தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழ் முரசு நாளிதழின் அச்சுப் பயணம்

3 mins read
தமிழ் முரசு நாளிதழ் எவ்வாறு தன்னையே புதுப்பித்துக்கொண்டு பல மாற்றங்களைக் கண்டுவந்துள்ளதோ அவ்வாறே அதனை அச்சிடும் முறையும் காலத்திற்கேற்ப வெகுவாக மாறியுள்ளது.
a7c2b0ce-7bc4-4e59-b43f-c47fafd91558
தற்போது நவீன அச்சுத் தொழில்நுட்பங்களால் செய்தித்தாளை அச்சிடுவது, நான்காக மடித்து விநியோகத்துக்குத் தயார்படுத்துவது போன்ற பல செயல்முறைகளும் எளிதாகியுள்ளன. ஜூரோங்கிலுள்ள எஸ்பிஎச் அச்சகத்தில் எடுத்த புகைப்படம். - படம்: த.கவி
multi-img1 of 3

தொடக்கத்தில் தமிழ் முரசு செய்தித்தாள் ‘லெட்டர்பிரஸ்’ முறையில் அச்சிடப்பட்டது.

அச்சுக் கோக்கப்பட்ட உலோக எழுத்துருக்கள்மீது மை பூசி, பின்பு அந்த மையைத் தாளுக்கு மாற்றிச் செய்தித்தாளை அச்சிடும் இரு இயந்திரங்களைத் தமிழ் முரசு அலுவலகம் வைத்திருந்ததாகக் கூறினார் ஸ்டார் பிரஸ்ஸில் 1956 முதல் அச்சுக்கோப்பவராகவும் பின்பு ‘லைனோடைப்’ இயந்திரம் இயக்குபவராகவும் பணியாற்றிய இராசு சாமிக்கண்ணு, 87.

1958ஆம் ஆண்டில் ‘லைனோடைப்’ இயந்திரத்தை இயக்கிய இராசு சாமிக்கண்ணு.
1958ஆம் ஆண்டில் ‘லைனோடைப்’ இயந்திரத்தை இயக்கிய இராசு சாமிக்கண்ணு. - படம்: இராசு சாமிக்கண்ணு

“அப்பொழுதெல்லாம் ஒவ்வொரு தாளையும் ஒருவர் அச்சு இயந்திரத்தினுள் தள்ளிவிட வேண்டியிருந்தது,” என்று அவர் கூறினார்.

அக்காலத்தில் அச்சுக் கோக்கும் சக ஊழியர்களுடன் திரு நடராசன் (வலம்).
அக்காலத்தில் அச்சுக் கோக்கும் சக ஊழியர்களுடன் திரு நடராசன் (வலம்). - படம்: எம். நடராசன்

அச்சு இயந்திரங்களில் மேம்பாடுகள்

வேலை நிறுத்தத்துக்குப் பிறகு 1964ல் மீண்டும் தொடங்கப்பட்ட புதிய தமிழ் முரசு அலுவலகத்திற்கு மேம்பட்ட அச்சு இயந்திரம் ஒன்று கொண்டுவரப்பட்டது.

“புதிய இயந்திரத்தில, ஒரு நீண்ட தாள் சுருளை வைத்து விட்டால் ஒரே நடையில் எட்டுத் தாள்களையும் அச்சிட்டு விடும்,” என்றார் 1958 முதல் தமிழ் முரசில் அச்சுக் கோப்பவராகவும் பின்பு பல பொறுப்புகளையும் வகித்துவந்துள்ள திரு எம் நடராசன், 85.

தமிழ் முரசு கட்டடத்துக்கு ஸ்டார் பிரஸ் இடம்பெயர்ந்ததும் லைனோடைப் அச்சு இயந்திரமும் அங்கு வந்தது. அதில் தட்டச்சு செய்ய செய்ய உலோக எழுத்துருக்கள் கோக்கப்படும்.

“தமிழிலோ ஆங்கிலத்திலோ அச்சுக்கோக்கும் ‘லைனோடைப்’ இயந்திரங்கள் இருந்தன. ஆனால், ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே இயந்திரத்தைப் பயன்படுத்த முடியும். மேலும், புதிதாக அதில் தட்டச்சு செய்யக் கற்றுக்கொள்வது சவாலாக இருந்தது என்பதால் தமிழ் எழுத்துகளுக்குக் கையால் அச்சுக் கோக்கும் முறையே தொடர்ந்து நடைமுறையிலிருந்தது,” என்றார் திரு நடராசன்.

