ஆய்வுவழியான கொள்கை உருவாக்கத்திற்கு மாற்றம் காண விழையும் சிங்கப்பூரர்

காலனித்துவ மலாயாவில் தமிழ்ப் பெண்கள்

4 mins read
93dfd21a-a225-48e3-93f8-5ed83646190a
மலேசிய ரப்பர் தோட்டப் பெண் தொழிலாளி. - படம்: லண்டன் தகவல் அலுவலகம் (Office of Information, London)

சிங்கப்பூர் - மலாயா நிலப்பகுதியில் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின்போது தோட்டங்களில் பாடுபட்டு உழைத்த தமிழ்ச் சமூகத்தினரை, குறிப்பாகப் பெண்களின் அனுபவங்களைப் பற்றிய ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆபத்து நிறைந்த, கரடுமுரடான சூழலில் மீள்திறனுடன் போராடிய அந்தப் பெண்களின் வலிமையையும் துணிச்சலையும் போற்றும் வகையில், அந்த ஆய்வையொட்டிய கண்காட்சி ஒன்று கோலாலம்பூரில் கடந்த டிசம்பர் மாதத் தொடக்கத்தில் நடைபெற்றது.

மின்னிலக்கக் கண்காட்சி, கவிதை வாசிப்பு, இசைநிகழ்ச்சி ஆகியவற்றுடன் சமூக வரலாற்று ஆய்வாளர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் அங்கமும் இடம்பெற்றது. 

பிரிட்டனின் ‘ஓபன் யுனிவர்சிட்டி’, மலாயா பல்கலைக்கழகம் ஆகியவை அந்த ஆய்வைக் கூட்டாக நடத்துகின்றன.

ஆய்வுக்குத் தலைமை தாங்கிய சிங்கப்பூரர் டாக்டர் கீதா ரெட்டியுடன் மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் சாந்தினி பிள்ளை, சன்வே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் சேலி அன் ஆகியோர் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

கோலாலம்பூரிலுள்ள ‘ஃபோர் பாய்ண்ட்ஸ் பை ஷெரட்டன்’ (Four Points by Sheraton) ஹோட்டலில் டிசம்பர் 6ஆம் தேதி ஆங்கிலத்திலும் தமிழிலும் ‘எக்ஸ்கேப் உர்மி’ என்ற (EXCAPE URMI) அந்நிகழ்ச்சி இடம்பெற்றது.

பல நேரங்களில் புறக்கணிக்கப்பட்ட, செவிசாய்க்கப்படாத குரல்களுக்கான இடத்தை அந்தக் கண்காட்சி தருவதாக மலாயா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இணை ஆய்வாளர் டாக்டர் நித்தியா குணசேகரன் தெரிவித்தார். 

“நிச்சயமின்மைக்கு இடையில் பெண்கள் எப்படி ஒருவரை ஒருவர் காப்பாற்றினர் என்பதை கண்காட்சி புலப்படுத்துகிறது,” என்றும் டாக்டர் நித்தியா கூறினார்.

அடையாளம் எனும் தொடர்கதை

மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன அடையாளங்களின் உருவாக்கத்தைப் பற்றி அறிய விரும்பி, 2011ஆம் ஆண்டு முதல் அதன் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டார் 41 வயது டாக்டர் கீதா.

காலனித்துவ ஆட்சி முடிவுக்கு வந்து பல ஆண்டுகள் ஆனபோதும் அதன் மிச்சங்கள் இன்றும் மக்களின் அன்றாட உரையாடல்களிலும் ஊடாட்டங்களிலும் தென்படுவதை அவர் சுட்டினார். 

“காலனித்துவ காலத்தின் எண்ணப்போக்குகள் தற்காலத்திலும் நிலவி வருகின்றன. குறிப்பாக, வெவ்வேறு இனத்தவரை, குறிப்பிட்ட சில விரும்பத்தகாத நடவடிக்கைகளுடன் இணைத்துப்பேசும் போக்கு.

“எடுத்துக்காட்டாக, இந்தியர்களைக் குடிகாரர்கள் என்றும் சீனர்களைச் சூதாடிகள் என்றும் குறிப்பிடும் வசைச்சொற்களால் உருவான இன அடையாளங்கள் காலனித்துவ ஆட்சியாளர்களின் நிர்வாகத்திற்கு வசதியாக இருந்தன. அதே நேரத்தில் இந்தியர்கள் பேச்சுத்திறன் கொண்டவர்கள் போன்ற நல்ல எண்ணப்போக்குகள் இன்றும் நிலவுகின்றன,” என்று அவர் கூறினார். 

