வலிமையே அழகு: உடலுக்கு உரம் சேர்க்கும் புரதச்சத்து

வலிமையே அழகு: உடலுக்கு உரம் சேர்க்கும் புரதச்சத்து

படம்: பிக்சாபே

24 Sep 2026 - 5:30 am

3 mins read

உணவு முதல் பானம் வரை தற்போது பேரங்காடிகளில் எங்குத் திரும்பினாலும் அனைத்திலும் புரதம் சேர்க்கப்பட்டு விற்கப்படுவதைக் காணமுடிகிறது.

முன்பொரு காலத்தில் மெலிந்த தேகத்துடன் இருப்பதே அழகு என்ற நிலை மாறி, தற்போது வலிமையான உடலமைப்பைக் கொண்டிருப்பதே சிறந்த ஆரோக்கியம் என்ற புதிய கலாசாரம் பலரிடையே உருவாகியுள்ளது.

புரதச்சத்து நிறைந்த உணவு, பானம் உண்மையிலேயே உடலுக்குத் தேவையானவையா? வெறும் வியாபாரத் தந்திரமா?

எடையைக் குறைக்க உணவில் மாற்றம்

தீவிர உடற்பயிற்சி செய்வதால் உணவில் மாவுச்சத்தைவிட மீன், கோழி, முட்டை போன்றவற்றை அதிகமாய்ச் சேர்த்துக்கொள்வதாகக் கூறுகிறார் மித்துன்.

“ஜனவரி மாதம் முதல், தேவைக்குக் குறைவான கலோரியைக் கொண்ட உணவுப் பொருள்களை உட்கொண்டு, அன்றாடம் கிட்டத்தட்ட 15,000 காலடிகள் நடந்து, வலிமைக்காக உடற்பயிற்சிகள் மேற்கொண்டு வருவதன் மூலம், நான் கிட்டத்தட்ட 13 கிலோகிராம் வரை எடையைக் குறைத்துள்ளேன்,” என்று அவர் சொன்னார்.

வழக்கத்துக்கு மாறான அளவுக்குப் புரதச்சத்து செறிவூட்டப்பட்ட பொருள்களை வாங்கியதில்லை என்றார் மித்துன்.

“வே புரோட்டீன் என்று சொல்லப்படும் பாலில் உள்ள ஒருவித இயற்கைப் புரதம், எனது முக்கியத் துணை உணவாக இருந்து வருகிறது. அதிக கலோரிகளைச் சேர்க்காமல் எனது புரதச்சத்தின் இலக்கை அடைய அது உதவுகிறது,” என்று அவர் கூறினார்.

முத்திரைகளை மட்டும் நம்பாதீர்

பாரம்பரியப் புரதச்சத்து நிறைந்த உணவுப்பொருள்களைத் தவிர, பேரங்காடிகளில் புரதச்சத்துப் பொருள்களின் விற்பனை அதிகரித்துள்ளது என்கிறார் ஆசிரியர் ஸ்ரீலக்‌‌ஷ்மி.

குழந்தைகள் பிறப்பதற்கு முன்பு, உணவுத் தெரிவுகளில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றியதில்லை.

“அண்மைக் காலமாக, நான் புரதச்சத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன். மேலும் அதுபற்றி என் குழந்தைகளிடமும் பேசுகிறேன்,” என்றார் ஸ்ரீலக்‌‌‌‌ஷ்மி.

புரதம் என்று முத்திரையிடப்பட்ட அனைத்தும் சிறந்த தெரிவாக அமைந்துவிடாது என்றும் அவர் எச்சரித்தார்.

“சத்தான உணவுப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவது கடினம் அன்று. அது குறித்த பழைய நம்பிக்கைகளை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும்,” என்றார் ஸ்ரீலக்‌‌ஷ்மி.

முழுமையான உணவா? துணை உணவா?

ஒருவருக்குச் சராசரியாக தினமும் ஏறத்தாழ 50 கிராம் முதல் 60 கிராம் வரை புரதச்சத்து தேவைப்படுகிறது.

விளையாட்டு வீரர்களுக்கும் கடுமையாக உடற்பயிற்சி செய்வோருக்கும் தசைத் திசுக்களைச் சரிசெய்ய ஒரு கிலோ எடைக்கு 1.2 கிராம் முதல் 2.0 கிராம் வரை புரதச்சத்து தேவைப்படுகிறது.