கோ சாரங்கபாணி மலாயாவில் ‘தேச தூதன்’ என்ற பத்திரிகையையும் வைத்திருந்ததால், சிறிது காலத்திற்கு அங்குள்ள ஊழியர்கள் தேச தூதனில் வெளிவரும் செய்திகள் சிலவற்றை மறுவடிவமைத்து, அன்றாடம் நான்கு பக்கங்களை அச்சிட்டு சிங்கப்பூருக்கு அனுப்பியதாகவும் அவர் கூறினார்.

1988ல் ஆசிரியராகப் பொறுப்பேற்ற திரு வை திருநாவுக்கரசு வீட்டிலிருந்து ஒரு கணினியை அலுவலகத்துக்கு எடுத்துவந்தபின் கணினிமயமாக்கம் தொடங்கியது.

ஜென்டிங் லேன் அலுவலகத்துக்கு 1991ல் வந்ததும் செய்தியாளர்கள் செய்திகளைக் கணினியிலேயே தட்டச்சு செய்தனர். பல தனியார் நிறுவனங்கள் அச்சிடும் பொறுப்பை ஏற்றன.

அச்சிடப்பட்ட செய்தித்தாள்களை மடிப்பதற்குத் தமிழ் முரசு ஊழியர்கள் சிலர் இரவில் சென்று உதவினர்.

எஸ்பிஎச் அச்சு நிலையத்துக்கு அச்சுப்பணிகள் மாற்றம்

நாளடைவில் ஜெண்டிங் லேனிலும் ஜூரோங்கிலுமுள்ள எஸ்பிஎச் அச்சகங்களில் தமிழ் முரசு அச்சிடப்பட்டது.

தற்போது தமிழ் முரசு நாளிதழ் ஆஃப்செட் அச்சுமுறையில் அச்சிடப்படுகிறது. படத்தில், அதற்காகப் பயன்படுத்தப்படும் CTP உலோகத் தட்டு. எஸ்பிஎச் அச்சகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்.
தற்போது தமிழ் முரசு நாளிதழ் ஆஃப்செட் அச்சுமுறையில் அச்சிடப்படுகிறது. படத்தில், அதற்காகப் பயன்படுத்தப்படும் CTP உலோகத் தட்டு. எஸ்பிஎச் அச்சகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம். - படம்: த.கவி

“1990களிலேயே எஸ்பிஎச், ‘மெட்ரோ’ அச்சு இயந்திரத்தில் அச்சிட்டுவந்தது. அதற்கு மையை நம் கையால் ஊற்றி நிரப்ப வேண்டும்,” என்றார் கடந்த 25 ஆண்டுகளாக எஸ்பிஎச் அச்சு நிலையத்தில் பணியாற்றிவரும் மூத்த அச்சு நிபுணர் ரவிகுமார், 47.

அச்சான பக்கங்களின் வண்ணங்களைச் சரிபார்க்கும் மூத்த அச்சு நிபுணர் ரவிகுமார், 47.
அச்சான பக்கங்களின் வண்ணங்களைச் சரிபார்க்கும் மூத்த அச்சு நிபுணர் ரவிகுமார், 47. - படம்: த.கவி

வண்ண அச்சு

‘மெட்ரோ’ இயந்திரத்தில் ஒரு தாளின் ஒருபுறம்தான் வண்ணத்தில் அச்சிட முடியும்; அதனால் எட்டுப் பக்கங்கள் கொண்ட தமிழ் முரசில் நான்கு பக்கங்களையே அதிகபட்சம் வண்ணத்தில் அச்சிட முடிந்தது என்றார் திரு ரவிகுமார்.

அதையடுத்து, 1997ல் ‘கலர்லைனர்’ அச்சு இயந்திரங்களும் 2002ல் ‘கேபிஏ’ அச்சு இயந்திரங்களும் கொண்டுவரப்பட்டன.

