வாழ்க்கையின் கடைசி ஆசைக்கு இனிப்பூட்டிய சமூகம்

வாழ்க்கையின் கடைசி ஆசைக்கு இனிப்பூட்டிய சமூகம்

2 mins read
சிவாணி சக்திவேல் 
60923a7b-1193-4bd4-8107-d15fa568801a
நிகழ்ச்சியை ஏற்று நடத்திய குழுவினர். - படம்: சிவாணி சக்திவேல் 
multi-img1 of 2

வாழ்க்கைப் பயணத்தின் இறுதிக் கட்டத்தில் நிற்கும் மனிதர்களின் கடைசி ஆசைகளை நிறைவேற்றும் உன்னத முயற்சியில் கைதேர்ந்த உள்ளூர் கேக் கலைஞர்கள் 18 பேர் கைகோத்துள்ளனர்.

அரிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் இறுதி நாள்களை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் மாற்ற முயலும் ‘ஆம்புலன்ஸ் விஷ் சிங்கப்பூர்’ அமைப்பிற்கு ஆதரவாக, ‘கேக்ஸ் ஃபார் ஏ காஸ்’ நிதிதிரட்டு நிகழ்ச்சி ஜூலை 11ஆம் தேதியன்று நடைபெற்றது.

வாழ்க்கையின் இக்கட்டான சூழலில் அவதியுறுவோர்க்கு ஆறுதல் அளிக்கும் அந்த அமைப்பின் பணிகளை இந்நிகழ்ச்சி சமூகத்திற்கு வெளிச்சமிட்டுக் காட்டியது.

முன்னணி உள்ளூர் பேக்கரிகள் சில 40க்கும் மேற்பட்ட தனித்துவமான கேக் வகைகளுடன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றன.

நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட கேக் வகைகளில் ஒன்று.
நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட கேக் வகைகளில் ஒன்று. - படம்: சிவாணி சக்திவேல் 

ஹலால் சான்றளிக்கப்பட்டவை, தனித்துவமான உணவுக் கட்டுப்பாடுகள் கொண்டோருக்கான தெரிவுகள் எனச் சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்புடையதாக நிகழ்ச்சி அமைந்திருந்தது.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒவ்வொருவருக்கும் மூன்று துண்டு கேக்குகளுடன், ‘இயோஸ்’ நிறுவனத்தின் இலவச பானமும் வழங்கப்பட்டது.

“நோயாளி ஒருவரின் இறுதி ஆசையை நிறைவேற்றுவது, அவருக்கும் அவருடைய குடும்பத்தினர்க்கும் மிகுந்த மன நிம்மதியையும் ஆறுதலையும் தரக்கூடும். நாம் சுவைக்கும் ஒரு சிறிய இனிப்பு, ஒருவரின் வாழ்வில் மாறாத நினைவாக நிலைத்து நிற்கும்,” என ஆம்புலன்ஸ் விஷ் சிங்கப்பூரின் நிர்வாக இயக்குநர் மர்யா மாலெக் குறிப்பிட்டார்.

2019ல் தொடங்கப்பட்ட ‘ஆம்புலன்ஸ் விஷ் சிங்கப்பூர்’, ஓராண்டிற்கும் குறைவான வாழ்நாளைக் கொண்ட நோயாளிகளின் ஆசைகளை, ‘ஆசைகளை நிறைவேற்றுவோம், வாழ்க்கையைக் கொண்டாடுவோம்’ என்ற கருப்பொருளில், தொண்டூழியர்களின் உதவியுடன் நிறைவேற்றி வருகிறது.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தங்களுக்குப் பிடித்த கேக் வகைகளைத் தெரிவுசெய்யும் மக்கள்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தங்களுக்குப் பிடித்த கேக் வகைகளைத் தெரிவுசெய்யும் மக்கள். - படம்: சிவாணி சக்திவேல் 

இந்நிகழ்வு நிறைவுற்றாலும் சக மனிதர்களின் துயர் துடைக்க சமூகம் நீட்டிய அன்புக் கரங்களும், அதில் வெளிப்பட்ட மனிதநேயமும் என்றும் நிலைத்திருக்கும் என்று ஏற்பாட்டாளர்கள் நம்புகின்றனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்