தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிறை சென்றோர் வாழ்வைச் சீர்ப்படுத்தும் நெடுமாறன்

2 mins read
4f11f18c-9387-43dd-9b65-b38d9f912b8b
விருது பெற்ற நெடுமாறன். - படம்: சிங்கப்பூர் சிறைத்துறை

குண்டர் கும்பல்களில் சேர்ந்து தீங்கிழைக்கும் செயல்களில் ஈடுபட்ட இளம் கைதி ஒருவரை நல்வழிப்படுத்தியபோது வாழ்வில் பெரும்பேறு பெற்ற மகிழ்ச்சியை அடைந்தார் திரு நெடுமாறன் பரமசிவம்.

நிம்மதியான வாழ்க்கையை வாழும் அந்தக் கைதியுடன் அவர் அவ்வப்போது மின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்டு பேசியுள்ளதாகப் பகிர்ந்துகொண்டார்.

அண்மையில் நடந்த சிங்கப்பூர் சிறைத்துறை தொண்டூழியர் விருது விழாவில், நீண்ட நாள் சேவை விருது திரு நெடுமாறனுக்கு அளிக்கப்பட்டது.

தளவாட நிறுவனத்தை நடத்திவரும் நெடுமாறன், சிறையிலிருந்து வெளியில் வருபவர்களுக்கு வேலை வாய்ப்புகளையும் வழங்கி வருகிறார்

கைதிகளை நல்வழிப்படுத்தும் தொண்டூழியத்தில் இறங்கிய பிறகு அவர்கள் குறித்த கண்ணோட்டம் 57 வயது நெடுமாறனுக்கு மாறியது.

“அவர்களும் நம்மைப் போன்றவர்கள்தான். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தவறு செய்து சிறை சென்றவர்கள். வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும், குடும்பத்தாருடனும் சமூகத்தோடும் ஒன்றுகலந்து வாழ வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு உண்டு,” என்றார் திரு நெடுமாறன்.

மூவாண்டுகளுக்கு மேலாக சிங்கப்பூர்ப் போதைப்பொருள் தடுப்புச் சங்கத்தின் இந்து சமயக் குழுவில் தொண்டாற்றி வரும் திரு நெடுமாறன், வாரத்தில் ஒருநாள் இரண்டு மணி நேரம் கைதிகளுடன் செலவிடுகிறார்.

அவர்களுடன் மனம் விட்டுப் பேசி தண்டனைக்குப் பிறகு வெளியே வந்ததும் அவர்களை சமுதாயத்தோடு ஒன்றிணைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார்.

கைதிகளுக்கு பக்திப் பாடல்கள் பாடுவது, வழிபாடு, பகவத் கீதையில் இடம்பெறும் கதைகளை போதிப்பது போன்றவற்றில் ஈடுபட்டு கைதிகளின் சிந்தனையை நெறிப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகிறார்.

“என்னைப் போன்ற தொண்டூழியர்களைச் சந்திக்கும்போது அவர்களுக்குள் ஒரு மாற்றம் ஏற்படும். 24 மணி நேரமும் சிறைக்குள் அடைந்து இருக்கும் அவர்களுக்கு, வெளிமனிதர்களுடனான சந்திப்புகள் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்,” என்று நெடுமாறன் சொன்னார்.

சிறையில் சந்திப்பவர்களை அவர்களின் விடுதலைக்குப் பிறகு வெளியிலும் சந்தித்து வருகிறார் திரு நெடுமாறன்.

“வெளியில் வந்த பிறகு அவர்களது மனநிலை, செயல்பாடுகள், அவர்கள் குடும்பத்தினருடன் எவ்வாறு பிணைந்துள்ளார்கள், அவர்களுக்கு முழுநேரப் பணி கிடைத்துள்ளதா போன்றவற்றை அறிந்து தேவைப்படும்போது உதவி செய்வேன்,” என்று கூறினார் திரு நெடுமாறன்.

குறிப்புச் சொற்கள்