அறுசுவை உணவகத்தில் அன்புக்குரியவர்கள் சூழ, ஐம்பதாவது பிறந்தநாளைக் கொண்டாட எண்ணினார் உணவு வர்த்தகரும் சமூகத் தலைவருமான ஜாய்ஸ் கிங்ஸ்லி.
இருந்தபோதும், பிறருக்கு நன்மை தரும் முயற்சி ஒன்றை மேற்கொள்ள எண்ணி, ஐம்பது பெண்கள் சேர்ந்து ஆடும் காணொளிகளைத் தயாரிக்க இவர் முடிவெடுத்தார்.
“முற்றிலும் புதிய முயற்சியாக என் நடனக் காணொளி அமைந்துள்ளது. வழக்கமாக நான் ஆடுவதில்லை, ஆடவும் தயங்குவேன். ஆனால், மனஉறுதி என்பது எந்தத் தடையையும் உடைக்க வல்லது எனக் காண்பிக்க விரும்பினேன்,” என்றார் திருவாட்டி ஜாய்ஸ்.
சேலைகளின் அழகில் மெய்மறந்து, அதன் அழகைப் பல்வேறு நிகழ்ச்சிகளில் வெளிப்படுத்த விரும்பும் இவர், சேலைகளையும் இந்தக் காணொளியில் இடம்பெறச் செய்ததாகக் குறிப்பிட்டார்.
தம் தந்தை தொடங்கி வைத்த எஸ்ஐஎஸ் பிரிமியம் மீட்ஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்தி வரும் திருவாட்டி ஜாய்ஸ், தற்போது மூன்று நிறுவனங்களை நடத்தி வருகிறார். லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மரபுடைமைச் சங்கத்தின் மகளிர் பிரிவின் தலைவராகச் செயல்பட்ட இவர், தற்போது அதன் ஆலோசகராக உள்ளார். பீஷான் - தோ பாயா (தோ பாயோ வெஸ்ட்- தாம்சன்) அடித்தள செயற்குழு உறுப்பினராகவும் இவர் செயலாற்றி வருகிறார்.
காலிலிருந்து ரத்தத்தை இதயத்திற்கு மீண்டும் திரும்பாதபடிச் செய்யும் ‘வெனஸ் இன்சஃபிசியன்சி’ என்ற ரத்த நாள பாதிப்பு சில ஆண்டுகளுக்குமுன் திருவாட்டி ஜாய்சுக்கு ஏற்படத் தொடங்கியது. இதனால் நடமாட்டம் பாதிக்கப்பட்டிருந்தாலும் தம் பேரப்பிள்ளையுடன் ஓடி விளையாடவேண்டும் என்ற உறுதியுடன் செயல்பட்டார்.
“இதற்காக நான் என் வாழ்க்கை முறையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தினேன். அரிசி, சர்க்கரை உணவுகளை முற்றிலும் தவிர்த்து, அடிக்கடி உடற்பயிற்சி செய்துவந்தேன். அவையெல்லாம் கடினமாக இருந்தபோதும் உண்மையிலேயே அவற்றால் என் உடல்நலம் மேம்பட்டதைக் கண்டேன்,” என்றார் இவர்.
இந்தக் காணொளிக்காக நடன இயக்குநரைப் பணியில் அமர்த்திய திருவாட்டி ஜாய்ஸ், தமது காணொளியில் ஊக்கந்தரும் பாடல்கள் இடம்பெறச் செய்ததாகக் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இந்தப் பயணத்தில் தமக்குப் பேராதரவு அளித்த தம் கணவர் ஜகநாதன் கிங்ஸ்லி, தம் இரண்டு மகள்களான சில்வியா ஸ்ருதி, 29, சேண்ட்ரா, 24, இல்ல உதவியாளர் ஆகியோருக்கு இவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
“பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா, நட்பார்ந்த முறையில் எனக்கு ஊக்கத்தையும் வழிகாட்டுதலையும் அளித்திருக்கிறார். அதே போல, முன்னாள் தூதர் திரு கே கேசவபாணியும் அவரது துணைவியார் பத்மினி கேசவபாணியும் மிகுந்த அக்கறையுடன், அன்பு வார்த்தைகளைப் பொழிந்தனர்,” என்று திருவாட்டி ஜாய்ஸ் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
இக்காணொளியைத் தொடர்ந்து, பெண்களிடம் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை ஊக்குவிப்பதற்கான திட்டங்களை இவர் தீட்டி வருகிறார்.
“மனவுறுதியும் ஆதரவும் இருந்தால் எதுவும் சாத்தியம் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் எனது அடுத்த திட்டம் நடப்பிற்கு வரவுள்ளது,” என்கிறார் திருவாட்டி ஜாய்ஸ்.

