‘பன்முகக் கலாசார அடையாளத்தின் முக்கிய அங்கம் தமிழ்ச் சமூகம்’

3 mins read
வளர்தமிழ் இயக்கத்தின் துணைத் தலைவர் ஜோதி மாணிக்கவாசகம் சிறந்த சமூக சேவை விருதைப் பெற்றார்.
ecceb0a5-7dc2-4423-ac58-1ab1313e18e6
35 இணை அமைப்புகளுடன் நடந்த இந்த விருந்து நிகழ்ச்சியில் சட்ட, போக்குவரத்துத் துணை அமைச்சர் முரளி பிள்ளை சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.  - படம்: தமிழர் பேரவை 
multi-img1 of 3

சிங்கப்பூரின் பன்முகக் கலாசார அடையாளத்தின் முக்கிய அங்கமாக தமிழ்ச் சமூகம் திகழ்கிறது என்றும் சமூகம் செழிப்பதற்கான வாய்ப்புகளும் ஆதரவும் இருப்பதை உறுதி செய்ய அரசாங்கம் கடப்பாடு கொண்டுள்ளது என்றும் சட்ட, போக்குவரத்துத் துணை அமைச்சர் முரளி பிள்ளை தெரிவித்துள்ளார்.

நல்லிணக்க சமுதாயமாக சிங்கப்பூர் தொடர்ந்து துடிப்புடன் விளங்க அரசாங்கமும் மக்களும் இணைந்து செயல்படவேண்டும் என்று கூறிய துணையமைச்சர் முரளி பிள்ளை, கலாசார மேம்பாட்டுக்காகவும் சமுதாய, பொருளியல் ரீதியாகவும் தமிழர் பேரவை நாட்டு நிர்மாணத்திற்குப் பங்களித்துவருவதைச் சுட்டிக்காட்டினார்.

தமிழர் பேரவை கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டுதோறும் ஏற்பாடு செய்துவரும் தேசிய தின விருந்து நிகழ்ச்சி இவ்வாண்டு செப்டம்பர் 1ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காத்திப் வட்டாரத்தில் அமைந்துள்ள ‘ஹோம்டீம் என்எஸ்’ வளாகத்தில் நடைபெற்றது.

‘ஒன்றாக, ஒரே சமூகமாக’ எனும் கருப்பொருளில் நடைபெற்ற இந்த விருந்து நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய திரு முரளி பிள்ளை, தமிழ்ச் சமூகத்தினர் மத்தியில் ஒற்றுமையை வலுப்பெறச் செய்யும் முனைப்புகளில் தமிழர் பேரவை ஈடுபடுவதை அறிந்து மகிழ்ச்சி கொள்வதாகக் கூறினார்.

இதன்மூலம் வலுவான, மேலும் ஒன்றுபட்ட சிங்கப்பூருக்கான பாதை அமையும் என்று தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

பல்வேறு ஆடல் பாடல் அங்கங்களுடன் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்ச் சமூகத்திற்கு ஆற்றிய உன்னத சேவைக்காக சிறந்த சமூக சேவை விருது வழங்கப்பட்டது. வளர்தமிழ் இயக்கத்தின் துணைத் தலைவரும் ‘ஸ்ரீ விநாயகா எக்ஸ்போர்ட்ஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான திரு ஜோதி மாணிக்கவாசகம் அந்த விருதைப் பெற்றுக் கொண்டபோது தமக்குத் தமிழ் மொழி மூலம் கிடைத்த வாய்ப்புகளுக்கும் உறவுகளுக்கும் நன்றி தெரிவித்தார். 

கந்தசாமி கல்வி நிதிக்கு தமிழர் பேரவை இவ்வாண்டு $125,000 நிதி திரட்டியதை அமைச்சர் முரளி பிள்ளை சுட்டிக்காட்டிப் பாராட்டினார். சமூக மேம்பாடு, மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை போன்ற முயற்சிகளுக்கு இந்த நிதி பயன்படும்.

“மாறிவரும் சமூக, தேச தேவைகளுக்கு ஏற்ப தமிழர் பேரவையின் பங்கு தொடர வேண்டும்,” என்று தமது உரையில் வலியுறுத்தினார் 35 அமைப்புகள் அடங்கிய தமிழர் பேரவையின் தலைவர் வெ. பாண்டியன். 

சமூக நலத்திட்டங்கள், பயிலரங்குகள், இளையர் கலந்துரையாடல் என சமூகத்தை உள்ளடக்கிய நிகழ்வுகளை இவ்வாண்டு தமிழர் பேரவை மேற்கொள்ள திட்டம் உள்ளதாக திரு பாண்டியன் தெரிவித்தார். 

“தமிழ்ச் சமூகம் இந்த முயற்சிகளில் அதிக ஈடுபாடு செலுத்தினால் நம்மில் இருக்கும் இடைவெளிகள் குறையும்,” என்று கூறினார் தமிழர் பேரவையின் துணைப் பொதுச் செயலாளர் அவந்திகா ஆனந்த், 23. 

தமிழர் பேரவையின் ஆதரவில் 2021ஆம் ஆண்டிலிருந்து ‘ஐஃபோக்ஸ்’ (iFolks) எனும் மூத்தோருக்கான மின்னிலக்கப் பயிலரங்கை வழிநடத்தி வருகிறார் தொண்டூழியர் திவ்யதாரணி, 24. இதுவரை, 200க்கும் மேற்பட்ட மூத்தோர் இந்தப் பயிலரங்கில் பங்குபெற்றுப் பலனடைந்துள்ளனர். 

‘வாட்ஸ்அப்’, ‘ஸூம்’ போன்ற செயலிகளை எப்படிப் பயன்படுத்துவது, இணைய மோசடிகளிலிருந்து எப்படிப் பாதுகாத்துக்கொள்வது போன்ற நடவடிக்கைகள் மூத்தோருக்கு நடத்தப்படும்.

“இதுபோன்ற பயிலரங்குகளை வழிநடத்த நமக்குப் போதுமான வளங்கள் தேவைப்படுகின்றன. இதற்கு நாம் திரட்டும் நிதி மிகவும் உதவியாக இருக்கும்,” என்றார் திவ்யதாரணி.  

குறிப்புச் சொற்கள்