தோட்டத்தில் வேலை செய்யும் பெண் தொழிலாளர்களின் வாழ்க்கைச் சூழலை ஆராய்ந்து அதனிலிருந்து கொள்கைப் பரிந்துரைகளைக் கொணர ஆய்வு ஒன்று முற்படுகிறது. 
தோட்டத்தில் வேலை செய்யும் பெண் தொழிலாளர்களின் வாழ்க்கைச் சூழலை ஆராய்ந்து அதனிலிருந்து கொள்கைப் பரிந்துரைகளைக் கொணர ஆய்வு ஒன்று முற்படுகிறது.  - படம்: லண்டன் தகவல் அலுவலகம் (Office of Information, London)

மலேசியாவின் சில பிரிவுகளிடையே தலைமுறை தலைமுறையாக நீடிக்கும் வறுமை போன்ற சிக்கலான விவகாரங்களைக் கூர்ந்து ஆராய்வதற்குத் காலனித்துவக் கோணம் சார்ந்த அணுகுமுறை தேவை என்று டாக்டர் கீதா கூறினார்.

“பொருளியலிலும் பாலினத்திலும் தகவல் உரிமையிலும் காலனித்துவத்தின் தாக்கம் இன்னும் தொடர்கிறது. தென்னிந்தியாவிலிருந்து மலேசியத் தோட்டங்களுக்குக் கொண்டுவரப்பட்ட ஏழைத் தமிழர்களின் சந்ததியினர் பலர் ஏழைகளாகவே வாழ்கின்றனர்,” என்றார் அவர்.

ஆய்வு தந்த அனுபவம்

கிட்டத்தட்ட 20 மாதங்கள் நீடித்த அந்த ஆய்வில், தற்கால மலேசியத் தோட்டங்களில் வேலைசெய்யும் 47 பெண்கள் பங்கெடுத்தனர். 

கோலாலம்பூரில் 24 பெண்களுடனும் பினாங்கில் 23 பெண்களுடனும் பேசி அவர்களின் அனுபவக் கதைகளிலிருந்து இந்த ஆய்வினர் தரவுகளைச் சேகரித்தனர்.

ஆய்வு குறித்த கலந்துரையாடல் அங்கத்தில் நிபுணர்கள் உரையாற்றுகின்றனர். 
ஆய்வு குறித்த கலந்துரையாடல் அங்கத்தில் நிபுணர்கள் உரையாற்றுகின்றனர்.  - படம்: யுவி/ மோன்யதாஸ் புரொடக்சன்ஸ்

சமுதாயத்தில் பின்தங்கி, வளர்வதற்கு வாய்ப்புகள் அதிகம் கிடைக்காமல், சிலர் குண்டர் கும்பல் நடவடிக்கை, போதைப்பொருள் போன்ற தவறான பாதைகளை நாடுவது இந்தியச் சமூகத்தின் முக்கியப் பிரச்சினையாக உள்ளது. 

சட்டச் செயலாக்க அதிகாரிகள், அடித்தட்டு இந்திய ஆடவர்களைக் கடுமையுடன் நடத்துவது ஒருபுறமிருக்க, பதற்றம் நிறைந்த அவர்களது வீட்டுச்சூழலில் பெண்களுமே வன்முறையில் அகப்படுவதாகவும் டாக்டர் கீதா தெரிவித்தார். 

மலேசியாவுடன், பிரேசில், தென்னாப்பிரிக்கா நாடுகளில் உள்ள சமூகவியல் விவகாரங்களையும் அவரது பணித்திட்டம் கையாள்கிறது.

இந்த ஆய்வு, மாறுபட்டதாகவும் புதுமையாகவும் இருப்பதாகப் பல்வேறு கல்வி நிலையங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவிப்பதாக அவர் கூறினார். 

மலேசியாவின் தற்காலத் தோட்டத் தொழிலாளிகள்.
மலேசியாவின் தற்காலத் தோட்டத் தொழிலாளிகள். - படம்: வர்ணம் மலேசியா

“ஆய்வில் பங்கேற்றவர்களின் வீட்டுச்சூழல் சரியாக இல்லாததால் எங்களைச் சந்திப்பதே சிலருக்குச் சவாலாக இருந்தது,” என்றும் அவர் குறிப்பிட்டார். 

ஆய்வுக்கு உரித்தான அறக்கட்டுப்பாட்டுகளையும் ஆய்வாளர்கள் மற்றும் பங்கேற்ற பெண்களிடம் அவர் விளக்கவேண்டியிருந்தது.

