சிங்கப்பூரின் பாரம்பரிய இடங்களைச் சுற்றிப் பார்த்து, கேள்விகளுக்கு விடையளிக்கும் மாறுபட்ட போட்டி ஒன்று நடைபெற்றது. தமிழ்மொழி அறிவு, பாரம்பரியம் குறித்த விழிப்புணர்வு, பெற்றோர்-பிள்ளை பிணைப்பு ஆகியவற்றை வளர்த்துக்கொள்ளும் நோக்கில் அப்போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
தமிழ்மொழி விழாவை முன்னிட்டு, சிற்பிகள் மன்றம், ‘சொற்களின் சாகசம்’ எனும் அந்தப் புதுமையான வரலாற்றுப் பேருந்துப் பயணப் போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற்ற அப்போட்டியில் தொடக்க நிலை 5, 6, உயர்நிலை 1, 2ஆம் வகுப்புகளைச் சேர்ந்த 50 மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் இணைந்து பங்கேற்றனர்.
பங்கேற்பாளர்கள் சிங்கப்பூரின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களான பழைய தபால் நிலையம், தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட இடங்களுக்குப் பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
அந்தப் பயணத்தின்போது, பேருந்தில் இருந்த தொண்டூழியர்கள், அந்தந்த இடங்களைப் பற்றிய தகவல்களை வழங்கினர்.
அவ்விடங்களைப் பங்கேற்பாளர்கள் பார்வையிட்டு, பகிரப்பட்ட தகவல்களையும் கவனித்தனர். பின்னர், பெற்றோரும் பிள்ளைகளும் கலந்துரையாடி, கொடுக்கப்பட்ட வினாத்தாளில் இருந்த கேள்விகளுக்கு விடையளித்தனர்.
மொத்தம் 31 மாணவர்கள், அவர்களது பெற்றோருடன் கலந்துகொண்ட அப்போட்டியில் 10 பெற்றோர்-பிள்ளை இணையர் பரிசுகளைப் பெற்றனர்.
தொடர்புடைய செய்திகள்
இரண்டாவது பிரிவாகச் சொற்களைக் கண்டறியும் போட்டியும் நடைபெற்றது. அதில் அகமது இப்ராஹிம் தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த மாணவி சிவனு பாவ்னா, 11, சிவனு சுப்பையா, 48, இணையர் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
அந்த நிகழ்வில் உள்ளூர் கலைஞரும் வழக்கறிஞருமான திரு வடிவழகன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
“கலையோடு இணைந்து மொழி வளர வேண்டும், வாழ வேண்டும். உணர்வோடு சார்ந்த ஒரு மொழியின்மீது ஈடுபாடு கொள்ளவேண்டும். அதுகுறித்து பெருமிதம் அடையவேண்டும். அது நம் கையில்தான் இருக்கிறது,” அவர் கூறினார்.
வெறும் வகுப்பறைப் பாடமாக இல்லாமல், பேருந்துப் பயணம் வழியாக மொழியைக் கற்றதாலும் பெற்றோரும் அவர்களுடன் பங்கேற்றதாலும் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தனர்.
அது மாணவர்களின் பொது அறிவை வளர்த்ததோடு, பரபரப்பான அன்றாட வாழ்க்கையில் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே ஒரு சுமுகமான பிணைப்பையும் ஏற்படுத்தியது.
தமிழ் மொழி மீதான பற்றையும் சிங்கப்பூரின் பாரம்பரியத்தைப் பற்றிய புரிதலையும் ஒரே நேரத்தில் அந்த நிகழ்வு சாத்தியமாக்கியது.
முதல் போட்டியில் வென்ற பத்து இணையருக்கும் 40 வெள்ளி மதிப்புள்ள பற்றுச்சீட்டுகள் பரிசுகளாக வழங்கப்பட்டன. இரண்டாவது பிரிவில் வென்றவர்களுக்குப் பலகை விளையாட்டுகள் பரிசுகளாக வழங்கப்பட்டன. பங்கேற்ற அனைவருக்கும் 20 வெள்ளி பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.
“இது ஒரு சாதாரண வினாடி-வினா போட்டியாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், இது மிகவும் சுவாரசியமாக இருந்தது. என் மகளுடன் தரமான நேரத்தைச் செலவிட்டு, மனம்விட்டுப் பேசியது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது,” என்றார் தகவல் தொழில்நுட்பத் திட்ட மேலாளரான ஸ்டீபன் அருள்சாமி, 48,
“பொதுவாக நான் போட்டிகளில் தனியாகப் பங்கேற்பேன். ஆனால், என் தந்தையுடன் சேர்ந்து இதில் கலந்துகொண்டது ஒரு புதிய அனுபவமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது,” என்றார் மாணவர் வி.செ.ஹிதேஷ்வர் நட்ராஜ், 9.
“இந்த முதல் அனுபவத்தின் மூலம் ‘ஆர்ட்ஸ் ஹவுஸ்’ போன்ற இடங்களின் பழைய பெயர்களைப் பற்றியும் வரலாற்றைப் பற்றியும் அதிகம் தெரிந்துகொண்டேன். பேருந்தில் கலந்துரையாடி விடைகளைக் கண்டுபிடித்தது சுவாரசியமாக இருந்தது,” என்றார் மாணவி வி.செ.ஸ்ரீபிரதீக்ஷா.
“இது சிற்பிகள் மன்றத்தின் 20ஆம் ஆண்டு. எனவே, இந்த மாறுபட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தோம். பங்கேற்றவர்கள், சிங்கப்பூரின் பிரபலமான இடங்களின் தமிழ்ப் பெயர்களையும் அவை குறித்த தகவல்களையும் தமிழில் தெரிந்துகொண்டார்கள் என நம்புகிறோம்,” என்றார் மன்றத் துணைத்தலைவர் கதிரேசன் மாணிக்கம், 50.
“இந்த மன்றத்தின் உறுப்பினராக, ‘சிற்பிகள் மன்றம்’ என்ற பெயரை முன்மொழிந்த தருணம் இன்றும் நினைவில் இருக்கிறது. இன்று, ‘சொற்களின் சாகசம்’ போன்ற புதுமையான நிகழ்வுகள் மூலம் இம்மன்றம் இளையத் தலைமுறையினரைத் தமிழோடு இணைப்பதைக் காணும்போது மிகுந்த மனநிறைவாக உள்ளது,’’ என்றார் மன்றத் தொண்டூழியரும் சிறை அதிகாரியுமான இளமாறன் தமிழ்கோதை, 55.

