செம்பவாங் பொழுதுபோக்கு நிலையத்தில் முதல் முறையாக ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) நடைபெற்ற வெளிநாட்டு ஊழியர்களுக்கான இன நல்லிணக்க தினக் கொண்டாட்டத்தில் 1,000க்கும் அதிகமானோர் பங்கேற்று மகிழ்ந்தனர்.
வெளிநாட்டு ஊழியர்களுக்காக மனிதவள அமைச்சின் ‘ஏஸ்’ (ACE) எனப்படும் உத்தரவாதம், பராமரிப்பு, ஈடுபாட்டுக் குழுவும், ‘ஹோப் இனிஷியேட்டிவ் அலையன்ஸ்’ அமைப்பின் வெளிநாட்டு ஊழியர்கள் கூட்டமைப்பும் இணைந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.
வெளிநாட்டு ஊழியர்களுடன் டன்மன் உயர்நிலைப் பள்ளி, மில்லெனியா கல்விநிலையம், தேசியத் தொடக்கக் கல்லூரி ஆகியவற்றைச் சேர்ந்த கிட்டத்தட்ட 200 மாணவர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
சிங்கப்பூரின் பல இன, சமய சமூகத்தைப் பற்றிய புரிதலை வெளிநாட்டு ஊழியர்களிடையே மேம்படுத்துவதுடன் சிங்கப்பூரர்களும் வெளிநாட்டு ஊழியர்களும் இணைந்து பழகுவதற்கான தளத்தை ஏற்படுத்துவதும் இந்நிகழ்ச்சியின் நோக்கம். ஒருவருக்கொருவர் தங்கள் கலாசாரத்தை பரிமாறிக்கொள்ளவும் மற்றவர்களின் பண்பாடுகளைப் புரிந்துகொள்ளவும் நிகழ்ச்சி ஒரு வாய்ப்பாக அமைந்தது.
பல்வேறு சமூகப் பங்காளிகள் நடத்திய கலாசார, விளையாட்டு நடவடிக்கைகளும் இடம்பெற்றன. சிங்கப்பூர் பள்ளி மாணவர்களுக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் சமயங்களுக்கு இடையிலான நம்பிக்கை தொடர்பான கலந்துரையாடலும் நடைபெற்றது.
மனிதவள அமைச்சின் ஏஸ் குழுமத் தலைவர் துங் யுயி ஃபாய் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
கலந்துரையாடல் நிகழ்ச்சியை வழிநடத்தியவர்களில் ஒருவரான ‘ஹோப் இனிஷியேட்டிவ் அலையன்ஸ்’ அமைப்பின் தொண்டூழியர் நித்யஸ்ரீ ராஜேந்திரன், 24, பங்கேற்பாளர்கள் தங்களது பழக்கவழக்கங்கள், குழந்தைப் பருவக் கதைகள், பண்பாடு, மரபுகள் பற்றி ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டதாகக் கூறினார்.
“நமது அன்றாட வாழ்க்கையில் வெளிநாட்டு ஊழியர்களை நாம் அடிக்கடி பார்க்கிறோம். ஆனால் அவர்களுடன் பேசுவதற்கு வாய்ப்புகள் அமைவதில்லை. இளையர்கள் அவர்களைப் பற்றியும் அவர்களின் வாழ்க்கைமுறையைப் பற்றியும் மேலும் தெரிந்துகொள்ள இந்த நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று நான் நினைக்கிறேன்,” என்றும் அவர் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
கலாசாரப் பன்முகத்தன்மையை எடுத்துக்காட்டும் வகையில் பல்வேறு நாடுகளின் கலாசார ஆடைகளை வெளிக்காட்டும் ஆடை அலங்கார பவனி, இசை, நடன நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
நிகழ்ச்சியில் சமூகப் பங்காளியாக கலந்துகொண்ட இந்திய முஸ்லிம் சமூக சேவை மன்றத்தின் உறுப்பினரான திரு ரியாஸ், 45, குறிப்பாக தங்கள் இளைய உறுப்பினர்களுக்கு இது போன்ற நிகழ்ச்சிகள் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நம்புவதாகச் சொன்னார்.
“சிங்கப்பூருடைய வளர்ச்சிக்குப் பாடுபட்டு உழைக்கும் வெளிநாட்டு ஊழியர்களைப் பற்றி அவர்கள் மேலும் தெரிந்துகொள்வதற்காக இந்நிகழ்ச்சியில் நமது மன்றம் பங்கேற்றது.
“வெளிநாட்டு ஊழியர்களுக்காக சில சாவடிகளைத் தயார் செய்தோம். அவற்றின் வழியாக அவர்கள் சிங்கப்பூரின் கலாசாரப் பன்முகத்தன்மையைப் புரிந்துகொள்வார்கள் என்பதே எங்களின் நோக்கம்,” என்றார் அவர்.
“பொதுவாக பிற இனத்தவருடன் பேச வேண்டிய நிலை ஏற்படும்போது ஆங்கிலம் தெரிந்தாலும் மிகவும் தயக்கமாக இருக்கும். இந்த நிகழ்ச்சியில், என்னால் மற்ற இனத்தவருடன் எளிதில் பேச முடிந்தது. மற்ற கலாசாரங்களைப் பற்றியும் தெரிந்துகொண்டேன்,” என்றார் நிகழ்ச்சியில் பங்கேற்ற 33 வயது ஆனந்த பிரதிப். இவர் கடந்த 5 ஆண்டுகளாக சிங்கப்பூரில் கடல்துறைப் பொறியாளராகப் பணிபுரிகிறார்.
“சிங்கப்பூரின் பன்முகக் கலாசார சூழல் எனது சொந்த ஊரான தமிழ்நாட்டைப் போன்றே நான் பணிபுரியும்போது என்னை வளப்படுத்துவதாகவும் எனக்கு ஆதரவு அளிப்பதாகவும் நான் உணர்கிறேன். வேலையில் சில சமயங்களில் சவால்களைச் சந்தித்தாலும், நான் சிங்கப்பூரில் வசதியாக இருக்கிறேன். எல்லா இனத்தவரையும் உள்ளடக்கிய சூழலைப் பாராட்டுகிறேன்,” என்றார் அவர்.

