மனித வாழ்வின் முதல் முன்னேற்றம் மொழி; ஒருவரிடம் இருக்கும் ஆகத் தொன்மையான பொருளும் அதுவே என்று சிங்கப்பூர்ப் பள்ளி மாணவர்களிடம் எடுத்துக்கூறினார் தமிழகக் கவிஞர் மகுடேசுவரன்.
தமிழ் முரசு நாளிதழும் கவிஞர் மகுடேசுவரன் மாணவர் பாசறை (சிங்கப்பூர்) அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த தமிழ்ப் பயிலரங்கில் கலந்துகொண்ட மாணவர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.
மாணவர்களிடம் தமிழ் ஆர்வத்தையும் பற்றையும் விதைத்து, அவர்களுக்குப் பிழையின்றித் தமிழில் எழுதக் கற்றுத்தருவது இப்பயிலரங்கின் நோக்கம்.
‘நல்ல தமிழ் எழுதுவோம்’ என்ற தலைப்பிலான பயிலரங்கு கடந்த சனிக்கிழமை (ஜூலை 11) காலை 10 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை, தோ பாயோ நார்த்தில் அமைந்துள்ள எஸ்பிஎச் நியூஸ் சென்டர் வளாகத்தில் நடைபெற்றது.
உயர்நிலை 3, 4 மற்றும் தொடக்கக் கல்லூரி மாணவர்கள் ஏறத்தாழ 30 பேர் பயிலரங்கில் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
பயிலரங்கை வழிநடத்திய கவிஞர் மகுடேசுவரன், எழுத்துத் தமிழில் நேரக்கூடிய பிழைகள் மொழியின் அழகைச் சிதைத்துவிடும் என்று குறிப்பிட்டார். எழுத்துத் தமிழில் பிழைகள் ஏற்படக்கூடிய இடங்களைச் சுட்டிக்காட்டியதுடன் எவ்வாறு கவனம் செலுத்தி அந்தப் பிழைகளைத் தவிர்க்கவேண்டும் என்ற வழிமுறைகளையும் மாணவர்களிடம் அவர் எடுத்துக்கூறினார்.
காமன்வெல்த் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த அனந்தனா ரமேஷ், 15, இப்பயிலரங்கில் திரு மகுடேசுவரன் இலக்கண விதிமுறைகளைச் சுருக்கமாகவும் எளிதில் புரியும்படியும் கற்றுத்தந்ததாகக் குறிப்பிட்டார்.
“எல்லாவற்றுக்கும் ஒரு விதிமுறை இருக்கிறது; அதை முறையாகப் பின்பற்றினால் சிறப்பாகத் தமிழில் எழுதமுடியும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது,” என்றார் அவர்.
ராஃபிள்ஸ் பெண்கள் உயர்நிலைப் பள்ளியிலிருந்து வந்திருந்த தனன்யா தசரதன், 15, ஆழமான அதேநேரம் சுவையான முறையில் அந்தப் பயிலரங்கு நடத்தப்பட்டதாகக் கூறினார். குறிப்பாக, வலி மிகும் இடங்கள், வலி மிகா இடங்களைக் கவிஞர் மகுடேசுவரன் எளிமையாக விளக்கியது தனக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும் இனி தனது பள்ளிப் பாடங்களில் அவற்றை எளிதாகப் பயன்படுத்தி எழுத முடியும் என்றும் அவர் சொன்னார்.
இந்தப் பயிலரங்கில் கலந்துகொண்டதன் மூலம் நிறைய சொற்களையும் அவற்றுக்கான பொருளையும் கற்றுக்கொண்டதாகக் கூறினார் கேலாங் மெத்தடிஸ்ட் உயர்நிலைப் பள்ளி மாணவர் ஜோஷ்வா லாரன்ஸ், 15.
அதே பள்ளியைச் சேர்ந்த 15 வயது யோகேஷ் மோகன், உயர் தமிழ்ப் பாடத்துக்கான பல சொற்களைக் கற்றுக்கொள்ள முடிந்ததாகவும் பயிலரங்கில் கலந்துகொண்டது நல்ல அனுபவமாக இருந்ததாகவும் கூறினார்.
பயிலரங்கின் ஓர் அங்கமாக மாணவர்களுக்கு ‘புளூகெட்’ (Blooket) செயலி வழியாகச் சிறிய போட்டி ஒன்றும் நடத்தப்பட்டுப் பரிசளிக்கப்பட்டது. கலந்துகொண்ட மாணவர்கள் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பயிலரங்கில் கலந்துகொண்ட மாணவர்களிடம், பல்லாயிரம் ஆண்டுகளாகப் புழக்கத்தில் இருக்கும் தமிழ் மொழியைப் பிழை களைந்து, அடுத்தடுத்த தலைமுறையினர்க்குக் கொண்டுசெல்ல வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது என்று கவிஞர் மகுடேசுவரன் வலியுறுத்தினார்.

