சிங்கப்பூரின் வீவக வீடுகளில் தீபாவளிப் பண்டிகை என்பது வாசல் கோலங்களாலும், விளக்கொளியாலும், புத்தாடைகளின் மினுமினுப்பாலும் விடியும். ஆனால், திருமதி புவனேஸ்வரி தனபாலனின் வீட்டில் தீபாவளி என்பது அவரது அடுக்களையில் அடுப்பின் மீது வைக்கப்படும் அந்தப் பழைய, கருப்பு நிற இரும்புச் சட்டியின் ஓசையுடன் ஆரம்பிக்கின்றது.
அதுவே அவர்கள் இல்லத்திற்குப் பண்டிகைக் காலத்தின் முதல் அழைப்புமணி.
வசதிகளும் இயந்திரங்களும் மலிந்துவிட்ட நவீன சிங்கப்பூரின் அவசரச் சூழலில், கடைகளில் விற்கும் பலகாரங்களை நாடாமல், 34 ஆண்டுகளாகத் தன் கைப்படவே பாரம்பரியப் பலகாரங்களைச் சுட்டெடுத்துக் குடும்பத்தை அன்பால் பிணைத்து வைத்திருக்கிறார் இந்த 64 வயது இல்லத்தரசி.
அவர் கையில் ஏந்தியிருப்பது வெறும் சட்டி அல்ல. 34 ஆண்டுகளுக்கு முன்பு மாமியார் கொடுத்த சீதனம்.
“இது என் மாமியார் திருவாட்டி கருப்பாயி கொடுத்த சட்டி. இந்த அச்சு முறுக்கு அச்சும் அவர்கள் கொடுத்ததுதான். ‘பத்திரமாக வைத்துக்கொள்’ என்று கொடுத்தார்கள். மாமியார் கொடுத்த ஒரு பானையும் உண்டு. நெளிந்து போயிருந்தாலும் நெய்ச்சோறு, பிரியாணி எல்லாம் அந்தப் பானையில் தான் ஆக்குவேன்,” என்று விவரித்தார் அவர்.
கடையில் கிடைக்காத தீபாவளி
“சிறுபிள்ளையாக இருக்கும் போதே எங்கள் வீட்டிலும் கடைகளில் பலகாரம் வாங்கும் பழக்கம் கிடையாது. முறுக்கு, அச்சு முறுக்கு எதுவாக இருந்தாலும் வீட்டில் தான் செய்வோம். கல்யாணமாகி வந்த பிறகும் அதே பழக்கத்தை கடைப்பிடிக்கிறேன்,” என்று சொல்லும் புவனேஸ்வரி, வருடா வருடம் முதலில் பலகாரம் குவே டார்ட்.
பிறகு நெய் உருண்டைக்குப் பருப்பு வறுப்பது, முறுக்கு மாவு அரைப்பது என்று ஐந்து வகை பலகாரங்கள் செய்கிறார்.
“ஒவ்வோர் ஆண்டும் பலகாரம் செய்து மாமியார் வீட்டுக்கும் கொடுப்பேன். அவர்கள் படையல் போடுவதற்கு ஏதுவாக ஐவகை பலகாரங்களை முன்கூட்டியே செய்துகொடுப்பது வழக்கம். அது எனக்கு பெரிய மனத்திருப்தி,” என்று புவனேஸ்வரி கூறினார்.
தீபாவளிக்காக செய்து வைக்கப்பட்டிருந்த நெய் உருண்டை பற்றி கேட்டதும் புவனேஸ்வரியின் கண்கள் கலங்கிவிட்டன.
33 ஆண்டுகளுக்கு முன்பு, ‘மாமி, எனக்கு நெய் உருண்டை செய்யக் கற்றுக்கொடுங்கள்’ என்று கேட்டேன். பருப்பை வறுத்து அரைத்துக் கொண்டு போனேன். அவர் சூடான நெய்யை ஊற்றிச் சுடச்சுட உருண்டை பிடிப்பார். நம் விரல்கள் சூட்டைத் தாங்காது. ஆனால் அவர் அவ்வளவு அழகாக, சிறியதாகப் பிடிப்பார். அவரிடம் கற்றுக் கொண்டதுதான் இது,” என்று அவர் ஆவலுடன் விவரித்தார்.
