கைப்பாவைகளாகத் தெனாலிராமனும் கிருஷ்ணதேவராயரும் உரையாடுகின்றனர்; ஆடல், பாடலுடன் சிங்க நடனம் நடக்கிறது; திரையில் கேலிச்சித்திரங்கள்; அறையெங்கும் விலங்குகள் ஒலிகள் என்று நடிப்பு, பாட்டு, விளையாட்டுகளுடன் சுவைமிகு தமிழில் கதைசொல்லும் நிகழ்ச்சிகள் சிங்கப்பூர் நூலகங்களில் மாதந்தோறும் நடைபெறுகின்றன.
தமிழ்ப் பிள்ளைகளிடம் மொழிப் புழக்கத்தை அதிகரிக்கவும் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும் தேசிய நூலக வாரியம் முன்னெடுத்து வரும் முயற்சிகளில் மாதாந்தர கதைசொல்லும் அங்கமும் ஒன்று.
“குழந்தைகளின் படைப்பாற்றல், சமூகம் சார்ந்த பார்வை, விழிப்புணர்வு ஆகியவற்றை கதைகள் மேம்படுத்துகின்றன. ஒரு நல்ல கதை சுவாரசியமாக இருப்பதுடன் உலகம் குறித்த புரிதலைக் குழந்தைகளுக்கு தரும்,” என்றார் தேசிய நூலக வாரிய நூலகர் செல்வி ஜமுனா, 30.
தன்னார்வலர்கள் வழிநடத்தும் 30 நிமிடக் கதை நேர நிகழ்ச்சிகள், நான்கு முதல் எட்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.
வெவ்வேறு தலைப்புகளில் நடைபெறும் கதை சொல்லல் நிகழ்ச்சிகள், வயதுக்கு ஏற்ற கதை நூல்களைப் பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்கின்றன. மேலும், அவர்களையும் பங்கெடுக்க வைத்து அவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கவும் கைகொடுக்கின்றன.
கதை அமர்வுகளும் கதைசொல்லிகளும்
இந்த ஆண்டில் தீவெங்கிலும் உள்ள பல்வேறு நூலகங்களில் 168 நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. இதுவரை 42 நிகழ்ச்சிகள் நடந்துள்ளன.
கல்வியாளர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் எனப் பல்வேறு பின்னணியைச் சேர்ந்த 14 தன்னார்வலர்கள் நிகழ்ச்சிகளை வெவ்வேறு நூலகங்களில் நடத்துகின்றனர். நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இலவசம். வயதின் அடிப்படையில் பிடித்த நிகழ்ச்சியில் பிள்ளைகள் பங்கேற்கலாம்.
கதை புனைய ஊக்குவிக்கும் ‘கொக்கரக்கோ’
பாடல், விடுகதைகள் எனக் குழந்தைகளை ஈர்க்கும் அம்சங்களுடன் விலங்குகள், பறவைகள், காடு என வேறு உலகத்திற்கே அழைத்துச் செல்கிறார் திருவாட்டி சுடர்மொழி.
தொடர்புடைய செய்திகள்
நான்காண்டுகளாக தெம்பனிஸ் வட்டார நூலகத்தில் மாதந்தோறும் இரண்டாவது புதன்கிழமையன்று அவரது ‘கொக்கரக்கோ’ நிகழ்ச்சி இடம்பெற்று வருகிறது.
பரபரப்பான தொழில்நுட்ப உலகில் தமிழில் பேசுவதற்கே வாய்ப்புகள் குறைவாக இருப்பதாகக் குறிப்பிட்ட சுடர்மொழி, குழந்தைகளைக் கதை சொல்ல ஊக்குவிக்கிறார்.
பிள்ளைகள் நூல்களில் வாசித்த கதைகளைச் சொல்லலாம். தங்கள் கற்பனையில் உருவான கதைகளையும் சொல்லலாம்.
