தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இளமையில் தமிழ் கற்க வாய்ப்பு இல்லாதோருக்கு இலவச வகுப்புகள்

2 mins read
d28c4cd2-542a-46e0-ba89-ca6d91a79592
தமிழ் வகுப்பை வழிநடத்திய ஆசிரியர் கு.சந்திரமூர்த்தியுடன் சிறப்பு விருந்தினர் எஸ்.மனோகரன், கடையநல்லூர் முஸ்லிம் லீக் பொறுப்பாளர்கள், சமூகத் தலைவர்கள்.  - படம்: சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்

தங்களுடைய இளமைக்காலத்தில் தமிழ்மொழியைக் கற்க வாய்ப்பு கிடைக்காதவர்களுக்குச் சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் இலவச தமிழ் வகுப்புகளை நடத்தி வருகிறது.

கொவிட்19 காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இந்த வகுப்புகள், இப்போது மீண்டும் தொடங்கியுள்ளன. தமிழ் வகுப்புகளின் இரண்டாம் கட்டம் செப்டம்பர் 30ஆம் தேதி நிறைவுபெற்றது. வகுப்பில் கலந்துகொண்டோருக்குச் சான்றிதழ் வழங்கும் விழா அன்றைய தினம் சிண்டா அரங்கில் நடந்தேறியது.

விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக வளர்தமிழ் இயக்கத்தின் முன்னாள் தலைவர் எஸ்.மனோகரன் வருகை தந்து, வகுப்பில் கலந்துகொண்டு தேர்ச்சி பெற்றோருக்குச் சான்றிதழ் வழங்கினார்.

பத்து வாரங்கள் தொடர்ந்து நடைபெறும் வகுப்புகள், பலரும் தமிழ் கற்க வாய்ப்பு ஏற்படுத்தித் தந்துள்ளதைப் பாராட்டிய திரு மனோகரன், இந்த நடவடிக்கை தனித்தன்மை வாய்ந்த ஒன்றாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்கின் தலைவர் ராஜா முஹம்மது, சிங்கப்பூர்த் தமிழர்களிடையே பேச்சுப் புழக்கத்தை மேம்படுத்த பொருத்தமான நடவடிக்கைகளைச் சங்கம் மேற்கொள்ளும் என்று உறுதியளித்தார்.

தமிழ் வகுப்புக்கு மக்களிடையே நல்லாதரவு இருப்பதால் வகுப்புகளைத் தொடர்ந்து நடத்த திட்டம் உள்ளதாகவும் திரு ராஜா குறிப்பிட்டார்.

தமிழ் கற்க வாய்ப்பில்லாதவர்களுக்குத் தமிழ்மொழி விழாவின்போது தமிழ் கற்பதற்குரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்று சங்கம் கருதியதால், இந்தத் தமிழ் வகுப்புகளை ஏற்பாடு செய்ததாக வகுப்புகளின் ஏற்பாட்டுக் குழுத்தலைவர் மு.அ.மசூது தமது வரவேற்புரையில் குறிப்பிட்டார்.

தமிழ் கற்கும் வாய்ப்பை இழந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்குத் தமிழை போதிப்பது தங்களது நீண்டகால இலக்கு என்று வகுப்புகளின் ஏற்பாட்டுக் குழுத்தலைவர் மு.அ.மசூது தமது வரவேற்புரையில் குறிப்பிட்டார்.

குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் தமிழில் உரையாட வேண்டும் என்றும் தமிழ்ச் செய்தித்தாள் வாசித்து வரவேண்டும் என்றும் தமிழ் நிகழ்ச்சிகளுக்குச் சென்று ஆதரவு வழங்கவேண்டும் என்றும் வகுப்பில் கலந்துகொண்டவர்களுக்கு ஓய்வுபெற்ற மூத்த தமிழாசிரியரான அவர் ஆலோசனை வழங்கினார்.

பத்து வாரத் தமிழ் வகுப்புகளை வழிநடத்தியவர் நல்லாசிரியர் விருது பெற்ற கு.சந்திரமூர்த்தி.

தமிழ் கற்க மேலும் ஊக்கம் வழங்கியதோடு, அன்றாட வாழ்வில் தமிழைப் பயன்படுத்துவதன் அவசியத்தையும் உணர்த்தியதாக தமிழ் வகுப்பில் கலந்துகொண்ட வா.அ.முஹம்மது உஸேன், நாராயணசாமி, ஹமிதா கனி ஆகிய மூவரும் பகிர்ந்தனர்.

சான்றிதழ் வழங்கும் விழாவிற்கு, வளர்தமிழ் இயக்கத் தலைவர் நசிர் கனி, துணைத்தலைவர் ஜோதி மாணிக்கவாசகம், தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத் தலைவர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.

ஏற்கெனவே 2020ல் நடத்திய தமிழ் வகுப்பில் கிட்டத்தட்ட 24 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர். அடுத்தடுத்த வகுப்புகளில் கலந்துகொள்ள ஆர்வமுடையோர் வகுப்பு ஒருங்கிணைப்பாளர் மசூதுவுடன் (9795 8142) தொடர்புகொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்