செயற்கை நுண்ணறிவைப் பற்றி மாணவர்கள் விவாதம்

செயற்கை நுண்ணறிவைப் பற்றி மாணவர்கள் விவாதம்

3 mins read
b5ae9306-2661-4c5c-a741-62ce2ad4411e
‘நிறைவான வாழ்க்கைக்கு அவசியத் தேவை செயற்கை நுண்ணறிவா? இயற்கையோடு நூலறிவா?’ பட்டிமன்றத்திற்கு நடுவராக வழிநடத்தினார் திரு வடி PVSS. - படம்: சீனிவாசன் சமீக்‌ஷா

செய்தி: வடிவேல் பவித்ரா

கவிஞர் வைரமுத்து போல் கவிதை எழுதவும் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் போல இசையமைக்கவும் பல செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் மேம்பாடு கண்டுவரும் நிலையில், நூல்கள் மூலம் நாம் பெறும் இயற்கையறிவுக்கு ஈடாகுமா என்ற கேள்விக்குப் பட்டிமன்றம் மூலம் மாணவர்கள் விடைதேடினர்.

தமிழ்மொழி விழாவை முன்னிட்டு தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம், ‘நிறைவான வாழ்க்கைக்கு அவசியத் தேவை செயற்கை நுண்ணறிவா? இயற்கையோடு நூலறிவா?’ என்ற தலைப்பில் ஏற்பாடு செய்த பட்டிமன்றம் சனிக்கிழமை (ஏப்ரல் 18) மாலை உட்லண்டஸ் நூலகத்தில் நடைபெற்றது.

மாணவர்கள், பெற்றோர், பார்வையாளர்கள் என்று நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தமிழ் முரசு ஆசிரியர் த. ராஜசேகர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

‘செயற்கை நுண்ணறிவே!’ என்று ஒட்டிப் பேசும் அணியில் இராஜரத்தினம் சர்வினி, சுரேஷ்குமார் கார்த்திகா, திருவாட்டி அனுராதா ஆகியோரும், ‘இயற்கையோடு நூலறிவே!’ என்று வெட்டிப் பேசும் அணியில் சனாகான், கௌதம் கணேஷ்குமார், திருவாட்டி சக்திதேவி ஆகியோரும் விவாதித்தனர்.

இப்பட்டிமன்றத்தின் நடுவராக உள்ளூர் கலைஞரும் வழக்கறிஞருமான வடிவழகன் கலந்துகொண்டு நிகழ்ச்சியை நகைச்சுவையுடன் வழிநடத்திச் சென்றார்.

செயற்கை நுண்ணறிவால் வாழ்க்கை மேம்படும் வழிகளை எடுத்துரைத்தார் இராஜரத்தினம் சர்வினி.

எதிரணியின் முதல் பேச்சாளரான சனாகான், “செயற்கை நுண்ணறிவைக் கண்டுபிடித்ததே நமது இயற்கையின் நூலறிவு தானே?” என்ற கேள்வியை எழுப்பி அரங்கத்தின் பலத்த கரவொலியைப் பெற்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய சுரேஷ்குமார் கார்த்திகா, சிந்திக்கும் திறனுக்கு உந்துதல் தருவது செயற்கை நுண்ணறிவு என்று வாதிட்டார்.

அவருக்குப் பதிலடி கொடுக்கும் வண்ணம், கௌதம் கணேஷ்குமார், “நூல்கள் போன்ற வாழ்கையின் சிறு சிறு விஷயங்களை ரசித்தால்தான் நமக்கு நிறைவாக இருக்கும்,” என்றார்.

செயற்கை நுண்ணறிவால் நேரம் மிச்சமாவதுடன் திறன் மேம்படுகிறது. மேலும், வேலைகள் எளிதாகியுள்ளன என்றும் சிங்கப்பூரில் செயற்கை நுண்ணறிவுக்காகவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் பகிர்ந்துகொண்டு தனது அணியின் வாதத்தை முடித்துவைத்தார் திருவாட்டி அனுராதா.

எதிரணியின் கடைசிப் பேச்சளாரான திருவாட்டி சக்திதேவி, “செயற்கை நுண்ணறிவு என்பது அலாவுதீன் கையிலிருக்கும் அற்புத விளக்கைப் போல, கேட்கக் கேட்கக் பதில்களை அழகாகக் கொடுக்கும். ஆனால், அதைச் சரியாகக் கையாளத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே அது வரப்பிரசாதம் இல்லையெனில் அது ஒரு சாபம்,” என்று கூறி தனது வாதத்தை முடித்தார்.

இருத்தரப்பு வாதத்தையும் கேட்ட நடுவர் நிறைவான வாழ்க்கை என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடும் என்றார்.

நாம் செயற்கை நுண்ணறிவைச் சமநிலையுடன் நாட வேண்டும் என்றும் சிந்திப்பதை நிறுத்திவிடக்கூடாது என்றும் அவர் கூறினார்.

“எவ்வளவு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் வந்தாலும் நாம் இயற்கை நூலறிவோடு நம் அறிவை வளர்த்துக்கொண்டால்தான் நம்மால் செயற்கை நுண்ணறிவைச் சரியாகக் கையாள முடியும்,” என்றார் பேச்சாளர் சக்திதேவி, 45.

அப்பட்டிமன்றத்தின் பேச்சாளரான இராஜரத்தினம் சர்வினி, 14, “இளையர்கள் இது போன்ற தமிழ் நிகழ்ச்சிகள், போட்டிகள், விவாதங்களில் கலந்துகொள்ளும்போதுதான் தங்களின் தமிழ் வேருடன் மேலும் பிணைக்க முடியும்,” என்றார்.

“மாணவர்கள் தலைப்பை நன்கு புரிந்துகொண்டு, அதற்கான வாதத்தை எடுத்து வைத்தது வரவேற்கத்தக்கது,” என்றார் பார்வையாளர்களில் ஒருவரான இல்லத்தரசி முருகேசன் சிவசுந்தரி, 48.

தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் தலைவரான திரு யூசுப் ரஜித், 78, “இது போன்ற பட்டிமன்றங்களின் மூலம் தமிழ் பேசுவது நன்றாக உள்ளது என்பதை மாணவர்கள் எண்ணி தங்களின் தமிழாற்றலை வளர்த்துக்கொள்வதற்கான எண்ணமும் அவர்களிடையே எழும். அதுவே இதுபோன்ற நிகழ்ச்சிகளின் முக்கிய நோக்கமாகும்,” என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்