இளையர்களிடையே சமூக நல்லிணக்கத்தை வளர்க்கவும் எதிர்காலத் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்தவும் இளந்தளிர் தமிழ்க் கழகம், அப்தியலி தையபலி குடும்ப அறக்கட்டளையும் இணைந்து சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தின.
மேக்ஸ்வெல் சாலையில் உள்ள ‘ஹார்மனி இன் டைவர்சிட்டி கேலரி’ கருத்தரங்கு அறையில் இந்நிகழ்ச்சி அக்டோபர் 24ஆம் தேதி நடைபெற்றது.
பல இனங்களைச் சேர்ந்த மாணவர்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் நிகழ்ச்சியில் திரளாகக் கலந்துகொண்டனர்.
மாணவர்களுக்கு முழுப் பலனளிக்கும் வகையில் நிகழ்ச்சி மூன்று முக்கிய அங்கங்களாகப் பிரிக்கப்பட்டது.
நிகழ்ச்சியின் தொடக்கமாக, ‘ஹார்மனி இன் டைவர்சிட்டி கேலரி’யில் 45 நிமிட உள்ளரங்கு வழிகாட்டுச் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் இணைந்து அங்குள்ள பன்முகச் சமயப் பின்னணி, சமூக நல்லிணக்கம், கலாசார ஒற்றுமை ஆகியவற்றை விளக்கும் காட்சிக்கூடப் பகுதிகளைப் பார்வையிட்டனர்.
பல்வேறு இனங்களின் மாண்புகளைப் புரிந்துகொள்ள இந்தச் சுற்றுலா தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, மாணவர்களின் கணினி, தொழில்நுட்பத் திறனை வளர்க்கும் நோக்கில் செயற்கை நுண்ணறிவு, தகவமைப்பு கற்றல் பயிலரங்கு நடைபெற்றது.
அமைப்பின் செயற்குழு உறுப்பினர்களான ரகுநந்தன், செல்வி விஷாலினி செல்வராஜ் இருவரும் பயிலரங்கை வழிநடத்தினர்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை எவ்வாறு ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துவது, கல்வியில் கைகொடுக்கும் தகவமைப்புக் கற்றல் செயலிகள், புதிய தொழில்நுட்பக் கருவிகள் குறித்து மாணவர்களுக்குச் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியின் இறுதி அங்கமாக, அப்தியலி தையபலி குடும்ப அறக்கட்டளையின் சார்பில் 10 மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
சிங்கப்பூரின் பல்லினப் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில் மலாய், இந்திய மாணவர்கள் உள்ளிட்ட உயர்நிலைப்பள்ளி, தொழில்நுட்பக் கல்விக் கழக, பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்கள் நிதியுதவியைப் பெற்றுக்கொண்டனர்.
லோட்டஸ் இன்டர்நேஷனல் பள்ளியின் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
மாணவர்கள் புதுமையானவற்றைக் கற்றுக்கொள்வதே தங்களின் முதன்மை நோக்கம் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் நபிலா நஸ்ரின் தெரிவித்தார்.
“எங்கள் அமைப்பு முன்னெடுக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் மாணவர்கள் பங்கேற்கும்போது, அவர்கள் ஆர்வத்தோடு புதிய திறன்களைக் கற்றுக்கொண்டு பயன்பெற வேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
“சிறிய நிகழ்ச்சியாக இருந்தாலும், நல்லிணக்கச் சுற்றுலா, எதிர்கால ஏஐ அறிவு, கல்வி உதவித்தொகை என முப்பெரும் அங்கங்கள் மாணவர்களைச் சென்றடைந்ததில் மகிழ்ச்சி அடைகிறோம்,” என்று அவர் கூறினார்.
