ஈசூனில் உள்ள புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயத்தில் நடைபெற்ற பங்குனி உத்திரத் திருவிழா இவ்வாண்டு கூடுதல் சிறப்புடன் நடந்தேறியது.
பக்தர்களின் அனுபவத்தை இன்னும் மெருகேற்றின, திருவிழாவில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட தடங்கள்.
முதல் தடத்தில் காவடிகளின் பவனி சென்றன. இரண்டாம் தடத்தில் பால்குடம் ஏந்துவோருக்கு மட்டும் அனுமதி. மூன்றாம் தடம் பொதுமக்களுக்கு.
அந்த மூன்று தடங்கள் கூட்ட நெரிசலைத் தவிர்த்தன; பக்தர்களின் பயண நேரத்தைக் குறைத்தன; அனைவரின் மனத்திலும் மகிழ்ச்சியை அளித்தன.
புதன்கிழமை (ஏப்ரல் 1) புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயத்தை நோக்கி அதிகாலை மூன்று மணியளவில் புறப்பட்டது முதல் பால்குடம்.
காலை 8.30 மணியளவில் நூற்றுக்கும் அதிகமான பக்தர்கள் ஆலயத்திற்கு அருகில் உள்ள கூடாரத்தில் பால்குடம் ஏந்தி ஆலயத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்.
கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் கழித்து கூட்டம் அலைமோதத் தொடங்கியது. ஒரு புறம் உருமி மேளச் சத்தம் விண்ணை முட்டியது. பக்திப் பாடல்களில் பக்தர்கள் பரவசமடைந்தனர். வண்ண வண்ணக் காவடிகளை சிறியோர்முதல் பெரியோர்வரை ஏந்திச் சென்றனர். ‘அரோகரா! வேல் வேல்! வீர வேல்’ என்ற பக்தர்களின் முழக்கம் திரும்பும் இடமெல்லாம் எதிரொலித்தது.
பக்தர்களின் களைப்பை நீக்க தொண்டூழியர்களின் தண்ணீர்ப் பந்தல்கள் கைகொடுத்தன. கூடாரத்திலிருந்து கோயிலுக்குச் செல்லும் பாதையில் தண்ணீர்ப் பந்தல்கள் வைக்கப்பட்டிருந்தன. சைவக் கோழிச் சோறு, மோர், தண்ணீர் எனப் பலவகை உணவுகள் பக்தர்களின் பசியைப் போக்கின.
தொடர்புடைய செய்திகள்
கிட்டதட்ட 3,000 பக்தர்கள் பால் குடங்களையும் அலகுக் காவடிகளையும் ஏந்தி, நேர்த்திகடன்களைச் செலுத்தினர். பொது தரிசனத்தில் ஏறத்தாழ 3,000 பக்தர்கள் கலந்துகொண்டனர்.
சமுதாயக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரும் சுகாதார அமைச்சருமான திரு ஓங் யி காங் திருவிழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவருடன் சேர்ந்து செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களும் பக்தர்களுடன் பேசினர்.
அன்னதானத்திலும் கலந்துகொண்ட அவர்கள், பாரம்பரிய தமிழர் உணவைக் கைகளால் உண்டு ருசித்தனர்.
உள்துறை அமைச்சரும் தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு கா. சண்முகம் நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் விழாவுக்கு வருகை புரிந்திருந்தனர்.
ஆலயத்தின் முன்னோடி முயற்சியாக இவ்வாண்டு, பங்குனி உத்திரத் திருவிழா, சமூக ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்பட்டது.
“இவ்வாண்டின் பங்குனி உத்திரத் திருவிழா, வாரநாளில் அமைந்திருப்பதால் வேலைக்குச் செல்வோர் ஆலயத்தில் நடைபெற்ற இறை வழிபாட்டை நேரடி ஒளிபரப்பு மூலம் கண்டனர். மூத்தோர், உடற்குறையுள்ளோர் உள்ளிட்டவர்கள் வீட்டிலிருந்தவாறு வசதியாக வழிபாட்டைக் கண்டனர்,” என்று கூறினார் பங்குனி உத்திரத் திருவிழா ஏற்பாட்டுக் குழு உறுப்பினர் திருமதி எஸ். விக்னேஸ்வரி.
அதுமட்டுமின்றி, இவ்வாண்டு, பால் குடம் ஏந்தும் பக்தர்கள் ஒரு பெரிய பானையில் ஆலயத்திற்குக் கொண்டுசென்ற பாலை ஊற்றினர். அந்தப் பானையிலிருந்து பால் எடுக்கப்பட்டு முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
முந்தைய ஆண்டுகளில், பக்தர்கள் ஆலயத்திற்குக் கொண்டுசென்ற பால் குடங்களை தொண்டூழியர்களிடம் கொடுத்தனர். வழிபாட்டுக்குப்பின் அந்தப் பால் குடங்கள் பக்தர்களிடம் திரும்பக் கொடுக்கப்படும். கூட்ட நெரிசலைக் குறைக்கும் நோக்கில் அந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாண்டு ஆலயம் எடுத்துள்ள முயற்சிகள் சிறப்பாக இருந்ததாகத் தெரிவித்தார் 75 வயது திருவாட்டி விசாலாட்சி சின்னப்பன்.