“தொடக்கத்தில் மற்றவர்களுக்கு முன் நின்று கதை சொல்லப் பயந்தாலும் மெல்ல மெல்ல தாங்களும் கதை சொல்ல வேண்டும் எனும் ஆர்வம் பிள்ளைகளிடம் ஏற்படுகிறது. ஆரோக்கியமான போட்டி மனப்பான்மை அவர்களது ஆற்றலையும் வளர்ப்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது,” என்றார் சுடர்மொழி.
“கதை சொல்வதற்காக பிள்ளைகள் நூல்களை வாசிப்பதோடு கதைகளைக் கேட்கவும் செய்கிறார்கள். அப்போது புதிய சொற்களைக் கற்கிறார்கள். கதைசொல்லும்போது அறிந்த சொற்களை உரிய இடங்களில் பொருத்திப் பேசிப் பழகவும் அவர்களுக்கு வாய்ப்புக் கிட்டுகிறது. இது தயக்கத்தைத் தகர்க்கிறது,” என்றார் அவர்.
நன்னெறிகளை அறிந்து நல்ல மனிதராக வளர கதைகள் உதவும் என்றார் சுடர்மொழி.
பாடல்களாக உள்ளூர்க் கதைகள்
சிங்க நடனம், இளவரசர் சங்நீல உத்தமா உள்ளிட்ட உள்ளூர் கருப்பொருள்களைக் கொண்ட கதைகளைப் பாடல்கள், இசையுடன் சொல்கிறார் திருவாட்டி பிரியா கணேசன்,46.
மெர்லயன், மீ கோரேங், டுரியான் என அறிந்த பொருள்கள், இடங்கள், சூழல் குறித்த பாடல்களைத் தாமே இயற்றி, பாடி, படைக்கிறார் இவர்.
குவீன்ஸ்டவுன் வட்டார நூலகத்தில் ஒவ்வொர் மாதமும் மூன்றாவது புதன்கிழமையன்று மாலை 7 மணிக்கு மூன்றாண்டுகளாக இவரது கதைசொல்லல் அங்கம் நடைபெற்று வருகிறது.
“ஓசைகள் குழந்தைகளைச் சட்டெனக் கவரும்,” என்ற அவர் விலங்குகள், பறவைகளின் ஓசைகளைக் கதைகளில் சேர்க்கிறார்.
“பொதுவான கதைகள், வெளிநாட்டுக் கதைகளைவிட, தொடர்புப்படுத்திக்கொள்ளக்கூடிய அம்சங்கள் கொண்ட கதைகள் பிள்ளைகளின் ஆர்வத்தைத் தூண்டுகிறது. எளிய நடையில், சிறு சொற்கள் கொண்ட கதைகளை அவர்களால் எளிதாக உள்வாங்க முடிகிறது,” என்றார் திருவாட்டி பிரியா.
அவருடன் சேர்ந்து பிள்ளைகளையும் சத்தமாகப் பாட வைக்கிறார். இது அவர்களின் கூச்சத்தையும் தயக்கதையும் போக்குகிறது.
கதாபாத்திரங்களின் செயல்பாடுகள், அவற்றின் பன்முகத்தன்மை ஆகியவை குழந்தைகளுக்கு வெவ்வேறு கண்ணோட்டங்களை வழங்குமென்றும் தெரிவித்தார் அவர்.
பொம்மைகள் சொல்லும் கதைகள்
கைப்பாவைகள், பொம்மைகளுடன் சுவாரசியமாகக் கதை சொல்கிறார் திருவாட்டி சுபா செந்தில்குமார், 45.
கேலாங் ஈஸ்ட் வட்டார நூலகத்தில் ஒன்றரை ஆண்டுகளாகக் கதைசொல்லிவரும் இவர், கதைகளுக்கு ஏற்ப கைப்பாவைகளை தானே செய்கிறார். அவற்றைக் குச்சிகளில் ஒட்டி, ஆடி, பாடி நடிக்க வைக்கிறார்.
