சிங்கப்பூர் சுதந்திரம் பெற்று அடுத்த ஆண்டு தனது 60வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. அதனை முன்னிட்டு சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் இரண்டு தொகுப்பு நூல்களை வெளியிடத் திட்டமிட்டுள்ளது. ஒன்று, 60 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு நூல். மற்றொன்று, 60 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நூல்.
எழுத்தாளர் கழகம் ஏற்கெனவே, சிங்கப்பூரின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு 50 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு நூலையும் 50 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நூலையும் 2015ல் வெளியிட்டிருந்தது. அப்போது அவற்றுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் இரண்டாம் பதிப்பும் வெளியிடப்பட்டது.
சிறுகதை
1965க்குப் பிறகு எழுதப்பட்ட கதைகள் தொகுப்பு நூலில் இடம்பெறும். ஒவ்வோர் எழுத்தாளரும் மிகச் சிறந்தவை எனத் தாம் கருதும் ஒரு சிறுகதையை அனுப்பிவைக்கலாம்.
கதைகள் சிங்கப்பூர் சூழலில் எழுதப்பட்டிருக்க வேண்டும். கிடைக்கப்பெறும் கதைகளில் சிறந்த கதைகளைத் தேர்வுக் குழு தெரிவு செய்து சிறுகதைத் தொகுப்பில் அவற்றை இடம்பெறச் செய்யும். சிறுகதைகளின் அளவு 1,200 வார்த்தைகளிலிருந்து 1,500 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும்.
கதைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: sg60kathaikal@gmail.com
கட்டுரை
1965க்குப் பிறகு வெளியிடப்பட்ட கட்டுரைகள் தொகுப்பு நூலில் இடம்பெறும். ஒவ்வொருவரும் ஒரு கட்டுரையை அனுப்ப வேண்டும். கட்டுரைகள் சிங்கப்பூர் பற்றியதாகவோ சிங்கப்பூர் வாழ்க்கைச் சூழல், கல்வி நிலை, பல்லின நல்லிணக்கம், வளர்ச்சி, சுற்றுலா இடங்கள், வட்டாரங்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட அம்சங்களைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும்.
எடுத்துக்காட்டாக தோ பாயோ, தேக்கா போன்றவை அன்று எப்படி இருந்தன, இன்று எவ்வாறு வளர்ச்சி கண்டுள்ளன என்பதை எழுதலாம். கட்டுரையின் அளவு 800 வார்த்தைகளிலிருந்து 1,000 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும்.
கட்டுரைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: sg60katturaikal@gmail.com
தொடர்புடைய செய்திகள்
சிறுகதைகளும் கட்டுரைகளும் கணினியில் தட்டச்சு செய்யப்பட்டு ஒருங்குறி (Unicode) எழுத்துருக்களைக் கொண்டிருக்க வேண்டும். கையால் எழுதப்பட்ட சிறுகதைகளோ கட்டுரைகளோ ஏற்றுக்கொள்ளப்பட மாட்டா. கதைகளை Word Format மற்றும் PDF Format இரண்டு வடிவங்களிலும் அனுப்ப வேண்டும்.
சிங்கப்பூர்க் குடியுரிமை பெற்றவர்களும் நிரந்தரவாசிகளும் மட்டுமே கதைகளையும் கட்டுரைகளையும் அனுப்பலாம். அவை ஏற்கெனவே எழுத்தப்பட்டவையாக இருக்கலாம் அல்லது புதிதாக எழுதியும் அனுப்பலாம்.
அவை எழுதப்பட்ட ஆண்டு, பத்திரிகையில் வெளிவந்ததாக இருந்தால் எந்தப் பத்திரிகையில் எந்தத் தேதியில் வெளிவந்தது, எழுத்தாளரின் பெயர், முகவரி, தொடர்பு எண்கள் போன்றவற்றைத் தனியாகக் குறிப்பிட வேண்டும்.
எழுத்தாளர்களும் கட்டுரையாளர்களும் தங்கள் புகைப்படங்களையும் தங்களைப் பற்றிய சுருக்கமான குறிப்புகளுடன் (10 வரிகளில்) இணைத்து அனுப்ப வேண்டும்.
கதைகளும் கட்டுரைகளும் வந்துசேர வேண்டிய இறுதி நாள் 30.09.2024.
மேல்விவரங்களுக்கு எழுத்தாளர் கழகச் செயலாளர் திருவாட்டி பிரேமா மகாலிங்கம் (9169 6996 - சிறுகதைகள்) அல்லது துணைத் தலைவர் திரு சு.முத்துமாணிக்கம் (9675 3215 –- கட்டுரைகள்) ஆகியோரைத் தொடர்புகொள்ளலாம்.


