தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழ்மீது புரிந்துணர்வை ஏற்படுத்திய தமிழாசிரியர்கள் முகாம்

2 mins read
7b8d97fc-e5b7-45d1-a412-abe460b187a6
பாலர் பள்ளி, தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியர்கள் உட்பட 29 பேர் மதுரைக்கும் கொடைக்கானலுக்கும் ஒரு வாரப் பயணம் மேற்கொண்டனர். - படம்: தனபால் குமார்

சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கமும் மதுரை அமெரிக்கன் கல்லூரியும் இணைந்து கடந்த டிசம்பரில் ஒரு தமிழ்க் கற்றல் முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தன. 

கதை, கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு, மரபுக் கலைகள் மூலம் தமிழ்க் கற்றலை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை அறிய பாலர் பள்ளி, தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியர்கள் உட்பட 29 பேர் மதுரைக்கும் கொடைக்கானலுக்கும் ஒரு வாரப் பயணம் மேற்கொண்டனர்.  

ஓராண்டுத் திட்டமிடுதலுக்குப் பிறகு நடைபெற்ற இந்தக் கற்றல் முகாம், வகுப்பறையில் எவ்வாறு தமிழ்க் கற்றலை சுவாரசியமான முறையில் மாணவர்களுக்கு மாற்றியமைக்கலாம் என்று ஆசிரியர்களுக்கு ஒரு புத்தாக்க அனுபவமாக அமைந்தது என்றார் சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத்தின் தலைவர் தனபால் குமார். 

“இயல்பான கற்றல் சூழலை அறிமுகப்படுத்துவதால் தமிழாசிரியர்களுக்கு மொழி மீது புரிந்துணர்வு ஏற்படுகிறது,” என்றார் திரு தனபால். 

மயிலாட்டம், ஒயிலாட்டம், வில்லுப்பாட்டு போன்ற பழங்குடி மக்களின் மரபுக் கலைகள் மூலம் தமிழார்வத்தை மாணவர்களுக்குக் கொண்டுசேர்க்கலாம் என்பதையும் அறிந்துகொண்டனர். மேலும், தமிழர்களின் பெருமையைப் பறைசாற்றும் சிவகங்கை மாவட்டத்தின் கீழடி பகுதிக்கும் சென்றனர். 

கடந்த ஏழு ஆண்டுகளாக ஃபூஹுவா தொடக்கப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரியும் திருவாட்டி பிரதீபா வீரபாண்டியனுக்கு இது முதல் கற்றல் பயணம். கதைகள், நாடகம் மூலம் தமிழ் கற்றல் உத்திகள் தன்னை மிகவும் ஈர்த்ததாக அவர் கூறினார். 

“மாணவர்கள் கதைகள் மூலம் மொழியைப் பற்றிய சிறந்த புரிதலை வளர்த்துக்கொள்கிறார்கள். அதுமட்டுமின்றி, நாடகத்தில் மொழித்திறன் மேம்படுவதோடு குழு முயற்சி, தன்னம்பிக்கை போன்ற பண்புகளையும் கற்றுக்கொள்ளலாம்,” என்றார் அவர். 

உயர்நிலைக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மொழிபெயர்ப்பு ஒரு சிறந்த திறன். மொழிபெயர்ப்பின் முக்கியத்துவம் பற்றி எடுத்துக்கூறிய முகாமைப் பெரிதும் பாராட்டினார், உட்லண்ட்ஸ் உயர்நிலைப் பள்ளியில் எட்டு ஆண்டுகளாகப் பணிபுரியும் தமிழாசிரியர் ஞானசேகரன். 

“பல இன, மொழி சமுதாயமான சிங்கப்பூரில் மொழிபெயர்ப்புக்கான பல வாய்ப்புகள் மாணவர்களுக்கு  உள்ளன. ஒரு கதை, அல்லது கருத்தை அர்த்தம் தவறாது எப்படி மொழிபெயர்ப்பது என்ற ஆற்றல் வகுப்பறைகளில் தொடங்குவது அவசியம்,” என்று அவர் வலியுறுத்தினார். 

குறிப்புச் சொற்கள்