தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பக்கவாதத்தின் பிடியிலிருந்து தப்பி மறுபிறவி எடுத்த போராளிகள்

4 mins read
a5d24b10-cf3d-4aa9-858b-275b1ee7f765
சிங்கப்பூரில் இறப்புக்கான நான்காவது முக்கியக் காரணமாகவும் பெரியவர்களில் இயலாமைக்கான ஏழாவது முக்கியக் காரணமாகவும் பக்கவாதம் விளங்குகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தீராத காய்ச்சலால் 1977ஆம் ஆண்டு சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஃபைத் சுபத்திரா, 71.

எலும்பு மஜ்ஜைப் பரிசோதனை மூலம் அவர் ‘லூபஸ்’ நோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

சுபத்திராவின் உடலில் உள்ள நோயெதிர்ப்பு மண்டலமே, உடலிலுள்ள மற்ற திசுக்களையும் உறுப்புகளையும் தாக்கத் தொடங்கியது. அப்போது அவருக்கு 24 வயதுதான்.

“நான் எப்படி உயிர் பிழைத்தேன் என்று எனக்குத் தெரியவில்லை,” என்று நினைவுகூர்ந்தார் சுபத்திரா.

தம் வாழ்நாள் முழுவதும் லூபஸ் காரணமாக மூட்டு வலியாலும், தீராக் காய்ச்சலாலும், சோர்வாலும் அவர் அவதியுற்றார்.

இடுப்பு மாற்றத்துக்காக 2006ஆம் ஆண்டு சுபத்திரா அறுவைசிகிச்சை மேற்கொண்டார். சிகிச்சைக்குப் பின் நன்றாக இருந்த சுபத்திராவின் வாழ்க்கை திசைமாறியது.

பக்கவாதமும் தாக்க, சுபத்திரா ‘கோமா’ நிலைக்குச் சென்றார்.

“நான் குணமடைவேனா என்று மருத்துவர்க்கும் தெரியவில்லை,” என்றார் இவர்.

“என்னை எனக்கே அடையாளம் தெரியாதபடி என் தலைமுடியை மழித்து மொட்டையடித்தனர்,” என்று சிரித்தவாறே கூறினார் சுபத்திரா.

ஆனால், வலி மட்டும் அவரை விடாமல் பற்றிக்கொண்டு வாட்டியது.

“இது எனக்கு ஏன் நடந்தது, எதற்கு நான் தொடர்ந்து வாழவேண்டும் எனக் கேட்டு, பலமுறை நான் அழுததுண்டு,” என்றார் அவர்.

இருப்பினும், சுறுசுறுப்பான வாழ்க்கைமுறையைக் கடைப்பிடித்துவந்த சுபத்திரா மனம் தளரவில்லை; எதுவாக இருந்தாலும் தொடர்ந்து முன்னோக்கிச் செல்ல முடிவு செய்தார்.

பக்கவாதம் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டபோதும் மனந்தளராத சுபத்திரா.
பக்கவாதம் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டபோதும் மனந்தளராத சுபத்திரா. - படம்: செயின்ட் லியூக் மூத்தோர் பராமரிப்பு நிலையம்

செயின்ட் லியூக் மூத்தோர் பராமரிப்பு நிலையத்தில் 2017ஆம் ஆண்டில் சேர்ந்த சுபத்திரா தற்போது அங்குள்ள மருத்துவர்கள், பராமரிப்பாளர்கள் உதவியுடன் மெல்ல மீண்டு வருகிறார்.

சில நாள்கள் நன்றாக இருக்கும், சில நாள்கள் அதேபோல இருக்காது என்கிறார் அவர்.

“ஆனால், இப்போது என்னால் குறைந்த வலியுடன் மேலும் நடக்க முடிகிறது. அது எனக்கு நம்பிக்கையைத் தருகிறது,” என்று அவர் கூறினார்.

சுபத்திராவுக்கு வண்ணம் தீட்டுவது பிடிக்கும். தாம் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள ஒரு பராமரிப்பு நிலையத்தில் அவர், மற்ற மூத்தவர்களுடன் சேர்ந்து வண்ணம் தீட்டி மகிழ்வார்.

தம்மைவிட மோசமாகப் பாதிக்கப்பட்ட நோயாளிகளை சுபத்திரா சந்தித்துள்ளார்.

“அவர்களுடைய பிரச்சினைகளுடன் ஒப்பிடும்போது எனது பிரச்சினைகள் சிறியவை என்று நான் சில நேரங்களில் உணர்வதுண்டு. எதுவாயினும் நம்பிக்கையைக் கைவிடாதீர்கள் என்று நான் அவர்களிடம் அடிக்கடி கூறுவேன்,” என்றார் அவர்.

பேச்சில் தெளிவின்மை, கைகளில் வலுவின்மை, தொங்கிப்போகும் முகம் போன்ற அறிகுறிகள் பக்கவாதத்தைக் குறிக்கின்றன.