ஆனால் தொடர்ந்து புரதத்தை அதிகமாக உட்கொள்வது, எதிர்பாராத உடல் எடை அதிகரிப்பு, மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு போன்ற செரிமானப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.

புரதப் பொடிகளும் ஊட்டச்சத்து செறிவூட்டப்பட்ட பொருள்களும் ஆரோக்கியமற்றவை அல்ல என்றார் தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி பயன்பாட்டு அறிவியல் பள்ளியின் துணை இயக்குநர் கல்பனா பாஸ்கரன்.

“உணவின் மூலம் ஒருவர் தமது தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சிரமப்படும்போது புரதப் பொடி போன்ற சில பொருள்கள் வசதியாகவும் பயனுள்ளதாகவும் இருக்கக்கூடும்,” என்றார் அவர்.

பல்வேறு வகையான உணவுவகைகளுடன் புரதம் நிறைந்த பொருள்களைக் கூடுதலாகச் சேர்ப்பதற்குப் பதிலாக மற்றவற்றைச் சேர்க்கத் தொடங்கும்போதுதான் சிக்கல் எழுகிறது என்று டாக்டர் கல்பனா தெரிவித்தார்.

“புரதச்சத்து மிட்டாய் எளிதில் தேவைப்படும் புரதத்தை வழங்கக்கூடும். ஆனால் மீன், காய்கறிகள், முழுதானியங்கள் அடங்கிய ஓர் உணவு, புரதத்தை விடவும் அதிகமானவற்றை வழங்குகிறது. வசதி பார்ப்பதை விட, உணவுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

வலிமையின் தேவை

புரதச்சத்து நிறைந்த உணவுப்பொருள்கள் விலை உயர்ந்தவையாக இருந்தாலும் அவை தசைகள் மீள்வதற்குப் பெரிதும் உதவுகின்றன என்றார் வணிக உரிமையாளரும் தாயாருமான லலிதா சுப்பிரமணியம்.

“ஒரு குறிப்பிட்ட உடல் தோற்றத்தை அடையவும் அன்றாட வேலைகளை எளிதில் மேற்கொள்ளும் அளவுக்கு வலிமையைப் பெறவும் உடற்பயிற்சியில் கவனம் செலுத்தி வருகிறேன்,” என்றார் அவர்.

அதனால் முன்பைவிட இப்போது புரதச்சத்து நிறைந்த உணவுவகைகளை அதிகமாக உண்பதாகவும் காய்கறிகளைச் சேர்த்துக்கொள்வதாகவும் பகிர்ந்துகொண்டார் லலிதா.

அத்துடன், வியாபாரத்தையும் மகளையும் ஒரே நேரத்தில் கவனித்துக்கொள்வதால் சில வேளைகளில் தேவைப்படும் புரதத்தை உண்ணத் தவறவிடுவதாகவும் அவர் சொன்னார்.

“உடலுக்கு ஊட்டமளித்து அதைத் தொடர்ந்து இயங்க வைப்பதுதான் மிக முக்கியம்,” என்று லலிதா வலியுறுத்தினார்.

உணவகங்களிலும் மாறும் கலாசாரம்

உடற்பயிற்சிக் கூடத்திற்குச் செல்பவர்கள் புரதச்சத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது பொதுவான கருத்து.

இருப்பினும் இந்த ஆர்வம் அனைத்து வயதினரிடமும் இப்போது காணப்படுகிறது என்று தெரிவித்தார் காயத்ரி உணவகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ச.மகேந்திரன்.

கடந்த சில ஆண்டுகளாக வாடிக்கையாளர்கள், அதிகப் புரதச்சத்து, குறைந்த மாவுச்சத்து (கார்போஹைட்ரேட்) கொண்ட உணவுவகைகளை அதிகம் கேட்டுவருவதாகத் திரு மகேந்திரன் குறிப்பிட்டார்.

“இதனால் மக்கள் சிறந்த உணவுத் தெரிவுகளை மேற்கொள்கின்றனர்,” என்றார் அவர்.

ஆரோக்கியமான உணவுமுறை, துடிப்பான முதுமை குறித்து மக்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்கும்போது, ​​புரதச்சத்து தொடர்ந்து முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் திரு.மகேந்திரன் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
புரதம்உடலுறுதிஆரோக்கியம்உணவுஉடற்பயிற்சி