மின்விளையாட்டு வழி மொழித்திறனை வளர்த்த மாணவர்கள்

மின்விளையாட்டு வழி மொழித்திறனை வளர்த்த மாணவர்கள்

2 mins read
4b73c37c-07d4-4890-a35d-bd27312ffdb2
‘எடுவில்’ (Eduville) மின்வழித் தமிழ்மொழிக் கண்காட்சிக் கூடத்தில் புன்னகையுடன் நிற்கும் தொண்டூழியர்கள். - படம் : தாஷாயனி சுகேந்திரன்
multi-img1 of 3

மின்னிலக்க விளையாட்டுகள் வழி தமிழ் மீதான ஈடுபாட்டை வளர்க்கும் முயற்சியாக  ‘மின்வழித் தமிழ்மொழி’ கற்றல் நிகழ்ச்சி, நான்கு பாகங்களாக நடந்தேறியது. 

இவ்வாண்டு மார்ச் 28, ஏப்ரல் 4, ஏப்ரல் 11, ஏப்ரல் 25 ஆகிய நாள்களில் சிறாருக்கான நடவடிக்கைகள் இடம்பெற்றன.

கற்றல் விளையாட்டுகளை உருவாக்கும்‘ எடுவில்’ (Eduville), பல்கலைக்கழக மாணவர்கள் அமைத்த கல்வித் தொழில்நுட்ப நிறுவனம். 

இந்திய மரபுடைமை நிலையத்தில் நடத்தப்பட்ட 10 நிமிடச் சவால் விளையாட்டில் மாணவர்கள் பங்குபெற்று  $200 வரையிலான பரிசு பெறும் வாய்ப்பைப் பெற்றனர்.

தமிழ் மொழியைக் கற்றுக்கொள்வது  சவாலாக இல்லாமல், மகிழ்ச்சியான அனுபவமாக இருக்க வேண்டும் என்பதே தங்களது குழுவின் நோக்கம் என அதன் கற்றல் பிரிவுத் தலைவர்  23 வயது மூர்த்தி கௌசியாதர்ஷினி தெரிவித்தார். 

“மாணவர்கள் விளையாடிக்கொண்டே தமிழைப் பயிலும் ‘ஜாய்ஃபுல் லேர்னிங்’ முறையை இதன் மூலம் ஊக்குவிக்கிறோம். எங்களின் இந்த முயற்சி, இளைய தலைமுறையினரிடையே தமிழ் அடையாளத்தை மேலும் நிலைப்படுத்த உதவும் என்று நம்புகிறோம்,” என அவர் குறிப்பிட்டார்.

மேலும் மாணவர்கள் மின்னிலக்கத் திரையில் சொற்களைப் பொருத்துதல், மொழிபெயர்ப்புப் பயிற்சிகளைச் செய்தல் போன்ற சவால்களில் ஈடுபட்டனர். 

விளையாட்டின் மூலம் தமிழைப் பயின்றது புதிய அனுபவமாக அமைந்ததாகவும் நிகழ்ச்சி மிகவும் சுவாரசியமாக இருந்ததாகவும் யுவபாரதி அனைத்துலகப் பள்ளியில் பயிலும் 11 வயது மாணவி பிரதீப் யாழினி தெரிவித்தார்.

“குறிப்பாக, ‘தமிழ் முரசு’ நாளிதழின் வரலாறு குறித்துப் பல புதிய தகவல்களை விளையாட்டு வடிவில் கற்றுக்கொண்டது எனக்கு மிகவும் பிடித்திருந்தது,” என யாழினி கூறினார்.

குறிப்புச் சொற்கள்