இவ்வாண்டின் சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவின் ஒரு பகுதியாக இதுவரை ‘தி ஆர்ட்ஸ் ஹவுஸ்’ அரங்கில் நடைபெற்ற தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகள், சமூகம் மற்றும் மனித மனங்களின் பரிமாணங்களை ஆழமாக அலசின.
சமூகம் கட்டமைத்துள்ள பிம்பங்களைக் கேள்விக்குள்ளாக்குவது, மாய யதார்த்தவாதத்தின் (magical realism) வழியே புனைவின் நுட்பங்களை ஆராய்வது, உள்ளூர் இலக்கிய வெளியில் வெளிநாட்டு ஊழியர்களின் அடையாளத்தை முன்னிலைப்படுத்துவது எனப் பல்வேறு கருப்பொருள்களில் எழுத்தாளர்களும் வாசகர்களும் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
இலக்கியத்தில் மிளிரும் வெளிநாட்டு ஊழியர்களின் அடையாளம்
சிங்கப்பூரில் 13 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்துவரும் வெளிநாட்டு ஊழியரும் எழுத்தாளருமான ராஜேந்திரன் விஜயகாந்த், 35, ‘வெற்றிச் செல்வன்’ எனும் புனைப்பெயரில் நான்கு நூல்களை வெளியிட்டுள்ளார்.
சிங்கப்பூர்ப் புலம்பெயர் எழுத்தாளர்கள் குழு மூலம் எழுத்துலகில் தீவிரமாக இயங்கத் தொடங்கிய இவர், கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் எழுதிய ‘தேக்காவில் பொம்மைகள்’ கவிதைமூலம் பெரும்பாராட்டு பெற்றார்.
தனிமைக் காலங்களில் எழுத்தே தமது மனநலத்தைக் காத்து அடையாளம் தந்ததாகக் கூறும் அவர், “சிங்கப்பூரில் உள்ள வாய்ப்புகளையும், குறிப்பாகத் தேசிய நூலகத்தின் தமிழ் ஆய்வு நூல்களையும் சக ஊழியர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,” என வலியுறுத்தினார்.
சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவின் ஒரு பகுதியாக ‘தி ஆர்ட்ஸ் ஹவுஸ்’ அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 15) நடைபெற்ற ‘சிங்கப்பூர் சமூகக் கதையாடல்களில் வெளிநாட்டு ஊழியர்கள்’ எனும் அமர்வில் பங்கேற்ற அவர், ஊழியர்களின் போராட்டங்களை மட்டுமே பேசாமல் அவர்களின் கலை, இலக்கியப் பங்களிப்புகளை முன்னிலைப்படுத்தியதைப் பாராட்டினார்.
“எனினும், உள்ளூர் எழுத்தாளர்களுடன் வெளிநாட்டு ஊழியர் எழுத்தாளர் ஒருவரும் மேடையில் இடம்பெற்றிருந்தால் விவாதம் இன்னும் செழுமை பெற்றிருக்கும்,” எனத் தமிழ் முரசிடம் அவர் குறிப்பிட்டார்.
கல்வியாளர் கலைவாணி இளங்கோ நெறிப்படுத்திய அந்நிகழ்வில் சிங்கப்பூர் எழுத்தாளர்கள் பா. கங்காவும் அழகுநிலாவும் உரையாற்றினர்.
ஊழியர்களின் துயரங்களை மட்டுமே பேசாமல் அவர்களின் மனநிறைவையும் கவனிக்க வேண்டும் என கங்கா கேட்டுக்கொண்டார்.
“சமூக ஊடகங்களில் அவர்களின் சாதனைகளை ஒருமுறை பாராட்டிவிட்டுக் கடந்துவிடுகிறோம். அந்நிய மண்ணின் தனிமையைத் தாண்டி, இலக்கியத்திலும் மொழியிலும் அவர்களின் அடையாளம் எவ்வாறு மிளிர்கிறது என்பதையும் பார்க்க வேண்டும்,” என்றார் அவர்.
