தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கை எழுத்தாளர்களுக்கு ஏணி

7 mins read
தமிழ் முரசின் பிறந்த நாளையொட்டி தங்கள் எழுத்து, இலக்கியப் பயணத்தில் தமிழ் முரசு ஆற்றிய இன்றியமையாப் பங்கு குறித்துப் பகிர்ந்துகொண்டனர் மூத்த, இளைய எழுத்தாளர்கள்.
a1d7304d-1c5f-4be3-8f95-3351910f74a4
(இடமிருந்து) எழுத்தாளர்கள் ‌‌‌ஷாநவாஸ், மலையரசி சீனிவாசன், மணிமாலா, பொன் சுந்தரராசு. - படம்: சுந்தர நடராஜ்
multi-img1 of 2

பரிசு தூண்டிய ஆர்வப்பொறி

12 வயதுச் சிறுமி ஒருவர் ஆர்வத்துடன் எழுதி அனுப்பிய கேள்விக்கு ஐந்து வெள்ளி பரிசளித்து ஊக்கமளித்தது, பிற்காலத்தில் அவரை நாடுபோற்றும் எழுத்தாளராக்கியது.

கடந்த 1963 ஆம்ஆண்டு நடந்த இச்சுவையான சம்பவத்தைத் தமிழ் முரசின் 90ஆவது பிறந்த நாளின்போது நினைவுகூர்ந்தார் எழுத்தாளர் நூர்ஜஹான் சுலைமான்,74.

“அக்காலத்தில் தமிழ் முரசில் ‘சங்கப் பலகை’ எனும் கேள்வி பதில் அங்கம் வரும். அதில் நான் எழுதிய முதல் கேள்விக்குப் பரிசு கிடைத்தது. அந்தக் காலகட்டத்தில் ஐந்து வெள்ளிக்கு நிறைய வாங்கலாம். அன்று எனது கேள்வி வெளியான ஊக்கத்தில் எழுதுபொருள்கள், நோட்டுப்புத்தகங்கள் வாங்கிக் குவித்தேன். அந்தத் தருணந்தான் என்னை எழுத்தாளராக்கியது,” என்றார் அவர்.

அதையடுத்து, 16 வயதில் மகளிர் அங்கத்தில் ‘ஆயக்கலை 64’ எனும் தலைப்பில் தையற்கலை குறித்து எழுதியதாகவும், தமிழ் முரசில் வெளியான தமது முதல் சிறுகதையான ‘வேரில் நிற்கும் விழுதுகள்’ எனும் தலைப்பையே தமது முதல் நூலுக்கும் சூட்டியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமது குறுநாவல், தொடர்கதைகளாகத் தமிழ் முரசில் வெளியானதையும் திருவாட்டி நூர்ஜஹான் மகிழ்வுடன் பகிர்ந்துகொண்டார்.

அதிகம் கல்வி பயில முடியாமல் போனாலும் தமிழ்மீது ஆர்வம் வளர தமிழ் முரசும் முக்கியக் காரணமாக அமைந்ததாகவும் சொன்னார். மொழியையும் எழுத்தையும் விட்டால் தமக்கு வேறு உலகில்லை எனச் சொன்ன நூர்ஜஹான், “தமிழ் முரசுதான் என் தாய்வீடு,” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

தமிழ் முரசு எழுத்தாளர் பண்ணையில் வளர்ந்தவர்

தமிழ் முரசு சிங்கைத் தமிழர்களுக்குச் சமூகக் கருத்துகளைக் கொண்டுசேர்த்தது என்பதைத் தாண்டி, அவர்களைச் சிந்தனையாளர்களாகவும் இலக்கியவாதிகளாகவும் மாற்றியதில் பெரும்பங்குண்டு என மூத்த எழுத்தாளர் இராம. கண்ணபிரான் குறிப்பிட்டார்.

கடந்த 1958ஆம் ஆண்டு நடைபெற்ற மாதாந்தரச் சிறுகதைப் போட்டியில் பங்கெடுத்த அவரது கன்னி எழுத்துக்கு, தமிழ் முரசு நிறுவனர் கோ. சாரங்கபாணி கையெழுத்திட்ட கடிதத்துடன் வந்து சேர்ந்த 15 வெள்ளி பரிசுப்பணம், 14 வயதுப் பாலகனின் எழுத்தார்வத்தைப் பன்மடங்காக்கியது.

தொடர்ந்து இருமுறை அப்பரிசு பெற்றதாகக் கூறிய அவர், “அப்போது உயர்நிலைப் பள்ளியில் படித்த எனக்கு செலவுக்கு 50 காசு கிடைக்கும். அந்தக் காலகட்டத்தில் பெருந்தொகையான அப்பரிசுத்தொகை எனக்குச் சொல்லொண்ணா மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் அளித்தது,” என்றார்.

