தீபாவளியிலும் ஒளி சிந்தாத தையல் தொழில்

தீபாவளியிலும் ஒளி சிந்தாத தையல் தொழில்

1 of 2
படம்: சுந்தர நடராஜ்
படம்: சுந்தர நடராஜ்

08 Nov 2026 - 6:00 am

2 mins read

காமாட்சி சந்திரசேகர்

தீபாவளித் திருநாளன்று புத்தாடை அணிவது தொன்றுதொட்டுவரும் மரபு. அந்த மரபின் பின்னால் மறைந்திருக்கிறது தையற்காரர்களின் கலையும் தொழிலும்.

பண்டிகைக் காலங்களில் வாடிக்கையாளர்கள் புத்தாடை அணிந்து மகிழ்ச்சியுடன் வலம்வர தையற்கலைஞர்கள் முக்கியக் காரணமாகத் திகழ்கின்றனர். அவர்களின் கைவண்ணம் கொண்டாட்டங்களை ஒளிமயமானதாக்குகிறது.

இருப்பினும், ஆடைத்துறையும் காலத்திற்கு ஏற்ப வேகமாக மாறிக்கொண்டே இருப்பதால் சொந்தமாகத் தையல் தொழில்செய்வோரின் நிலை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. ஆயத்த ஆடைகள். புதுப்புது வடிவமைப்புகள், மக்களின் விருப்பங்கள், சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தும் புதிய பாணிகள் எனப் பல்வேறு காரணங்களால் மக்கள் தையல் சேவைகளை நாடுவது குறைந்து வருகிறது.

விலைவாசி உயர்வும் நேரப் பற்றாக்குறையும் மக்களின் போக்கை மாற்றிவருகின்றன. அவை தையல் வணிகத்தைப் பெரிதளவில் பாதித்து வருகின்றன.

குறிப்பாக, கடந்த ஆண்டுகளை ஒப்பிட இவ்வாண்டு தீபாவளிக் காலத்தில் தொழில் மந்தமாகவே இருப்பதாகத் தையற்காரர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

தம் மனைவியுடன் தேக்கா சந்தையில் ‘எஸ்.ஜி தமிழ்’ என்ற தையற்கடையை நடத்தி வருகிறார் திரு கருப்பையா செல்வம், 46.

“சென்ற ஆண்டைவிட இம்முறை தொழில் மந்தமாகவே உள்ளது. பலர் கடைகளுக்குச் சென்று உடை வாங்குவதற்கு நேரம் இல்லாததால் இணையவழிச் சேவையை நாடுகின்றனர். அத்துடன், தற்போது பலரும் ஆயத்த ஆடைகளை விரும்புவதால் தையலுக்கான தேவையும் குறைந்துவிட்டது,” என்று திரு கருப்பையா கூறினார்.

‘திரீ ஸ்டார்ஸ்’ தையல் கடையின் நிறுவனரான திருவாட்டி கோமதி, 61, “வெளிநாடுகளுக்குச் சென்று, குறிப்பாக இந்தியாவிற்குச் சென்று ஆடைகள் வாங்கும் போக்கு அதிகரித்துள்ளதும் உள்ளூரில் எங்களைப் போன்ற தையற்கலைஞர்களின் தொழிலை நலிவடையச் செய்வதாக நினைக்கிறேன்,” என்றார்.

இந்நிலையில், தீபாவளி நெருங்கிவிட்ட நிலையில் தையல் தொழிலும் சற்றே சூடுபிடித்து வருகிறது.

“பெரும்பாலும் எளிதில் உடுத்திக்கொள்ளும்படியான சேலைகள், சமூக ஊடகங்களில் பிரபலமாகிவரும் உடை வடிவங்கள் என நவீன காலத்திற்கேற்ப புத்தம்புது பாணியிலேயே மக்கள் ஆடைகளைத் தைக்கக் கொடுக்கின்றனர். தீபாவளிக்காக கடைசி நேரத்தில் வரும் வாடிக்கையாளர்களுக்காக சில நாள்களில் இரவு கண்விழித்து உடைகளைத் தைத்துக் கொடுக்கிறோம்,” என்றார் ‘பாடி பிட் ஃபேஷன்’ கடை ஊழியர் ராதாகிருஷ்ணன் வடிவேல், 46. கடந்த 25 ஆண்டுகளாக அவர் தையல் தொழில் செய்துவருகிறார்.

துணி எடுத்துத் தைத்து உடுத்தும் பழக்கம் பெரிதும் குறைந்துவிட்டாலும் இன்றும் சிலர் அம்முறையையே விரும்புகின்றனர்.

“தற்போது ஆயத்த ஆடைகள் பெருகிவிட்டாலும், முறையாக அளவெடுத்துத் தைத்து உடுத்துவதில்தான் எனக்கு மனநிறைவு. பெரும்பாலும் இந்தியாவில் சேலைகளை வாங்கி, அதற்கான மேலாடையை இங்கோ ஜோகூர் பாருவிலோ தைத்துக்கொள்வேன்,” என்று கூறினார் திருவாட்டி நிஷா.

“மற்றப் பொருள்கள், சேவைகளைப் போன்றே தையல் கட்டணமும் கூடிவிட்டது. இருப்பினும், பண்டிகைகளுக்கோ முக்கிய நிகழ்வுகளுக்கோ உடைகளைத் தைத்து வாங்க நான் தயங்குவதில்லை. தையற்கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவான ஆடைகளை உடுத்தும்போதுதான் வடிவாக இருக்கிறது,” என்கிறார் திருவாட்டி இந்திரா அர்த்தனாரி, 60.

குறிப்புச் சொற்கள்