‘அனுமதி அவசியம்’ என்பது அவர்கள் வலியுறுத்திய கோட்பாடுகளில் ஒன்று. “ஆய்வின்போது ஒருவர் பகிரும் தனிப்பட்ட தகவல்களை வேறொருவர் வெளியிடக்கூடாது. அனுமதியின்றிப் புகைப்படங்களை எடுக்கக்கூடாது,” என்று அவர் கூறினார். 

பணித்திட்டத்தில் பங்கேற்ற பெண்களிடம் தங்களது மூதாதையர்கள் குறித்து கேட்கப்பட்டபோது அவர்கள் கூறிய பதில்கள் சுவையானதாகவும் ஆர்வத்தைத் தூண்டுபவையாகவும் இருப்பதாக ஆய்வு உதவியாளர் இன்ப நிலா தெரிவித்தார்.

நன்றியுணர்வுடன் முன்னோர்களின் நினைவைப் போற்றினாலும் அவர்கள் தங்கள் பெண் பிள்ளைகளைக் கூடுதலாகப் படிக்க வைத்திருக்கலாமே எனச் சிலர் ஏங்கியதையும் அவர் சுட்டினார்.

வரலாற்று ஆய்வில் உளவியல் சார்ந்த கூறுகளும் உள்ளன.
வரலாற்று ஆய்வில் உளவியல் சார்ந்த கூறுகளும் உள்ளன. - ஓவியம்: செல்வம், படம்: யுவி/ மோன்யதாஸ் புரொடக்சன்ஸ்

காலனித்துவக் காலத்தில் வாழ்ந்த மூதாதையர்களின் கண்ணோட்டம், வரலாற்றுத் தகவல்களைப் பற்றி விழிப்புணர்வு வழி நல்ல வகையில் மாற்றப்படலாம் என்பது டாக்டர் கீதாவின் நம்பிக்கை. 

காலனித்துவக் காலகட்டத்தில் கடினமான உடலுழைப்புகளில் ஆண்களுடன் பெண்களும் ஈடுபட்டனர். பாறைகளைத் தூக்கினர், தடங்களை அமைத்தனர். 

வீட்டில் பிள்ளைகளைப் பராமரித்த தொழிலாளிப் பெண்கள், சக பெண்களுக்கும் ஒத்தாசையாக இருந்தனர்.

சில நேரங்களில், காலனித்துவ அதிகாரிகள் பெண்களுக்கு அநியாயமாக மிகக் குறைவான சம்பளம் வழங்கியபோது அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்து தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

குடிப்பழக்கத்திற்கும் தீய சகவாசத்திற்கும் எதிராகப் பெண்கள் அந்தக் காலத்திலிருந்தே குரல்கொடுத்ததற்குச் சான்றுகள் பல இருந்ததாக வரலாற்று நிபுணர்கள் கூறினர். 

இவை யாவும், அந்தப் பெண்களின் வலிமைக்குச் சான்றுகளாகும் என்றார் டாக்டர் கீதா.

“அஞ்சுபவர்கள், அடிபணிபவர்கள், அயராது உழைப்பவர்கள் என்று இந்தியர்கள் பற்றிய காலனித்துவர்களது கூற்று, இன்றளவும் பிற சமூகத்தினர் இந்தியர் மீது கொண்டுள்ள கருத்தைச் செதுக்குகிறது. ஆனால் போராடும் குணமும் நமக்கு இருந்ததை ஏராளமான சான்றுகள் குறிப்பிடுகின்றன,” என்றார் டாக்டர் கீதா. 

வரலாற்று வல்லுநர்களின் அந்தப் பகிர்வுகள், ஆய்வில் பங்கேற்ற பெண்களுக்கு வியப்பு கலந்த பெருமையை ஏற்படுத்தியதாக ஆய்வாளர்கள் கூறினர்.

ஆய்வின் தாக்கம் 

பணித்திட்டம் முடிவதற்கு மேலும் மூன்று மாதங்கள் எஞ்சியிருக்கையில் இனி, ஆய்வின் முடிவுகளைக் கொண்டு இந்தியச் சமூகத்திற்கான கொள்கை வகுப்புக்கு எத்தகைய பரிந்துரைகளை வடிப்பது என்பது குறித்து கலந்துரையாடப்படும் என்று டாக்டர் கீதா கூறினார். 

பிரேசிலிலும் தென்னாப்பிரிக்காவிலும் நடத்தப்படும் ஆய்வு வழியாக வெவ்வேறு சமூகங்கள் தங்களுக்கிடையே படிப்பினைகளைப் பரிமாறிப் பயன்பெற அவர் விரும்புகிறார்.

குறிப்புச் சொற்கள்