இதுவரை 21 நூல்கள் எழுதியுள்ள இவர், “எங்களுக்கு இலக்கியம் தந்தது தமிழ் முரசு. பல வழிகளிலும் மொழிக்குப் பேராதரவாக அமைந்தது. அன்றைய காலத்தில் தமிழ் முரசில் கதை வெளியாவது பெருமைக்குரியது. தமிழ் முரசின் எழுத்தாளர் பண்ணையில் வளர்ந்து உருவான பல்வேறு எழுத்தாளர்களில் நானும் ஒருவன் என்பதே எனது பெரும்பேறு,” என்றார்.

39 ஆண்டுகாலம் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், “ஆசிரியர் எனது பணி. எழுத்தாளர் என்பது என் அடையாளம். அந்த அடையாளத்தைப் பெறும் பயணத்தில் தமிழ் முரசின் பங்கு இன்றியமையாதது,” என்றார் திரு கண்ணபிரான்.

“கடந்த 2004ஆம் ஆண்டு தமிழவேள் விருதும் பெற்றேன். இலக்கியம் வளர்த்த தமிழ் முரசுதான் என்னையும் வளர்த்தது. அதனால்தான் நான் இப்போதும் ஊக்கத்தோடு எழுதுகிறேன்,” என்று புன்னகையுடன் தமிழ் முரசுக்குப் பிறந்த நாள் வாழ்த்தையும் அவர் தெரிவித்துக்கொண்டார்.

விமர்சனத்தில் தொடங்கி இலக்கிய உலகில் தடம் பதித்தவர்

கடந்த 1951 ஆம் ஆண்டு பரபரப்பாகப் பேசப்பட்ட எழுத்தாளர் புதுமைப்பித்தனின் ‘விபரீத ஆசை’ எனும் சிறுகதை குறித்தும், அதனைத் தொடர்ந்து கிளம்பிய புதுமைப்பித்தன் குறித்த சர்ச்சைகள் குறித்தும் தாம் எழுதிய கருத்தை வெளியிட்டு தமது எழுத்தாளர் பயணத்தைக் கொடியசைத்துத் தொடக்கி வைத்தது தமிழ் முரசு என்று உற்சாகத்துடன் நினைவுகூர்ந்தார் மூத்த எழுத்தாளர் பி கிரு‌ஷ்ணன்.

‘சிந்திக்கட்டும்’ எனும் தலைப்பில் இவர் எழுதிய கருத்துகள் வெளியானதுடன், தொடர்ந்து நான்கு ஆண்டுகள் கதைகள் எழுதினார். பின், இவரது பார்வை வானொலியை நோக்கித் திரும்பியது. 1992ஆம் ஆண்டு பணிஓய்வு பெற்றபின் மீண்டும் கதைகள் எழுதத் தொடங்கினார்.

ஏறத்தாழ 70 ஆண்டு எழுத்துப் பணி ஆற்றியுள்ள இவர், “தமிழ் முரசு இல்லையென்றால் நான் எழுத்தாளர் ஆகியிருக்கமாட்டேன்,” என்று கூறியதுடன், தமிழ் முரசில் வெளியான பல சுவாரசியமான அங்கங்கள் குறித்தும் பகிர்ந்துகொண்டார்

ஒரு கதை, இலக்கிய வாசகரான தமக்கு அதன்மீது பேரார்வத்தைத் தூண்டும் வகையில் அன்றைய ‘இலக்கிய விவாதம் எனும் அங்கம் அமைந்ததாகச் சொன்னார்.

ஒரு பெண்ணைக் கதை மாந்தராகக் கொண்ட ஒரு பிரெஞ்சுக் கதையை வெளியிட்டு, அதில் ‘அதிகாரிகள் கூண்டைத் திறக்கும்போது வெளியே வருவது பெண்ணா புலியா’ எனும் கேள்வியில் வாதமும் விவாதமும் இடம்பெற்றது. கதைகளுக்கு விமர்சனங்கள் எழுதுவதும், அவற்றைக் காத்திருந்து படிக்கும் சுவாரசியமும் அலாதியானது,” என்றார் இவர்.

கடந்த 1950களில் பல்வேறு வகைகளில் இலக்கிய ரசனை மேம்பாட்டுக்குக் காரணமாகத் தமிழ் முரசு அமைந்ததாகக் குறிப்பிட்ட அவர், “1952 ஆம் ஆண்டு கந்தசாமி வாத்தியார் என்று அழைக்கப்பட்ட சுப . நாராயணன் ரசனை வகுப்பை நடத்தினார். அதில் நான் பங்கேற்றேன். அவற்றில் நடைபெறும் இலக்கிய விவாதங்களில், பலதரப்பட்ட கருத்துகள் வெளிவரும்,” என்றார்.

