பேச்சு, எழுத்துத் திறன்களை வெளிப்படுத்திய மாணவர்கள்

பேச்சு, எழுத்துத் திறன்களை வெளிப்படுத்திய மாணவர்கள்

படம்: தாரகை முத்தமிழ்க் கழகம்

02 Nov 2026 - 9:45 pm

2 mins read

சிறாரின் திறன்களைச் சோதிக்கும் வகையில் தேசிய நூலகத்தில் விறுவிறுப்பான நிகழ்ச்சி ஒன்று நடந்தேறியது.

300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்ட அந்நிகழ்ச்சியில் ஐந்து போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன.

அனைத்து வயது மாணவர்களும் பங்கேற்கும் வகையில் போட்டிகள் அமைந்திருந்தன.

‘பூக்களும் பழங்களும்’ என்ற தலைப்பில் மாறுவேடப் போட்டி நடந்தது. பழங்கள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பிள்ளைகள் அழகாகப் பேசினர்.

மருத்துவர், பொறியாளர், விவசாயி போன்ற வேடங்கள் அணிந்துவந்து, தங்களின் எதிர்காலக் கனவுகளைப் பற்றிக் கூறினர்.

தொடக்கநிலை 1, 2ல் பயிலும் மாணவர்களுக்காக ‘சிறு தானியம் சிறந்த ஆரோக்கியம்’ என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி நடந்தது.

தொடக்கநிலை 4, 5 நிலைகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தைக் குறிப்பிட்டு, அதனைப் பற்றிப் பேசும் சுவாரசியமான போட்டி நடந்தது.

‘சீர்மிகு சிங்கப்பூர்’ எனும் தலைப்பில் சிறுகதை எழுதும் போட்டியில் தொடக்கநிலை 5, 6 மாணவர்கள் பங்கேற்றனர். சிங்கப்பூரில் உள்ள இடங்களைக் கண்டுபிடித்து எழுதும்படியாக அப்போட்டி அமைந்திருந்தது.

அதன்பின்னர் நடந்த  ‘சொல் அருவி’ அங்கத்தில், சாதாரண பட்டிமன்றம்போல இல்லாமல், தொடக்கநிலை 2 முதல் 6 வரை படிக்கும் ஆறு மாணவர்களின் பேச்சுத்திறன் வியக்க வைப்பதாக இருந்தது.

“மின்னணுச் சாதனங்கள் அறிவின் திறவுகோலா? வளர்ச்சியின் தடைக்கல்லா?” என்ற தலைப்பில் அவர்கள் விவாதித்தனர்.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நியமன நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹரேஷ் சிங்கராஜு, ‘எதிர்காலம் சிறுவர்கள் கையில்’ என்ற தலைப்பில் பேசினார்.

அவருடன் வந்திருந்த முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் இரா. தினகரன், மின்னணுக் கருவிகளை அதிகம் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது எப்படி என்பது தொடர்பில் நல்ல ஆலோசனைகளை வழங்கினார்.

‘எடுவில்’ என்ற செயலியை உருவாக்கிய சஞ்சய் முத்துகுமரனுக்கு விழாவில் ‘அறிவொளி விருது’ வழங்கப்பட்டது.

ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்ற ஐவர்க்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசுகளும் கிடைத்தன.

“நாளைய தலைவர்களாக ஆவதற்குமுன், மாணவர்கள் இன்றைய படைப்பாளிகள். இதுபோன்ற போட்டிகள் அவர்களின் பேச்சுத்திறனையும் எழுத்துத் திறனையும் வளர்க்க பெரிதும் உதவும்,” என்று தாரகை முத்தமிழ்க் கழகத்தின் தலைவர் அ.மஹ்ஜபீன் கூறினார். 

தமிழ்ச் சொற்களை யோசித்து, புதிருக்கான விடைகளைக் கண்டுபிடித்தது மிகவும் பிடித்திருந்தது என்று குறுக்கெழுத்துப் போட்டியில் பங்கேற்ற தொடக்கநிலை 6ல் பயிலும் தயாளகுணதாசன் ஆனந்தசயன் தெரிவித்தார். 

“அந்தப் போட்டி புதிய தமிழ்ச் சொற்களைக் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை என்னிடம் ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் தின விழாவும் மாணவர்களின் பட்டிமன்றமும் மகிழ்ச்சியுடன் கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக அமைந்தன. எங்களுக்காக இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்தும் அமைப்புக்கு நன்றி,” என்று சின்மின் தொடக்கப் பள்ளி மாணவரான அவர் கூறினார்.

தாரகை முத்தமிழ்க் கழகத்தின் குழந்தைகள் தினப் பட்டிமன்றத்தில் பங்கேற்றது தமக்கு இனிய நினைவாக அமைந்ததாக கிரீன்டேல் தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த சம்ரிதி சந்திரசேகர் தெரிவித்தார்.

“நண்பர்களுடன் சேர்ந்து தயாரானதும் மேடையில் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டதும் மிகவும் பிடித்திருந்தன. தமிழில் இன்னும் நன்றாகப் பேச வேண்டும் என்ற ஆர்வத்தை இந்த அனுபவம் எனக்குத் தந்துள்ளது,” என்று அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்