தனிமனித அமைதிவழி நல்லிணக்கத்தை வளர்க்க முயற்சி

தனிமனித அமைதிவழி நல்லிணக்கத்தை வளர்க்க முயற்சி

3 mins read
f3954431-e60c-4d44-be62-7fbe649cc624
‘சாம்பியன்ஸ் ஃபார் பீஸ்’ நிகழ்ச்சியின் ‘மனித நூலகம்’ அங்கத்தின் பங்கேற்பாளர்கள் வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். - படம்: ஹேஷ்பீஸ்

ஆசிய வட்டாரத்தில் நீடித்த அமைதிக்கான தீர்வு அக்கம்பக்கத்து இளையர்களின் அகத்திலிருந்து மலர்கிறது என்ற நிலைப்பாட்டை இங்குள்ள இளையர் நல்லிணக்க அமைப்பு முன்வைக்கிறது.

‘சாம்பியன்ஸ் ஃபார் பீஸ்’ என்ற அந்த அமைப்பு, தனது அண்மை நிகழ்ச்சியில் அடுத்த தலைமுறைக்கான அடித்தள இளையர்களைச் செதுக்கும் முயற்சியில் கவனம் செலுத்தியது.

‘ஹேஷ்பீஸ்’, ‘யூத் ஃபார் பீஸ்’ ஆகிய அமைப்புகளால் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டம், ‘உண்மையான அமைதி காத்தல்’ எப்படிப்பட்டது என்பது பற்றிய நடைமுறை சார்ந்த புரிதலை வழங்க முற்படுகிறது.

கையில் பலூன்களுடன்  காணப்படும்  இந்தப் பங்கேற்பாளர்கள் நல்லிணக்கம் வளர்ப்பதற்கான திறன்களைக் கற்று வருகின்றனர்.
கையில் பலூன்களுடன் காணப்படும் இந்தப் பங்கேற்பாளர்கள் நல்லிணக்கம் வளர்ப்பதற்கான திறன்களைக் கற்று வருகின்றனர். - படம்: ஹேஷ்பீஸ்

தெமாசெக் அறநிறுவனம், கோஃபி அனான் அறநிறுவனம், டயானா கோ அறநிறுவனம் முதலியவற்றின் ஆதரவைப் பெற்றுள்ள இந்தத் திட்டம், பரந்த ஆசியான் கட்டமைப்பின்மீது கவனம் செலுத்துகிறது.

இவ்வாண்டு ஜனவரி மாதம், ஆசியான் உறுப்பினர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு அடுத்து, அண்மை நிகழ்ச்சி ஜூன் மாதத்தில் தேசியச் சமூகத் தலைமைத்துவ நிலையத்தில் நடைபெற்றது.

ஆசியான் நாடுகளைச் சேர்ந்த இளையர்கள் பலர், ஜனவரி மாத நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஆனால், இந்த முறை சிங்கப்பூரில் வசிப்பவர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

பயிற்சிப் பிரிவுகள், சமூக நல்லிணக்கம், சுற்றுச்சூழல் ஆதரவு, மனித நூலகம் ஆகியவற்றை நிகழ்ச்சி உள்ளடக்கியிருந்தது.

மனித நூலக அங்கத்தில் பங்கேற்ற பேச்சாளர்கள் தங்களின் தனிப்பட்ட அனுபவக் கதைகளைப் பகிர்ந்துகொண்டனர். சிறுவயதில் வீடற்ற நிலை, பெற்றோரின் குடிப்பழக்கம், போதைப்பொருள் பழக்கம் ஆகியவற்றிலிருந்து அவர்கள் எவ்வாறு மீண்டுவந்தனர் என்பதைப் பகிர்ந்துகொண்டு, இளையர்களிடையே மன உறுதியைத் தூண்ட முயன்றனர்.

மேலும், உளவியல் முதலுதவிப் பயிற்சிப் பிரிவும் இடம்பெற்றது. மனநலனை ஒட்டுமொத்தச் சமூக அமைதி மேம்பாட்டுடன் இணைப்பதற்காக இந்தத் தொகுதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இதனை ‘மென்டல் ஆக்ட்’ என்ற மனநல அமைப்பின் இணை நிறுவனரும் தொழில்முறைச் சமூகப் பணியாளருமான திரு தேவானந்தன் தமிழ்செல்வி வடிவமைத்து நடத்தினார்.

 ‘மென்டல் ஆக்ட்’ (Mental Act)  இணை நிறுவனர் தேவானந்தன் தமிழ்செல்வி
 ‘மென்டல் ஆக்ட்’ (Mental Act)  இணை நிறுவனர் தேவானந்தன் தமிழ்செல்வி - படம்: ஹேஷ்பீஸ்

“உளவியல் முதலுதவி என்பது மனநலம் குறித்த நெருக்கடியில் இருக்கும் மக்களுக்குத் தேவைப்படும் முதற்கட்ட உதவியாக உள்ளது. அதிர்ச்சிகரமான சம்பவங்களை எதிர்கொள்பவர்கள் அல்லது உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் தவிப்போரைக் கையாள்பவர்களுக்காக இது நடத்தப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

சமூகத்தின் மன உறுதியும் மீண்டெழும் திறனும் எவ்வாறு கட்டமைக்கப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள இது சிறந்த வாய்ப்பாக அமைந்ததாகப் பங்கேற்பாளர்கள் கூறுகின்றனர்.

அமைதி மேம்பாட்டு முயற்சிகள், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் முறையான உளவியல் முதலுதவிப் (PFA) பயிற்சி எனத் தமது பல ஆர்வங்களை ஆராய்வதற்காகப் பகுதிநேரப் பணியாளர் ஜனனி கிருஷ்ணசாமி, 34, இந்தத் திட்டத்தில் சேர்ந்ததாகக் கூறினார்.

“பாடத்திட்டத்தைத் தாண்டி, எனது எண்ணங்களைத் தன் மதிப்பீடு செய்யவும் மனத்தை விரிவுபடுத்தவும் மற்ற ஆர்வமுள்ள இளையர்களுடன் பயனுள்ள கலந்துரையாடல்களில் ஈடுபடவும் வாய்ப்பாக இந்த நிகழ்ச்சி அமைந்தது,” என்று அவர் கூறினார்.

தற்போது தேசியச் சேவை ஆற்றவிருக்கும் டாரோ தோ யு ஹாவ், 22, மீண்டெழும் திறன் கொண்ட சிங்கப்பூரை உருவாக்க வேண்டும் என்ற தமது பார்வையைப் பகிர்ந்துகொள்ளும் பிற இளையர்களிடமிருந்து புதிய கருத்துகளைப் பெற இந்தத் திட்டத்தில் இணைந்ததாகக் கூறினார்.

“குறிப்பாக, சிங்கப்பூர் மற்றும் வெளிநாடுகளில் உள்ள மனநலம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை போன்ற பிரச்சினைகள் குறித்த எனது பார்வையை இத்திட்டம் விரிவுபடுத்தியது,” என்று டாரோ கூறினார்.

குறிப்புச் சொற்கள்