சிங்கப்பூரில் இறப்புக்கான நான்காவது முக்கியக் காரணமாகவும் பெரியவர்களில் இயலாமைக்கான ஏழாவது முக்கியக் காரணமாகவும் பக்கவாதம் உள்ளது என்று உலக பக்கவாத அமைப்பு கண்டறிந்துள்ளது.

‘மனவுறுதியை இழக்காது கற்றுக்கொள்வதே வாழ்க்கை’

சுபத்திராபோல பக்கவாதத்தால் அவதிப்பட்டார் ஜோசஃப் என மற்றவர்களால் அழைக்கப்படும் பன்னீர்செல்வம் துரைராஜு , 61.

கடந்த 25 ஆண்டுகளாக கடல் பொறியாளராக பணிபுரிந்த ஜோசஃப், 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார்.

சாப்பிடவும், எழுதவும், பொருள்களைப் பிடிக்கவும் பெரும்பாலும் தமது வலக்கையைப் பயன்படுத்தி வந்த ஜோசஃப்புக்கு உடலின் வலப்பக்கம் முழுவதும் உணர்விழந்தது.

“என் குடும்பத்தை எப்படித் தொடர்ந்து ஆதரிப்பது என்று எனக்குத் தெரியவில்லை,” என்றார் அவர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு, ஜோசஃப் வீடு திரும்பினார். பக்கவாதத்தால் அவருக்கு உடல்சார்ந்த குறைபாடுகள் இருந்தபோதிலும், அவர் தம் மனவுறுதியை இழக்கவில்லை.

“குளிப்பது, சாப்பிடுவது போன்ற எல்லா வேலைகளும் நானே செய்ய விரும்புவதாக என் மனைவியிடம் தெரிவித்தேன்,” என்று அவர் சொன்னார்.

அதே சமயம் தன் குடும்பத்தைப் பார்த்துக்கொள்வதற்காக ஜோசஃப் வேலை தேடத் தொடங்கினார். தம் மூத்த மகளின் உந்துதலால் சிங்கப்பூரில் உடற்குறையுள்ளோருக்குச் சேவையாற்றும் ‘எஸ்பிடி’ (SPD) அறநிறுவனத்தில் சேர்ந்தார்.

எஸ்பிடிவழி தன்னம்பிக்கையுடன் இடக்கையால் தட்டச்சு செய்து கணினியைக் பயன்படுத்த அவர் கற்றுக்கொண்டார்.

தேசியத் தொழிற்சங்க காங்கிரஸ் தலைமைச் செயலாளர் இங் சீ மெங்குடன் (வலமிருந்து 2வது) உணவருந்தும் ஜோசஃப் (வலக்கோடி).
தேசியத் தொழிற்சங்க காங்கிரஸ் தலைமைச் செயலாளர் இங் சீ மெங்குடன் (வலமிருந்து 2வது) உணவருந்தும் ஜோசஃப் (வலக்கோடி). - படம்: சாவ்பாவ்

இவ்வாண்டுத் தொடக்கத்தில் மண்டாய் ரெய்ன்ஃபாரஸ்ட் ஓய்வு விடுதி திறப்புக்குழுவில் சேர்ந்தார் ஜோசஃப்.

உணவு பானங்கள் மற்றும் சார்புத் தொழிலாளர் சங்கம், தொழிற்சங்கத்தின் இ2ஐ (வேலை நியமன, வேலைத்தகுதிக் கழகம்) இணைந்து மண்டாய் ரெய்ன்ஃபாரஸ்ட் ஓய்வு விடுதியுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் திங்கட்கிழமை (அக்டோபர் 27) கையெழுத்திட்டன.

அதன் ஒரு பகுதியாக சிறப்புத் தேவைகள் கொண்ட, உடற்குறையுள்ள ஊழியர்களை மண்டாய் ரெய்ன்ஃபாரஸ்ட் ஓய்வு விடுதி உள்ளடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவர்களில் ஒருவராக சேர்ந்த ஜோசஃப் அன்றாடம் சீருடைகளைச் சரிபார்த்து, அவற்றைச் சலவைக்கு அனுப்புவார்.

“எதுவாக இருந்தாலும் சவால்கள் உள்ளன. அவற்றைக் கையாண்டு தொடர்ந்து புதியனவற்றைக் கற்றுக்கொள்வதுதான் வாழ்க்கை,” என்கிறார் ஜோசஃப்.

‘உன் நாடு உனக்கு என்ன செய்யும் என்று கேட்காதே, உன் நாட்டிற்கு நீ என்ன செய்ய முடியும் என்று கேள்,’ என்ற முன்னாள் அமெரிக்க அதிபர் ஜான் எஃப். கென்னடியின் பொன்மொழியை எல்லாரும் பின்பற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

“வீழ்ந்தாலும் மனந்தளராது தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும்,” என்கிறார் ஜோசஃப்.

குறிப்புச் சொற்கள்