“கைப்பாவைகளைப் பார்க்கவும், அவற்றைப் பயன்படுத்திக் கதை சொல்லவும் பிள்ளைகள் போட்டிப் போட்டுக்கொண்டு வருவார்கள். அதுவே அதன் நோக்கம்,” என்றும் குறிப்பிட்டார் அவர்.
உரையாடல் பாணியில் கதை சொல்வதுடன், பிள்ளைகளையும் பாத்திரங்களாக மாற்றி, உரையாட வைக்கிறார். குழந்தைகளைப் பேச ஊக்குவித்து, அவர்களுக்குச் சிறு பரிசும் கொடுக்கிறார்.
“உரையாடலாகக் கதை சொல்வது வாக்கிய அமைப்புக்கு உதவுகிறது. கேட்ட வாக்கியங்களை நினைவில் இருத்தவும், அதனைச் சொல்லிப் பயிற்சி செய்யவும் இந்த அமர்வு உதவுகிறது,” என்றார் அவர்.
பிள்ளைகளின் எல்லையற்ற கற்பனை தன்னை உற்சாகத்துடன் வைத்துள்ளதாகவும், அவர்களை ஈர்க்கப் புதிது புதிதாக ஏதேனும் செய்ய வேண்டுமென்கிற சிந்தனையை ஊக்குவிப்பதாகவும் அவர் சொன்னார்.
எழுத்துகளை அறிமுகம் செய்யும் புதிர்கள், கைவினைப் பொருள்கள் செய்வது, குழு விளையாட்டு ஆகியவற்றிலும் பிள்ளைகளை ஈடுபடுத்துகிறார் திருவாட்டி சுபா.
இவருக்கு உதவியாகக் கதை சொல்லும் சசிகலா, மாதம் ஒருமுறை மட்டுமின்றி எப்போதும் குழந்தைகளுக்குக் கதை சொல்ல வேண்டும் எனும் ஆர்வம் மேலோங்குவதாகக் குறிப்பிட்டார்.
‘காமிக்ஸ்’ படக்கதைகள்
சுவரில் கேலிச்சித்திர (காமிக்ஸ்) படக்கதைகளைக் காட்டியும், கதைகளில் கற்றவை குறித்த புதிர்களுடனும் உற்சாகமான கதை சொல்லல் அமர்வு மத்திய பொது நூலகத்தில் மாதந்தோறும் மூன்றாவது சனிக்கிழமைகளில் நடைபெறுகிறது.
கதைகளுடன், கேள்வி-பதில் அங்கம், படம் பார்த்துப் பதில் சொல்லும் புதிர், பெற்றோர் - பிள்ளைகள் பிணைப்பை ஊக்குவிக்கும் விளையாட்டுகளுடன் அந்த நிகழ்வை வழிநடத்துகிறார் செல்வி செளந்தர்யா.
தன் தாயுடன் இணைந்து அந்த நிகழ்ச்சியை வழிநடத்தும் சௌந்தர்யா, “இது போன்ற விளையாட்டுகள் மொழியில் புதிய அனுபவமாக அமைகின்றன,” என்றும் குறிப்பிட்டார்.
சௌந்தர்யா தமிழ் பேசக் கற்றுக்கொண்டதே ஒரு மாறுபட்ட அனுபவம். அவருக்குப் பலர் உதவினார்கள். அந்த உதவியை அடுத்த தலைமுறைக்குக் கைமாறாகச் செய்கிறார் அவர்.
“மொழி கற்பது உற்சாகமான அனுபவம். ஒரு மொழியைக் கற்பது, அது தொடர்பான கலை, ஓவியம், திரைப்படம், இசை என பல பரிமாணங்களை ஆராய்ந்து அனுபவிப்பதை உறுதி செய்யும். தமிழ்ப் பண்பாட்டை அறிந்து, அதை அனுபவிக்க மொழி அறிவு முக்கியம்,” என்றார் செளந்தர்யா.
கதை நூலைப் பெரிய திரையில் பார்த்துப் படிக்கும் அனுபவத்தைத் தரும் இந்த அமர்வு, புதிய நூல்களைப் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது.