தொடர் பரிசுகளால் ஊக்கம் பெற்ற தமிழவேள் விருதாளர்

“கடந்த 1966ஆம் ஆண்டில் எனது முதல் கதையான ‘தீவலி’ தமிழ் முரசில் வெளியானது. அப்போதெல்லாம் கதைகள் எழுதினால் பரிசு கிடைக்கும். ஏறத்தாழ தமிழ் முரசில் அதிகம் பரிசு பெற்ற எழுத்தாளர் நானாகவே இருப்பேன்,” என்று புன்னகையுடன் தமிழ் முரசுடனான தமது தொடர்பு குறித்து நினைவுகூர்ந்தார் மூத்த எழுத்தாளர் மா. இளங்கண்ணன், 86.

கலாசாரப் பதக்கம் தொடங்கி பல்வேறு உயரிய விருதுகளைப் பெற்றுள்ள இவர், அவை அனைத்திற்கும் தமிழ் முரசு தொடக்கப் புள்ளி வைத்த-தாகவும் குறிப்பிட்டார்.

“என் இளமைக் காலத்தில் தமிழ் முரசின் இலக்கியப் பக்கங்களுக்கும் விமர்சனங்களுக்கும் பேரளவில் வாசகர் கூட்டம் இருந்தது. அதில் கதைகள் வெளிவருவது பெருமைக்குரியது,” என்று திரு இளங்கண்ணன் குறிப்பிட்டார்.

மணிமன்றம் வளர்த்தெடுத்த பல்துறை எழுத்தாளர்

தமிழ் முரசின் மாணவர் மணிமன்றத்தில் ‘விடாமுயற்சி வெற்றி தரும்’ எனும் கட்டுரை எழுதிய அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார் மூத்த எழுத்தாளர் பொன் சுந்தரராசு, 78. தமிழ் முரசில் கதை எழுதும் ஆசிரியர்களால் ஈர்க்கப்பட்டுத் தாமும் எழுதத் தொடங்கியதாக அவர் சொன்னார்.

தாம் எழுதத் தொடங்கியதற்கு தமிழ் முரசு தான் காரணம் என்றும் தமது சிறுகதைப் புத்தகங்களில் ஏறத்தாழ முக்கால்வாசிக் கதைகள் தமிழ் முரசில் வெளியானவை என்றும் பொன். சுந்தரராசு நினைவுகூர்ந்தார்.

“இலக்கியம் கற்க, புத்தகங்கள் வாங்க வழியில்லாதோர்க்கு அக்காலத்தில் 20 - 30 காசுக்கு இலக்கியச் சுவையை அளித்த தமிழ் முரசு, நாட்சம்பள ஊழியர்களின் நண்பனாகத் திகழ்ந்தது,” என்றும் அவர் சொன்னார்.

தமிழை சுவாசிக்கக் காரணமாக இருந்த தமிழ் முரசு

2025 ஆம் ஆண்டு சிங்கப்பூரின் புகழ்பெற்ற மாதர் பட்டியலில் இடம்பெற்ற மூத்த எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன்.
2025 ஆம் ஆண்டு சிங்கப்பூரின் புகழ்பெற்ற மாதர் பட்டியலில் இடம்பெற்ற மூத்த எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன். - படம்: த கவி

தமிழிலிருந்து வெகுதொலைவு செல்லவிருந்த தம்மை மீண்டும் தமிழில் எழுதச் சொல்லி தமிழ் மொழியை இன்றும் தாம் சுவாசிக்கக் காரணமாக அமைந்தது தமிழ் முரசு என கண்ணீர் ததும்பக் கூறினார் மூத்த எழுத்தாளர் கமலாதேவி அரவிந்தன், 74.

“தமிழ் முரசின் முன்னாள் ஆசிரியர் வை. திருநாவுக்கரசு குறித்து நினைவுகூர்வதே கண்ணீரை வரவழைக்கிறது. 12 வயதில் தமிழில் எழுதினாலும், காலப்போக்கில் என் தாய்மொழியான மலையாளத்தில் முழு நேரமாக எழுதத் தொடங்கினேன். தமிழ் முரசு ஆசிரியர் நேரில் வந்து பேசி, நான் தமிழில் எழுத வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதுதான் இன்று நான் பெற்றுள்ள புகழுக்கு முக்கியக் காரணம்,” என்றார் அவர்.

பெண் எழுத்தாளர்களைத் தமிழ் முரசு அதிகம் ஊக்குவித்ததைச் சுட்டிய அவர், “இமயம் போல எனக்கு ஆதரவளித்த, என் மனத்திற்கு நெருக்கமான, இலக்கிய உலகில் தவிர்க்க முடியாத பத்திரிகை தமிழ் முரசு,” என்றும் திருவாட்டி கமலாதேவி சொன்னார்.

