்புகளுக்கும்  தகுந்த ஆதரவு அளிக்க மக்கள் முன்வர வேண்டும். அது எங்களுக்கு ஒரு உந்துதலாக அமையும்.” 

‘விடை’ ‘ஷஃப்பல் ஸ்டூடியோஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் இரண்டாவது திரைப்படம். அதன் நிறுவனருமான ரிஷி, மக்கள் ஆதரவின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.  

“இத்துறைக்கு கால் எடுத்து வைக்கும் இளையர்கள் அடிப்படை திறன்களை நன்கு அறிய வேண்டும். திறந்த மனது, சிறந்த கற்றல் ஆர்வம் - உள்ளூர் திரைப்படத் துறையில் சிறந்து விளங்க அதுவே விடை,” என்கிறார் ரிஷி.

குறிப்புச் சொற்கள்