கிட்டத்தட்ட பதினாறு ஆண்டுகளாக தமிழ் மரபு, பண்பாடு, மொழி, கலைகள் ஆகியவை மாணவர்களுக்கு ஒன்றிணைந்த அனுபவமாக கிடைக்கும் வண்ணம் திகழ்கிறது உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தின் தமிழ்த் திருவிழா.
உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் ஆண்டுதோறும் நடந்துவரும் இந்த விழா, சனிக்கிழமை (ஆகஸ்ட் 3) ஏகேடி கிரியேஷன்ஸ் கலை நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரியைச் சேர்ந்த ஏறத்தாழ 850 தமிழ் மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் நாட்டுப்புற நாடகம், கிட்டி அடியல் ஆட்டம், பறையாட்டம், ஒயிலாட்டம், மான்கொம்பாட்டம், கரகாட்டம், கபடி, சிலம்பாட்டம், உரியடி போன்ற மரபுக் கலைகளையும் தற்காப்புக் கலைகளையும் மாணவர்கள் கற்றதுடன் அவற்றில் பங்கேற்றனர்.
“இந்த நிகழ்ச்சி புதுமையாக இருந்தது. ஏனென்றால் இதுபோன்ற கலைகளில் நாம் ஈடுபடுவதற்கு அன்றாட வாழ்வில் நமக்கு வாய்ப்புகள் அவ்வளவாக அமைவதில்லை,” என்றார் குவீன்ஸ்வே உயர்நிலைப்பள்ளி மாணவி சாய்மா ஷாகுல் ஹமித், 14.
“உதாரணத்திற்கு, ஒயிலாட்ட நடவடிக்கையில் ஒரு கைக்குட்டையைப் பயன்படுத்தி அதனுடன் நடனமாடுவதைப் பற்றிக் கற்றது சுவாரசியமான அனுபவமாக இருந்தது,” என்றும் அவர் கூறினார்.
நிகழ்ச்சியின் சிறப்பு அங்கமாக இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்ட இரண்டு கலைஞர்களும் ஏகேடி கிரியேஷன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 15 உள்ளூர் கலைஞர்களும் இணைந்து மாணவர்களுக்காக ஒரு மரபுக் கலை நிகழ்ச்சியைப் படைத்தார்கள்.
நாடக வடிவில் இடம்பெற்ற இந்தக் கலை நிகழ்ச்சியில் மாணவர்கள் அன்றைய நடவடிக்கைகளில் கற்றுக்கொண்ட மரபுக் கலைகளுடன், சிக்காட்டம் நாட்டுப்புற நடனப் படைப்பு ஒன்றும் இடம்பெற்றது. தொன்மையான கதைச்சூழலை இக்காலத்திற்கு ஏற்ப மாற்றி, மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இந்த நாடகம் அமைக்கப்பட்டிருந்தது.
தொடர்புடைய செய்திகள்
ஏகேடி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் ராணி கண்ணா, பொதுவாக மாணவர்களுக்கு இந்தியாவிற்குச் சென்று தமிழ்ப் பாரம்பரிய மரபுக் கலைகளைக் கண்டு ரசிக்கும் அனுபவம் கிடைக்காது என்பதால் சிங்கப்பூருக்குக் கலைகளைக் கொண்டுவரும் முயற்சிகளைச் செய்வதாக சொன்னார்.
“இதுபோன்ற நடவடிக்கைகள்மூலம் நமது மரபு, நமது சொத்து என்ற கருத்தை அவர்கள் பெருமையுடன் உணர்வார்கள் என்று நம்புகிறோம்,” என்றார் அவர்.
இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்ட கலைஞர்களில் ஒருவரான நாடகம், நாட்டுப்புறக்கலை பயிற்றுவிப்பாளர் முனைவர் சே.செந்திலிங்கம், 38, மாணவர்கள் வாய்மொழியாகக் கேட்பதைத் தாண்டி ஆட்டக்கலைகளைப் நேரடியாகப் பார்க்கும்போது முழுமையான தகவல்களைப் புரிந்துகொள்வார்கள் என்று சொன்னார்.
“உள்ளூர் கலைஞர்களுடன் இந்நிகழ்ச்சிக்கு தயார்செய்தது எனக்கு புது அனுபவமாக இருந்தது. இந்த அளவிற்கு சிங்கப்பூரில் மரபுக் கலைகள் கற்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படுவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது,” என்றும் அவர் கூறினார்.
மேலும், மாணவர்கள் அன்றைய நடவடிக்கைகளில் அதிக ஆர்வத்துடன் கலந்துகொண்டார்கள் என்றார் அவர்.
மற்றொரு கலைஞரான இந்தியத் திரைப்பட, நாடக இயக்குநரான திரு அனீஸ், 50, தமிழ்த் திருவிழாவில் இடம்பெற்ற நாடகத்தை முனைவர் செந்திலிங்கத்துடன் இணைந்து இயக்கினார். மேலும், மாணவர்களுக்கு நாட்டுப்புற நாடக நடவடிக்கைகளையும் இருவரும் வழிநடத்தினர்.
தமிழ் மரபுக் கலைகளை சிங்கப்பூரின் இளம் தமிழ் தலைமுறையினரிடம் கொண்டுசேர்க்கும் பணியில் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் தொடர்ந்து ஈடுபடும் என்றார் ஏற்பாட்டுக் குழு துணைப் பொறுப்பாளரும் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தின் தமிழ் ஆசிரியருமான கோ.சந்தன்ராஜ், 58.
“என் மொழி இயங்குகிறது. என் மொழி புழங்குகிறது. மரபும் பண்பாடும் தலைதூக்குவதற்கு நாங்களும் ஒரு காரணம் என்று சொல்லி, நம் பிள்ளைகள் அடுத்த தலைமுறைக்கு அவற்றை எடுத்துப் போவதற்கு நாங்கள் ஏற்படுத்தித் தரும் தளமே தமிழ்த் திருவிழா,” என்றார் அவர்.