மாணவர்களின் ஆர்வம்
“கதை சொல்லும் நிகழ்ச்சியில் தண்ணீரை வீணடிக்கக்கூடாது என்று கற்றுக்கொண்டேன்,” என்றார் ஐந்து வயது சிவமதி சிவானந்தம். தேவதையும் விறகு வெட்டிக் கதையையும் மாணவர்கள் முன் சொல்லிக்காட்டி, கைதட்டல்களையும் அள்ளினார் சிவமதி.
கதை சொல்ல விரும்பும் ஐந்து வயது பிரத்னியா, அடுத்த மாத அமர்வுக்கான தயாரிப்புகளுக்காக கதை நூல்களை ஆர்வத்துடன் வாசிக்கிறார்.
ஐந்து வயது ஜிவின் ரகுராமனுக்கு ராஜா கதைகளைக் கேட்பது பிடிக்கும்.
“கதைகள் மூலம் நாம் எப்படி நடந்துகொள்ளலாம், எப்படி நடந்துகொள்ளக்கூடாது என்பதைக் கற்றுக்கொள்கிறேன்,” என்றார் மாணவி ரஷ்மிகா.
அப்பா சொல்வலும் கதைகளை, நண்பர்கள் முன் சொல்வது மகிழ்ச்சியளிப்பதாகச் சொன்னார் ஆதிதேவ். கதைகள் படிப்பதைவிடக் கேட்பது இவருக்கு அதிகம் பிடிக்கும்.
குவின்ஸ்டவுன் பொது நூலகத்திற்கு தொடர்ந்து கதைகேட்க வரும் அதிரன் மதீஸ், “டண்டன டண்டன என சிங்கப் பாடல் பாடியது மகிழ்ச்சியளித்தது” என்று பாடிக் காட்டினார்.
பெற்றோரின் கருத்துகள்
கதை கேட்க என் மகன் மித்ரனை ஒருமுறை அழைத்து வந்தேன். தொடர்ந்து அழைத்துச் செல்லக்கோரி தற்போது என்னை அவர் அழைப்பது உற்சாகமளிக்கிறது என்றார் பெற்றோரான அல்ஜுனிட் வட்டாரவாசி நந்தினி.
“பிறர் ஏதேனும் கேள்வி கேட்டால் தயங்காமல் பதில் கூறும் தன்மை மேம்பட்டுள்ளதைப் பார்க்கிறேன். மேலும், இங்கு வந்து பகிர்ந்துகொள்வதற்காக, திருக்குறள், ஆத்திச்சூடி, பிற சிறு கதைகளையும் படிப்பதைக் காண்கிறேன்,” என்று சொன்னார் அவர்.
தன் மகன் முகமது சாகீரை கதை கேட்க அழைத்து வரும் தாயார் சமீரா, “நாங்கள் இருவரும் வேலைக்குச் செல்வதால், கதைகள் படித்து, குழந்தைகளுக்குச் சொல்வதற்கு நேரம் கிடைப்பதில்லை. இப்போது நூல் வாசிப்பது என் மகனின் வாழ்வுடன் இணைந்துள்ளதைக் காண்கிறேன்,” என்றார்.
மகன் அதிரனை கதை நேரத்துக்கு அழைத்துவரும் காமன்வெல்த் குடியிருப்பாளர் வேணுகா மாதீஸ், “என் மகனுக்குக் கதைகளுடன் பாடல்களும் பிடித்துள்ளன. மீண்டும் மீண்டும் பாடிக்கொண்டே இருப்பார். இது அவரது உச்சரிப்புகளை மேம்படுத்தியுள்ளதாக உணர்கிறேன்,” என்று சொன்னார்.
அமர்வுகள் குறித்த மேல்விவரங்களுக்கு தேசிய நூலக வாரிய இணையத்தளத்தை நாடலாம் - https://go.gov.sg/tamil-storytelling-libraries