அண்மையில் அவருக்குக் கால் உடைந்ததால் விரைவில் குணமாகிவிடவேண்டும் என்று வேண்டினார். சிகிச்சை முடிந்து ஏழு நாள்களில் குணமாகியதால் பங்குனி உத்திரத்திற்கு வந்ததாக அவர் சொன்னார்.
“என்னைப் போன்ற மூத்தோரைத் தொண்டூழியர்கள் அன்னதானம் வழங்கும் இடத்திற்குக் கைப்பிடித்து அழைத்துசென்று உணவு பரிமாறினர். அதோடு, பொதுமக்களுக்கென ஒரு தனித் தடம் அமைக்கப்பட்டுள்ளதால் மிகவும் சுமுகமாக இருந்தது,” என்றார் திருவாட்டி விசாலாட்சி.
பங்குனி உத்திரத்திற்காக முதன்முறையாக காவடி ஏந்தினார் 25 வயது திரு சந்தோஷ் பிள்ளை.
“பால் குடங்களும், காவடிகளும் ஒரே பாதையில் செல்லாததால், எவ்வித இடையூறும் இல்லை. அனைத்தும் சீராகச் சென்றது,” என்றார் அவர்.
பக்தர்களில் பலருக்குப் புது முயற்சி சிறப்பாக இருந்தாலும், ஒரு சில பக்தர்கள் ஏற்பாடுகள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என்று கருத்துரைத்தனர்.
“பொதுத் தரிசனத்திற்கு ஒரு தனி இடம் ஒதுக்கப்பட்டிருப்பது பாராட்டக்கூடியதே. ஆனால், சக்கர நாற்காலியில் வருவோருக்கு ஒரு சரிவுப்பாதையை அமைத்தால் பெரிதும் உதவும்,” என்றார் பாதுகாவலராகப் பணிபுரியும் யுவராசன் சந்திரமோகன், 35.
“காணிக்கை செலுத்துவது மிகச் சுமுகமாக இருந்தது. ஆனால், அவ்வப்போது, ஆங்காங்கே, சில நெரிசல்கள் ஏற்படுவதால், இறைவனைப் பார்ப்பதற்குச் சற்றுக் கூடுதல் நேரம் எடுக்கிறது. ஓர் இடத்தில் அதிக நேரம் நிற்கவேண்டியதாக இருந்தது,” எனக் கூறினார் அங் மோ கியோவில் குடியிருக்கும் 41 வயது முருகன் ராஜேஷ்.
திருவிழா சீராக நடப்பதை உறுதிசெய்ய, 150க்கும் மேற்பட்ட தொண்டூழியர்கள் ஈடுபட்டனர். கோயிலில் பூசைகளுக்கு உதவுவது, பக்தர்களுக்கு வழிகாட்டியாக இருப்பது, அன்னதானம் வழங்குவது எனப் பலவிதமான சேவைகளை ஆற்றினர் தொண்டூழியர்கள்.
கடந்த 20 ஆண்டுகளாகப் பங்குனி உத்திரத்தில் அன்னதானம் செய்துவருவதாகக் கூறினார் குமாரி ஶ்ரீ பத்மாவதி தேவி, 25.
“வெயிலில் நின்று வேண்டுதலைச் செலுத்திவிட்டு வந்த பக்தர்களுக்கு உணவு பறிமாறுவது மகிழ்ச்சியாகவும் அர்த்தமுள்ளதாகவும் உள்ளது,” என்றார் தாதியாகப் பணிபுரியும் பத்மாவதி.
வெயிலில் நடப்பதால், சாலையில் நடப்பது பக்தர்களுக்குக் கடினமாக இருப்பதைக் கவனித்து, சில தொண்டூழியர்கள் சாலையில் தண்ணீர்ப் பாய்ச்சும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.
“செருப்பின்றி நடந்து வரும்போது, கால்களில் தண்ணீர்படும்போது, அது அவர்களுக்கு மிகவும் இதமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். கடவுளுக்குச் செய்யும் தொண்டைப் போல் நான் இதைப் பார்க்கிறேன்,” என்றார் தொண்டூழியர் திரு முருகேசன் மனோகரன், 46.
ஆயதப்படை குழுவினர்கள் சேர்ந்து, கிட்டதட்ட 23 ஆண்டுகளாகத் தண்ணீர்ப் பந்தலை நடத்திவருகின்றனர்.
“அவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பது எங்களுக்குக் குளிர்ச்சியாக இருக்கிறது,” என்றார் தண்ணீர்ப் பந்தலில் உதவிய தொண்டூழியர் திரு பரமசிவன், 62.

