இன நல்லிணக்‌கத்திற்கான அர்ப்பணிப்பு

இன நல்லிணக்‌கத்திற்கான அர்ப்பணிப்பு

3 mins read
8b7620d4-ee36-4dfb-8e58-bf733ad74321
ஸெங்குவா ஹார்மனி வட்டத்தின் தலைவரான திருவாட்டி செல்வராணி பன்னீர்செல்வம், 54. - படம்: செல்வராணி பன்னீர்செல்வம்
multi-img1 of 3

சமூக சேவையுடனும் இன நல்லிணக்கத்துடனும் ஒன்றுகலந்ததாக ஸெங்குவா வட்டாரத்தில் திருவாட்டி ராணி என்ற பெயர் அமைந்துவிட்டது.

54 வயதான திருவாட்டி செல்வராணி பன்னீர்செல்வம், தொடர்ந்து 25 ஆண்டுகளாக சிங்கப்பூரர்களிடையே இன நல்லிணக்கத்தை வளர்ப்பதற்குத் தம்மை அர்ப்பணித்துள்ளார். ஸெங்குவா ஹார்மனி வட்டத்தின் தற்போதைய தலைவரான இவர், மக்கள் கழகத்தில் பல்வேறு முக்கியப் பதவிகளில் செயலாற்றி வருகிறார்.

15 வயதில் ஜூரோங் சமூக மன்றத்தில் உதவித்தொகையைப் பெற்றபோது, சமூக சேவையில் ஈடுபட முதன்முறையாகத் தூண்டப்பட்டதாகச் சொன்னார் திருவாட்டி ராணி.

“அன்று தொண்டூழியர்களின் அர்ப்பணிப்பையும் சேவையையும் பார்த்த பிறகு, நம் சமூகத்திற்கு என் பங்கை நானும் செய்ய வேண்டும் என்ற உந்துதல் என்னுள் எழுந்தது,” என்று அவர் நினைவுகூர்ந்தார்.

1996ல் சமூக மன்றத்தின் இளையர் கட்டமைப்பைச் சேர்ந்த திருவாட்டி ராணி, அதைத் தொடர்ந்து வசிப்போர் குழுவின் உறுப்பினராகவும் சேர்ந்தார்.

“நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே; நாட்டிற்கு நீ என்ன செய்தாய் என்று கேள் என்ற சொற்கள் எனக்‌கு மிகவும் பிடிக்‌கும்,” என்று கூறினார் அவர். இந்த மனப்போக்‌கு சமூக சேவைக்கான அவரது அர்ப்பணிப்பைத் தூண்டுவதாகச் சொன்னார்.

பல ஆண்டுகளாக தொண்டூழியம் செய்துவரும் அவர், மத்திய இலையுதிர் விழா, சிங்கே, நோன்புப் பெருநாள் முதலிய பண்டிகைகளைக்‌ கொண்டாட, பல்வேறு பின்னணிகளுடைய மக்களை ஒன்றிணைத்து, அனைவரையும் உள்ளடக்கிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறார்.

சிங்கப்பூரில் சிறுபான்மையினரைச் சேர்ந்த சமூகத் தலைவராக திருவாட்டி ராணி அவர் ஏற்பாடு செய்யும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அனைத்து இனத்தினரையும் ஒன்று சேர்க்‌கும் விதத்தில், பல்வேறு கலாசாரங்களின் கூறுகளை இணைத்து, ஒருவருக்கொருவர் கற்றுக்கொடுக்கவும் கற்றுக்கொள்ளவும் பல வாய்ப்புகளை அமைத்துத் தருவதில் உறுதியாக இருக்‌கிறார்.

“உதாரணத்திற்கு மத்திய இலையுதிர் திருவிழா கொண்டாட்டங்களின்போது, ​​இந்திய கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் ஒரு மருதாணி சாவடி, சொங்காக், ஐந்து கற்கள் போன்ற விளையாட்டுகளைக்‌ கொண்ட பாரம்பரிய மலாய் விளையாட்டு சாவடி, சீன தேநீரும் நேரடியாகத் தயாரிக்கப்பட்ட நிலா பணியாரம் வழங்கும் சாவடிகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்தேன்,” என்று அவர் விளக்கினார்.

அவரது முயற்சிகள் கலாசார இடைவெளிகளைக் குறைப்பதுடன் அவரது சொந்த குடும்பத்தில் சேவை உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

“நான் தொண்டூழியத்தில் ஈடுப்பட்டிருப்பதை என் பிள்ளைகள் பார்த்து வளர்ந்தார்கள். இயல்பாகவே அவர்கள் என் வழியைப் பின்பற்றுகிறார்கள்,” என்று பெருமையுடன் சொன்னார் திருவாட்டி ராணி. 20 முதல் 30 வயதுடைய அவரது நான்கு பிள்ளைகளும் அடித்தளத் தலைவர்களாக செயல்பட்டு வருகிறார்கள்.

அவரின் மகள் 30 வயது ரோஸ்பிரியா சிதம்பரம், நிறுவன வங்கியாளராகப் பணிபுரிந்துகொண்டிருக்‌கும் அதே நேரத்தில் தம் தாயின் அர்ப்பணிப்பால் தூண்டப்பட்டு, தன்னார்வத் தொண்டும் ஆற்றி வருகிறார்.

“சிறுவயதிலிருந்தே நாங்கள் அடித்தள நிகழ்ச்சிகள் பலவற்றில் கலந்துகொண்டோம். அதனால் சமூகத்திற்குத் திருப்பிக் கொடுப்பதன் முக்கியத்துவத்தையும் அதில் எங்களுடைய பொறுப்பு என்ன என்பதையும் நாங்கள் கற்றுக் கொண்டோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

தமிழ், ஆங்கிலம், மலாய் ஆகிய மொழிகளில் புலமை பெற்றுள்ள திருவாட்டி ராணி, தமக்கு சீன மொழியில் அடிப்படையளவில் உரையாடவும் முடியும் என்றார். இதனால், பல்வேறு கலாசாரங்களைச் சேர்ந்த மக்களுடன் தொடர்பை வலுவாக அமைத்துகொள்ள முடிகிறது என்றும் சொன்னார் அவர்.

திருவாட்டி ராணி தம் வேலையில் மரியாதை, புரிந்துணர்வு ஆகியவற்றின் மதிப்பை வலியுறுத்தினார்.

“நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும்போது, ​​​​வெவ்வேறு கலாசாரங்களை மதித்து, புரிந்துகொள்வது அவசியம். அப்படி செய்தால் அனைவருக்கும் சிறப்பாக அமையும் விதத்தில் நிகழ்ச்சிகளைத் திட்டமிட முடியும்,” என்றார் அவர்.

வெவ்வேறு இனத்தவருடன் நீடித்த பிணைப்பை உருவாக்க வேண்டுமென்றால் அவர்களை முதலில் அணுகுவதற்கு ​​முயற்சி எடுப்பது முக்கியம் என்பது திருவாட்டி ராணியின் எண்ணம்.

குறிப்புச் சொற்கள்