தம்மை வாழவைத்து, சமூகத்தில் அங்கீகாரம் கொடுத்த தமிழ்மொழிதான் தற்போது தம்மை மேடையில் நிறுத்தியுள்ளதாகப் பெருமையுடன் குறிப்பிட்டார் திருவாட்டி பவளகாந்தம் அழகர்சாமி.
கடந்த 40 ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிச் சிறப்பித்தது ‘பிரதான விழா 2026’.
“இது மகிழ்ச்சி என்பதைத் தாண்டி, ஒரு மனநிறைவு,” என்று குறிப்பிட்ட திருவாட்டி பவளம், தமது பயணம், அனுபவங்கள் குறித்து தமிழ் முரசுடன் பகிர்ந்துகொண்டார்.
“நாம் ஏன் தொடர்ந்து உழைத்து வருகிறோம் என்ற கேள்வி பல நேரங்களில் வரும். அதற்கெல்லாம் இந்த விருது பதில் அளித்துள்ளதாக நினைக்கிறேன்,” என்ற இவர், தாம் முதன்முதலாகச் செய்தி வாசித்தது இன்னும் பசுமையாக நினைவில் இருப்பதாகக் கூறினார்.
“தொடக்கத்தில் பகுதிநேரமாகச் செய்தி வாசித்தேன். பயமும் நடுக்கமும் கலந்த கன்னி முயற்சி அது. ஆனாலும், முதல் நாள் செய்தி வாசித்தபோதே இதுதான் என் வாழ்க்கைத் தொழிலாக அமையும் என்பதை நம்பினேன்,” என்றார் இவர்.
செய்தித் துறை அனுபவங்கள்
செய்தி வாசிப்பு எளிதானதன்று எனக் கூறிய திருவாட்டி பவளம், தேர்தல், முக்கிய நேர்காணல்கள் உள்ளிட்ட பணிகளைக் கையிலெடுக்கும்போது அதற்கான தயாரிப்பில் அதிக உழைப்பு தேவைப்படும் எனச் சுட்டினார்.
“தேர்தல் வருகிறது, அதற்கான படைப்பாளர் நான் எனத் தெரிந்த கணத்திலிருந்து தயாரிப்புகள் தொடங்கிவிடும். வாக்களிப்பு தினத்தில் இரவு வரை தகவல்களைச் சேகரிக்க வேண்டும். சில தகவல்களை மனப்பாடமாக உள்வாங்கிக்கொள்ள வேண்டும். வாசிப்பும் தயாரிப்பும் இல்லாமல் இப்பணியைச் செய்யவே முடியாது,” என்றார் இவர்.
இத்துறையின் பரபரப்பான சூழலால், பல பண்டிகை நாள்களிலும் வீட்டில் இருந்ததில்லை என்பதைச் சுட்டிய இவர், “பல ஆண்டுகளாக தீபாவளிக்கு நான் குழந்தைகளை வீட்டில் தனியே விட்டு வேலையிடத்தில் இருந்திருக்கிறேன்.
தொடர்புடைய செய்திகள்
“அதில் வருத்தமிருந்தாலும் அது இன்னும் நினைவில் இருக்கிறது. அலுவலகத்தில் நண்பர்களுடன் கொண்டாடுவதும் தனி மகிழ்ச்சிதான் என நினைத்துக்கொள்வேன்,” என்றார்.
செய்தித் துறை பொதுவாகவே சவாலான துறை என்றாலும், ஒரு பெண்ணாக இதில் நிலைத்திருப்பதற்குக் கூடுதல் உழைப்பு தேவை என்பதையும் குறிப்பிட்ட திருவாட்டி பவளம், “பெண்களுக்குப் பொறுப்புகளும் கடமைகளும் அதிகம். குடும்பம், குழந்தைகள், வேலை எனப் பலவற்றையும் சமாளிக்க வேண்டும். நேர மேலாண்மைதான் எனக்கு கைகொடுத்தது,” என்று சொன்னார்.
செய்தித் துறையின் நவீனம், மொழியின் வளர்ச்சி
செய்தித்துறை பேரளவில் உருமாற்றம் கண்டுவருவதைக் காணமுடிவதாகவும் இவர் கூறினார்.
தமது காலத்தில், செய்தி நிறுவனங்களிடமிருந்து செய்திகள் வெளிவருவது மட்டுமே ஒரே வழியாக இருந்ததை நினைவுகூர்ந்த இவர், தற்காலத்தில் இணையவழி, சமூக ஊடகங்களின்வழி செய்திகள் நொடிகளில் அனைவரிடமும் சேர்ந்து விடுவதைச் சுட்டினார்.
ஆனால், தமிழில் செய்தியைச் சுவையாகக் கொடுக்க மொழியறிவும் எழுத்தறிவும் தொடர்ந்து மேம்பட வேண்டும் என்று இவர் அறிவுறுத்தினார்.
இளம் தலைமுறையினர் பலரும் தமிழில் நன்கு பேசினாலும், எழுதுவதில் சிரமத்தை எதிர்கொள்வதை தாம் கவனித்ததாகக் கூறிய இவர், அதனைச் சரிசெய்ய பயிற்சி அவசியம் என்றார்.
தமது 40 ஆண்டுகாலப் பயணத்தில் மொழியறிவை வளர்த்துக்கொள்ள வாசிக்கும் பழக்கமே ஒரே வழி, அதற்கு வேறு குறுக்கு வழியே இல்லை என்பதை தாம் அனுபவபூர்வமாகக் கற்றுக்கொண்டதாகக் கூறினார் .
அதேபோல, இளம் செய்தியாளர்கள் பணியில் சிறந்து விளங்க, அதில் முழுக்கவனமும் பொறுமையும் இருக்க வேண்டும் என்று திருவாட்டி பவளம் அறிவிறுத்தினார்.

