காற்பந்து மூலம் இளையர்களை ஈர்க்கும் தமிழர் சங்கம்

காற்பந்து மூலம் இளையர்களை ஈர்க்கும் தமிழர் சங்கம்

2 mins read
5bf95b50-98a0-427f-8de8-5be102864eea
சிங்கப்பூர்த் தமிழர் சங்கம் ஏற்பாடு செய்த ‘எஸ்டிஏ கோப்பா’ காற்பந்துப் போட்டியில் வென்ற ‘நமோர்’ அணி. - படம்: கிறிஸ்டோ லியோன்

இளையரை விளையாட்டின் மூலம் ஒன்றிணைக்கும் நோக்கில் சிங்கப்பூர்த் தமிழர் சங்கம் ஏற்பாடு செய்த ‘எஸ்டிஏ கோப்பா’ காற்பந்துப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 13) நடைபெற்றது.

இரண்டாவது ஆண்டாக நடைபெற்ற இப்போட்டியில் 21 வயதுக்குட்பட்ட இளையரைக் கொண்ட 18 அணிகள் பங்கேற்றன. பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த இளையரை ஒன்றிணைப்பதுடன், நட்பு, குழு ஒற்றுமை, சமூக உணர்வு ஆகியவற்றை வளர்ப்பதே இதன் நோக்கம்.

போட்டியில் வெற்றி பெற்ற ‘நமொர்’ அணியைச் சேர்ந்த 19 வயது ஆகாஷ் ராஜ்.
போட்டியில் வெற்றி பெற்ற ‘நமொர்’ அணியைச் சேர்ந்த 19 வயது ஆகாஷ் ராஜ். - படம்: கிறிஸ்டோ லியோன்

“காற்பந்து விளையாட்டின் வாயிலாக கற்றுக்கொள்ளும் பண்புகளை அன்றாட வாழ்க்கையிலும் பயன்படுத்தலாம். மற்றவர்களை மதிப்பது, அவர்களின் மாறுபட்ட கருத்துகளைக் கருத்தில் கொள்வது ஆகியவை அவற்றில் அடங்கும். இதுபோன்ற விளையாட்டுகளின் மூலம் கற்றுக்கொள்ளும் மதிப்புகள் ஒருவரின் பண்பை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன,” என்றார் போட்டியில் வெற்றி பெற்ற ‘நமோர்’ அணியைச் சேர்ந்த ஆகாஷ் ராஜ், 19.

நிகழ்ச்சியில் தொண்டூழியராகப் பங்கேற்ற 13 வயது ஏசாயா ஜெரார்டு பிரித்திவராஜ், ஆட்டங்களைப் பார்த்து கற்றுக்கொண்டதையும் பகிர்ந்துகொண்டார்.

காற்பந்து நிகழ்ச்சியில் தொண்டூழியராகப் பங்கேற்ற 13 வயது ஏசாயா ஜெரார்டு பிரித்திவராஜ்.
காற்பந்து நிகழ்ச்சியில் தொண்டூழியராகப் பங்கேற்ற 13 வயது ஏசாயா ஜெரார்டு பிரித்திவராஜ். - படம்: கிறிஸ்டோ லியோன்

“நான் விளையாடவில்லை. ஆட்டங்களை ரசித்தவாறே எதிரணியை மதிப்பது எப்படி என்பதைத் தெரிந்துகொண்டேன். இதுபோன்ற நிகழ்ச்சியில் நான் தொண்டூழியராகப் பங்கேற்பது இதுவே முதல் முறை. இனி இதுபோன்ற நிகழ்ச்சிகளில் தொடர்ந்து உதவ நான் ஆவலுடன் இருக்கிறேன்,” என்றார்.

சிங்கப்பூர்த் தமிழர் சங்கத்தின் பொருளாளரும் விளையாட்டு நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளருமான திரு.விஜயன் சுப்பிரமனியம், 45, தமிழ் முரசிடம், இளையரைச் சென்றடைவதற்குக் காற்பந்து சிறந்த தளமாய் அமைந்ததாக கூறினார்.

“காற்பந்து, மக்களை ஒன்றிணைக்கும் விளையாட்டு. குழுவாக விளையாடுவதன் மூலம் இளையர் முக்கியமான பல விழுமியங்களைக் கற்றுக்கொள்கின்றனர். சிங்கப்பூர்த் தமிழர் சங்கத்தை இளையரிடம் அறிமுகப்படுத்துவதற்கும் எதிர்கால நிகழ்ச்சிகளில் சங்கத்தின் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நல்ல தளமாக அமைகின்றன,” என்று திரு விஜயன் சொன்னார்.

2016ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூர்த் தமிழர் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்துவரும் திரு.ஜான் ராகவன், 78, இளையரை ஈர்ப்பதற்குப் புதிய வழிகளைச் சங்கம் தொடர்ந்து ஆராய்ந்து வருவதாகக் கூறினார்.

“இளையருடன் தொடர்பை ஏற்படுத்தப் புதிய வழிகளைத் தேடினோம். ஆரம்பத்தில் கட்டுரைப் போட்டி, பாடல் போட்டி போன்ற கலாசார நடவடிக்கைகளை ஏற்பாடு செய்தோம். தற்போது விளையாட்டு போன்ற புதிய வழிகளிலும் இளையரை அணுகுகிறோம்,” என்றார் திரு.ராகவன்.

“எங்களது காற்பந்துப் போட்டியில் அனைத்துப் பின்னணிகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்கலாம். அவர்கள் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவதுடன் ஒருவருடன் ஒருவர் பழகி நட்பை வளர்த்துக்கொள்ள ஒரு தளத்தை ஏற்படுத்துவதே எங்களது முக்கிய நோக்கம்,” என்று அவர் குறிப்பிட்டார்.

அடுத்த ஆண்டு முதல், தமிழை இரண்டாம் மொழியாகக் கற்கும் வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தைச் சிங்கப்பூர்த் தமிழர் சங்கம் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் திரு.ராகவன் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்