சமூகப் பிம்பங்களைக் கேள்விக்குள்ளாக்கும் இலக்கியம்
‘சமூக முகமூடிகளும் இலக்கிய முகங்களும்’ எனும் தமிழ்க் கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 15) ‘தி ஆர்ட்ஸ் ஹவுஸ்’ வளாகத்தில் நடைபெற்றது.
‘மற்றும் குழுவினர்’ அமைப்புடன் இணைந்து நடத்தப்பட்ட அந்நிகழ்வை செந்தில்குமார் நடராஜன் நெறிப்படுத்த, எழுத்தாளர்கள் ஜா. தீபா, ப. ரேவதி, முகமது ரியாஸ் ஆகியோர் உரையாற்றினர்.
ஆண்-பெண் பாகுபாடு, குடும்ப அமைப்பு போன்ற சமூகத்தின் வெவ்வேறு அம்சங்களை இலக்கியம் எவ்வாறு கேள்விக்குள்ளாக்கி, மறைந்திருக்கும் மனித உணர்வுகளையும் முரண்களையும் வெளிப்படுத்துகிறது என்பது குறித்து அதில் விவாதிக்கப்பட்டது.
மார்கரெட் அட்வுட், ஜார்ஜ் ஆர்வெல், பிரான்ஸ் காஃப்கா ஆகிய புகழ்பெற்ற வெளிநாட்டு எழுத்தாளர்களின் படைப்புகள் மறைபொருள்மூலம் சமூகச் சிக்கல்களை அணுகும் விதமும், தமிழ்ச் சிறுகதைகளில் உரையாடல்களின் முக்கியத்துவமும் அக்கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டன.
அண்மையில் தமிழ் நூல்களை அதிகம் வாசிக்கத் தொடங்கியுள்ளதால் இக்கலந்துரையாடல் தமக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது என்று பங்கேற்பாளர்களில் ஒருவரான சேவால் மீனாட்சி, 33, தெரிவித்தார்.
அதே வேளையில், “எழுத்துக் கலையைத் தாண்டி, தமிழ் இலக்கியத்தில் உள்ள மறைமுகக் கருப்பொருள்களையும் சமூகத்தில் பேசப்படாத கூறுகளையும் இன்னும் ஆழமாக விவாதித்திருக்கலாம்,” என பாரதி மூர்த்தியப்பன், 49, குறிப்பிட்டார்.
மாய யதார்த்தமும் புனைவின் நுட்பங்களும்
தமிழ்நாட்டின் முதன்மையான தமிழ்ப் படைப்பாளிகளில் ஒருவரும் கவிஞருமான யுவன் சந்திரசேகர் ‘மெய்ப்பொருள் காண்பது அரிது’ எனும் தலைப்பிலான கலந்துரையாடலில் பங்கேற்றார்.
நாவல், சிறுகதை, கவிதை எனப் பல தளங்களில் இயங்கிவரும் அவர், கற்பனை கலந்த மெய்யுலகைச் சித்திரிக்கும் கதைகள் குறித்துப் பேசினார்.
எழுத்துச் செயல்முறை, மாய யதார்த்தவாதம் பற்றி விளக்கிய அவர், “நான் அதனைத் திட்டமிட்டு எழுதுவதில்லை,” என்றார்.
பறப்பது அல்லது நீரின்மீது நடப்பது போன்ற இயல்புக்கு அப்பாற்பட்ட கற்பனைகள் வெறும் வியப்பிற்காக மட்டுமின்றி, தமது படைப்பாற்றலின் அடித்தளமாக அமைந்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
இக்கலந்துரையாடலில் பங்கேற்ற ஹபீஸா பீவி, 35, கற்பனை குறித்த யுவனின் பார்வை தம்மைக் கவர்ந்ததாகக் கூறினார்.
“பொதுவாக, புனைகதைகளில் முடிவுகள் எதிர்பார்த்தபடியே இருக்கும். ஆனால், அவ்வாறில்லாத கதைகள் வாசகர்கள் எளிதில் தவறவிடக்கூடிய நுட்பமான, தெளிவற்ற சிந்தனைகளை முழுமையாக ஆராய்கின்றன என்பதை அவர் விளக்கிய விதம் எனக்குப் பிடித்திருந்தது,” என்று ஹஃபிஸா சொன்னார்.