“ஒரு கலர்லைனர் வரிசையில் ஒரே நேரம் 32 பக்கங்கள்வரை வண்ணத்தில் அச்சிடுகிறோம். ‘கேபிஏ’ வரிசையில் ஒரே நேரம் 56 பக்கங்கள்வரை வண்ணத்தில் அச்சிடுகிறோம். தேவைப்பட்டால் கூடுதல் ‘கேபிஏ’ இயந்திரங்களைப் பயன்படுத்தி 80 பக்கங்கள்வரை அச்சிடலாம்,” என்றார் 1990லிருந்து எஸ்பிஎச் அச்சு நிலையத்தில் அச்சு நிபுணராகப் பணியாற்றி, 2025 ஜூன் மாதம் பணியிலிருந்து ஓய்வுபெற்ற திரு விஜயன் சாத்து நாயர், 67.

35 ஆண்டுகளாக எஸ்பிஎச் அச்சு நிலையத்தில் பணியாற்றிய அச்சு நிபுணர் விஜயன் சாத்து நாயர், 67.
35 ஆண்டுகளாக எஸ்பிஎச் அச்சு நிலையத்தில் பணியாற்றிய அச்சு நிபுணர் விஜயன் சாத்து நாயர், 67. - படம்: ரவிகுமார்
எஸ்பிஎச் அச்சு நிலையத்தில் 35 ஆண்டுகள் சேவையாற்றியதற்காக நினைவுப்பரிசு பெற்று 2025 ஜூனில் ஓய்வுபெற்ற திரு விஜயன் சாத்து நாயர், 67.
எஸ்பிஎச் அச்சு நிலையத்தில் 35 ஆண்டுகள் சேவையாற்றியதற்காக நினைவுப்பரிசு பெற்று 2025 ஜூனில் ஓய்வுபெற்ற திரு விஜயன் சாத்து நாயர், 67. - படம்: விஜயன் சாத்து நாயர்

அச்சடிக்கும் வேகம்

“மெட்ரோ இயந்திரம் சற்று மெதுவாகத்தான் அச்சிடும் என்பதால் முன்பெல்லாம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழை இரவு 10.30 மணிக்கே அச்சிடத் தொடங்கி அதிகாலை 4.30, 5 மணிவரை அச்சிடுவோம். சில பகுதிகளைப் பிற்பகலிலேயே அச்சிடத் தொடங்கிவிடுவோம்.

“ஆனால் இப்போது ஆக அண்மைய செய்திகள் வருவதற்கு அதிகாலை 1.30, 2 மணி வரைக் காத்திருந்துதான் அச்சைத் தொடங்குகிறோம். அப்படியிருந்தும் அதிகாலை 3.30 மணிக்குள் பெரும்பாலும் முடித்துவிடமுடிகிறது,” என்றார் திரு விஜயன்.

மெட்ரோ காலத்திலிருந்து இன்றுவரை தொழில்நுட்ப வளர்ச்சியால் அச்சுப் பணி எளிதாகியுள்ளது என்றார் திரு விஜயன்.

ஆஃப்செட் அச்சு இயந்திரம், செய்தித்தாள் நகலைக் கொண்ட அச்சுத் தட்டுமீது மையைப் பூசி அதை ஒரு ரப்பர் உருளைமீது மையை மாற்றி, செய்தித்தாளில் அச்சிடும்.
ஆஃப்செட் அச்சு இயந்திரம், செய்தித்தாள் நகலைக் கொண்ட அச்சுத் தட்டுமீது மையைப் பூசி அதை ஒரு ரப்பர் உருளைமீது மையை மாற்றி, செய்தித்தாளில் அச்சிடும். - படம்: த.கவி

அச்சடிக்கும் செய்தித்தாள்களின் எண்ணிக்கை குறைந்தாலும் தன் ஓய்வு நாள்வரை இத்துறை நீடித்து நிலைத்திருப்பது தமக்கு மனநிறைவளிப்பதாகக் கூறினார் திரு விஜயன்.

“தமிழ் முரசு நம் தேசிய நாளிதழ் என்பதால் அதற்கென ஒரு தனி அங்கீகாரம் என்றும் உண்டு. என் தாயார் தமிழ் முரசு, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் இரண்டையும் அன்றாடம் படிப்பவர். என் தம்பியும் சந்தாதாரர்.

“நான் காலையில் தமிழ் முரசு படித்தால்தான் எனக்கு மனநிறைவு இருக்கும்,” என்றார் திரு விஜயன்.

குறிப்புச் சொற்கள்