கிருஷ்ணாஸ் இலவச உணவகத்துடன் இணைந்த லிஷா பெண்கள் பிரிவு

கிருஷ்ணாஸ் இலவச உணவகத்துடன் இணைந்த லிஷா பெண்கள் பிரிவு

2 mins read
6e5625b8-4400-4970-b93e-1dd0d1347713
லிஷா பெண்கள் பிரிவு தொண்டூழியர்கள். - படம்: எலிஷா வாணி

இல்லாதவர்களுக்கு அள்ளித்தர வேண்டுமென்ற சேவை மனப்பான்மை மிகுந்த ‘கிருஷ்ணாஸ் சூப் கிச்சன்’ உணவகம் சமூகத்தில் யாரும் பசியோடு தவிக்கக்கூடாது என்ற உன்னத நோக்கத்துடன் நாளும் பலருக்கு இலவசமாக உணவு வழங்கி வருகிறது.

அண்மையில் தொண்டூழியர்கள் பற்றாக்குறையை எதிர்நோக்கிய அவ்வுணவகத்திற்குக் கைகொடுத்தனர், ‘லிஷா’ எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கத்தின் பெண்கள் பிரிவைச் சேர்ந்த 13 தொண்டூழியர்கள்.

உணவைப் பொட்டலமிடுவதற்கு உதவிய தொண்டூழியர்கள்.
உணவைப் பொட்டலமிடுவதற்கு உதவிய தொண்டூழியர்கள். - படம்: எலிஷா வாணி

சனிக்கிழமை காலை 6.30 மணியளவில் லிட்டில் இந்தியாவில் அமைந்துள்ள உணவகத்தில் கூடிய தொண்டூழியர்கள், மூன்று மணி நேரத்திற்கு உணவு தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டனர். உணவுகளை பொட்டலமிடுதல், நண்பகல் உணவிற்கான காய்கறிகளை நறுக்குதல் போன்றவை அவற்றில் அடங்கும்.

கிருஷ்ணாஸ் இலவச உணவகத்தில் தொண்டூழியம் புரிந்த லிஷா பெண்கள் பிரிவு தொண்டூழியர்கள்.
கிருஷ்ணாஸ் இலவச உணவகத்தில் தொண்டூழியம் புரிந்த லிஷா பெண்கள் பிரிவு தொண்டூழியர்கள். - படம்: எலிஷா வாணி

வெளிநாட்டு ஊழியர்கள் உட்பட கிட்டத்தட்ட 1,500 பேர் வயிறாரப் பசியாறினர். தொழில் சார்ந்த நிகழ்ச்சிகள், பொது விழிப்புணர்வு சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அப்பாற்பட்டு லிஷா பெண்கள் பிரிவு தேவைப்படும் போதெல்லாம் சமூகத்துக்குத் தொண்டாற்ற கடப்பாடு கொண்டுள்ளனர்

“ஒருவரிடம் பரிவுகாட்டுவது மட்டுமின்றி, எங்களது இத்தொண்டு இளைய தலைமுறையினருக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைய வேண்டும்,” என்று லிஷா பெண்கள் பிரிவு தலைவர் எலிஷா வாணி பெருமாள், 40, கூறினார்.

தொண்டார்வத்தை அதிகரிக்க பள்ளிகள், நிறுவனங்களுடன் கைகோப்பது, சமூக ஊடகத் தளங்களில் பரப்புவது போன்ற உத்திகளைக் கையாளலாம் என்று திருவாட்டி எலிஷா வாணி பரிந்துரைத்தார்.

இதுபோல மேலும் பல தொண்டூழிய நடவடிக்கைகள் ஏற்பாடுகளில் இருப்பதாக பகிர்ந்துகொண்ட அவர், முதியோர் இல்லங்கள், ஸ்ரீ நாராயண மிஷன் தாதிமை இல்லம், லிட்டில் இந்தியாவில் கவனம் செலுத்தும் வகையில், தொண்டூழிய நடவடிக்கைகளில் தொண்டூழியர்கள் கூடிய விரைவில் ஈடுபடுவர் என்றும் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்