சமகால எழுத்தாளர்களையும் ஊக்குவிக்கும் தமிழ் முரசு

எழுத்தாளர்கள் தமிழ்ச்செல்வி, மலையரசி சீனிவாசன், நா.ஆண்டியப்பன், பிரேமா மகாலிங்கம், உமா சங்கர்.
எழுத்தாளர்கள் தமிழ்ச்செல்வி, மலையரசி சீனிவாசன், நா.ஆண்டியப்பன், பிரேமா மகாலிங்கம், உமா சங்கர். - படம்: பிரேமா மகாலிங்கம்

கடந்த 2017ஆம் ஆண்டு ‘ஏமாற்றச் சொன்னது நானா?’ எனும் தமது முதல் கதை வெளியானதாகக் குறிப்பிட்ட மணிமாலா, “என் கதை வெளியாகும் என நினைக்கவில்லை. தொலைபேசியில் அழைத்துப் புகைப்படம் கேட்டபோது எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தேன். என்னைச் சுற்றியுள்ளோர் என் கதையைப் படித்துவிட்டுப் பாராட்டியபோது கிடைத்த ஊக்கமும் மறக்க முடியாதது,” என்றார்.

சமகாலத்தில் எழுத்தாளர்களை வளர்க்கும் பணியைத் தமிழ் முரசு நாளிதழ் செவ்வனே செய்துவருவதாகவும் அவர் கூறினார்.

“தமிழ் முரசில் வெளிவரும் கதை, கவிதைகள், நூல் அறிமுகம் ஆகியவை மாணவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவே உணர்கிறேன். அதன்மூலம் இளைய எழுத்தாளர்கள் உருவாகும்போது அதற்கு இந்தப் பக்கங்கள் காரணமாக அமையும் என்பதில் ஐயமில்லை. மாணவர்கள் இதனைப் படித்துத் தங்கள் மொழிவளத்தைப் பெருக்கிக்கொள்ள வேண்டும்,” என வலியுறுத்தினார் எழுத்தாளர் மலையரசி சீனிவாசன்.

தங்கமுனை விருது பெற்றுத்தந்த ‘தாத்தா’ எனும் தமது கதை தொடங்கி பல கதைகள் வெளிவந்தது தம் தன்னம்பிக்கையை வளர்த்தெடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

எழுத்தாளர் முகம்மது ரியாஸ்.
எழுத்தாளர் முகம்மது ரியாஸ். - படம்: முகம்மது ரியாஸ்

“கடந்த 2014ஆம் ஆண்டில் என் கதை முதலில் தமிழ் முரசில் வெளியானது. தொடர்ந்து ஓரிரு ஆண்டுகளில் எனது 15 கதைகளைத் தமிழ் முரசு வெளியிட்டது. தமிழ் முரசு என் எழுத்தை அங்கீகரித்து, அளவிலா ஊக்கமளித்தது,” என்றார் எழுத்தாளரும் சிராங்கூன் டைம்ஸ் இதழாசிரியருமான ‌‌‌ஷாநவாஸ்.

தமக்கு முதல் இலக்கியப் பரிசைப் பெற்றுத்தந்த கதை தொடங்கி, பல கதைகள் தமிழ் முரசில் வெளியானவைதான் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“வாரந்தோறும் தமிழ் முரசில் வரும் கதைப் பக்கங்களை மிக முக்கியமானதாகப் பார்க்கிறேன். வயது, அனுபவப் பாகுபாடின்றி அனைவர்க்கும் தமிழ் முரசு அளிக்கும் வாய்ப்பு குறிப்பிடத்தக்கது. எனக்கும் இலக்கிய உலகிற்கும் தமிழ் முரசுதான் தொடர்புப் பாலம் ஏற்படுத்திக் கொடுத்தது,” என்று இளம் எழுத்தாளரான முகம்மது ரியாஸ் கூறினார்.

“எனது எழுத்துப் பயணம் தமிழ் முரசோடு தொடங்கியது. தமிழ் முரசின் பக்கங்களிலிருந்த பல செய்திகள் என் எழுத்துகளுக்கு உணர்வூட்டியுள்ளன. ‘60 வயது மதிக்கத்தக்க தாய், தன் மகளுக்காகத் தன் கருப்பையில் அவளுடைய குழந்தையைப் பெற்றுக் கொடுத்தாள்’ என்ற செய்திதான், ‘முட்டையின் நிறம் கருப்பு’ எனும் என் சிறுகதையின் கருப்பொருளாக அமைந்தது,” என்று எழுத்தாளர் பிரேமா மகாலிங்கம் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்