“இப்போது மாமிக்கு வயதாகி உடல்நலம் சரியில்லாமல் போனதால் முன்புபோல் நடமாடவோ, பேசவோ முடிவதில்லை. அது சற்று மனதிற்கு வருத்தமாக இருக்கிறது. ஆனால் என் நெய் உருண்டையைச் சாப்பிட்டுவிட்டு, ‘நான் சொல்லிக் கொடுத்த மாதிரியே நன்றாகச் செய்திருக்கிறாய்’ என்று சொல்வார். அதுதான் எனக்குப் பெரிய ஆனந்தம்” என்று பூரித்தார் அவர்.
சட்டி என் பெரிய மகனுக்குத்தான்
இந்தச் சட்டி என்னிடம் 34 ஆண்டுகளாக இருக்கிறது. நான் இருக்கும் வரை நானே பயன்படுத்துவேன். எனக்குப் பிறகு என் பெரிய மகனுக்குத்தான் இதைக் கொடுக்க வேண்டும் என்று இருக்கிறேன்.
‘‘மகன் சமையலில் கைதேர்ந்தவன். என் நகை, மற்ற பொருள்களை வேண்டுமானால் என் மகள், மருமகள் எடுத்துக்கொள்ளட்டும். ஆனால் இந்தச் சட்டி பெரிய மகனுக்குத்தான். யாரும் கேட்டதில்லை. கேட்டாலும் கொடுக்க மாட்டேன்” என்று சிரித்தார் புவனேஸ்.
அதைக் கேட்டுக்கொண்டிருந்த மகன் கணபதி, 31, “அந்தச் சட்டி அம்மாவுக்கு எவ்வளவு பிடிக்கும் என்று எனக்குத் தெரியும். அம்மா என்னிடம் கொடுத்தால் அதை நான் மிகவும் பத்திரமாகப் பாதுகாத்துப் பயன்படுத்துவேன், என்று நெகிழ்கிறார்.
உப்பு போடும்போதுகூட வேண்டிக்கொள்வேன்
‘‘என் கணவர் ‘அன்புடன் சமைக்க வேண்டும் என்று சொல்வார். நான் உப்பு போடும்போதெல்லாம் ‘என் பிள்ளைகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், ஆரோக்கியமாக இருக்க வேண்டும்’ என்று மனதார நினைத்துத்தான் போடுவேன்,” என்றார் புவனேஸ்வரி.
“முன்பெல்லாம் ஒரே நேரத்தில் 3 கிலோ மாவு பிசைவோம். இப்போது சற்று மெதுவாகிவிட்டேன். இரண்டு முறை பிரித்துத்தான் செய்ய முடிகிறது,” என்றும் அவர் சொன்னார்.
மகள் துர்கா தனபாலன், “எனக்குப் பலகாரம் செய்யத் தெரியாது. அம்மா செய்வதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் நான் எப்போதுமே வீட்டைச் சுத்தம் செய்யும் வேலையைத்தான் செய்வேன். தம்பிதான் அம்மாவுடன் சேர்ந்து மாவு பிசைவது போன்ற உதவிகளைச் செய்வார். பலகாரம் தயாரானதும் முதலில் ருசி பார்ப்பது நான்தான்,’’ என்றார்.
திருமதி புவனேசிடம் “இந்தப் பலகாரம் சுவையைத் தாண்டி என்ன தருகிறது?” என்று கேட்டபோது. “இதில் உழைப்பு மட்டுமல்ல; அளவுகடந்த அன்பும் பாசமும் இருக்கிறது. இந்த பாத்திரங்களுக்குள் நான் அடைத்து வைத்திருப்பது வெறும் இனிப்புகளை அல்ல, என் மொத்தக் குடும்பத்தின் மீதான பாசத்தை,” என்று கூறி நிறைவு செய்தார்.
