முதியவர்களுக்குத் தொண்டு செய்வதில் ஆறாம் வகுப்பு மாணவரான 12 வயது பிரதிப் ஒவ்ஷிகாவுக்கு அளவற்ற இன்பம். முதியோருக்கு உதவும் வழிகளைத் தேடிச் சென்று அவர் அதில் பங்காற்றுவார்.
பூன் லே கார்டன் தொடக்கப்பள்ளியில் பயிலும் ஒவ்ஷிகா ‘செயல்பாட்டில் விழுமியங்கள்’ எனும் பள்ளி புறப்பாட நடவடிக்கைக்காக வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்துடன் இணைந்து ஸ்பியர்+ (SPHERE+) முதியோர் ஆதரவுத் திட்டத்தில் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.
‘என்டியுசி ஹெல்த்’ தின் துடிப்பாக மூப்படடையும் நிலையத்தில் (ஆக்டிவ் ஏஜிங் சென்டர், பூன் லே) விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டு செயல்படுத்தியுள்ளார் ஒவ்ஷிகா.
அவரது முயற்சிகளுக்காக, ஜூலை 27 அன்று நடைபெற்ற இரண்டாவது ‘சிங்கப்பூரின் அறியப்படாத இளம் நாயகர்கள்’ (யங் சைலண்ட் ஹீரோஸ்) மாணவர் விருதுப் பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட 24 பள்ளிகளைச் சேர்ந்த 53 இளையர்களில் ஒவ்ஷிகாவும் ஒருவர்.
கல்வி, மனிதவள துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார்.
“நல்ல செயல்களைச் செய்ய மற்றவர்களையும் ஊக்குவிக்கும்போது கருணை மலரும். சமூகத்தில் கருணை வேரூன்றி மலர தொடர்ந்து முயற்சி செய்தால், கருணைத் தோட்டத்தை உருவாக்கலாம்,” என்று துணை அமைச்சர் கான் தமது உரையில் கூறினார்.
சிங்கப்பூரில் பல முதியோர் தனியாக வசிக்கின்றனர். அவர்களுடன் அவர்களது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் நேரம் செலவழிக்க முடியாத சூழல் நிலவுவதால் அத்தகையோருக்கு உதவ வேண்டும் என ஒவ்ஷிகா முடிவெடுத்தார்.
“என்னுடைய பாட்டி இந்தியாவில் இருப்பதால் என்னால் அவருடன் அதிக நேரம் செலவழிக்க முடியவில்லை என்ற காரணத்தாலும் நான் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட விரும்பினேன்,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
சமூக சேவையில் தொடர்ந்து ஈடுபட ஒவ்ஷிகாவின் பெற்றோர் இவருக்கு ஆதரவளித்து வருகின்றனர்.
“ஓய்வு நேரத்தில் சமூகத்திற்குப் பங்காற்ற பெற்றோர் என்னை ஊக்குவிப்பார்கள். அதனால், வீட்டுப்பாடங்களை முன்கூட்டியே முடித்துவிடுவேன். பிறகு கிடைக்கும் நேரத்தை முதியோருடன் செலவிட முயற்சி செய்வேன்,” என்றார் ஒவ்ஷிகா.
அவரைப் பார்த்து அவரது தம்பியும் சமூக சேவையில் ஈடுபடுகிறார். அதில் ஒவ்ஷிகாவுக்கு மிகுந்த மகிழ்ச்சி.
ஒருமுறை முதியோருடன் ஜூரோங் தோட்டத்திற்குச் சென்றிருந்தபோது தங்களது இளம் பருவத்தைப் பற்றி அவர்கள் ஒவ்ஷிகாவுடன் பகிர்ந்தனர். இளமைக் காலத்தில் அவர்கள் பாடுபட்டு உழைத்ததன் பலனை இன்றைய தலைமுறையினர் அனுபவிப்பதை ஒவ்ஷிகா அறிந்தார்.
“முதியோர் அப்போது செய்த வேலையுடன் எனது சமூக சேவையை ஒப்பிட்டால், நான் செய்வது சிறியதே,” என்றார் இவர்.
தற்போது தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வுக்குத் தயாராகிவரும் ஒவ்ஷிகா, உயர்நிலைப்பள்ளிக்குச் சென்ற பிறகும் தொடர்ந்து முதியோருக்குச் சேவையாற்ற விரும்புகிறார்.
‘சிங்கப்பூரின் அறியப்படாத இளம் நாயகர்கள்’ விருது பெற்ற மற்றொருவர் ராஃபிள்ஸ் பெண்கள் பள்ளியின் ஹாசினி செந்தில்நாதன். 15 வயதான இவர், ‘பிரைட்டன் கனெக்ஷன்’ சமூக சேவை நிறுவனத்தைச் சேர்ந்த வசதி குறைந்த சிறுவர்களுக்கு ஆதரவளிக்கும் ‘புரோஜெக்ட் என்ஜோ’ திட்டத்திற்குத் தலைமை வகிப்பதற்காக விருது பெற்றார்.
தம் குழுவினருடன் இணைந்து பள்ளி விடுமுறை நாள்களில் குணநலன் மேம்பாட்டிலும் கல்வியிலும் அச்சிறுவர்களுக்கு ஆதரவை வழங்கி, அவர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தினார்.
“நானும் என் நண்பர்களும் அர்த்தமுள்ள காரியத்தில் ஈடுபட வேண்டும் என்று சிந்தித்ததில் பிறந்தது இந்தத் திட்டம்,” என்றார் இவர்.
முன்னதாக மாணவர் பராமரிப்பு மையத்தில் சேவை புரிந்த அவர்கள், மற்றொரு மாணவர் பராமரிப்பு மையத்தில் பிள்ளைகளுடன் நீண்டகால உறவை உருவாக்க முடிவெடுத்ததாக ஹாசினி சொன்னார்.
பிரைட்டன் கனெக்ஷன் ஊழியர்களுடன் அணியின் தொடர்பாளராக செயல்பட்டுவரும் ஹாசினி, பள்ளியில் மற்ற சமூக சேவை முயற்சிகளிலும் பங்கேற்பதோடு தனது தன்னார்வப் பணியைத் தனது கல்விப் பொறுப்புகளுடன் சமநிலைப்படுத்தி வருகிறார்.
“பிள்ளைகளுடன் பேசி உரையாடுவதை ஒரு பணி என்பதைவிட பள்ளிப் படிப்பிலிருந்து பெறும் ஓய்வாகவே நான் கருதுகிறேன்,” என்றார் இவர்.
விருது கிடைத்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் அதே நேரத்தில் தனது குழு உறுப்பினர் அனைவருக்கும் இதில் பங்குண்டு என்று கூறினார் ஹாசினி.
ஆர்வத்துடனும் விடாமுயற்சியுடனும் சமூக சேவையில் ஈடுபட்டால் கண்டிப்பாக மற்றவர்களின் வாழ்க்கையில் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தலாம் என இவர் நம்புகிறார்.
‘புரோஜெக்ட் என்ஜோ’வுடன் நீண்டகாலத்திற்கு சமூகத் தொண்டு செய்ய ஹாசினி விரும்புகிறார்.