தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர்த் தமிழர்களை ஒன்றுதிரட்டிய தமிழ் முரசின் 90ஆவது ஆண்டுவிழா

4 mins read
தமிழ் முரசின் 90ஆவது ஆண்டுவிழாவில் அதிபர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மொழி, இலக்கிய, சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள், இந்திய நற்பணிச் செயற்குழுக்களைச் சேர்ந்தோர், மாணவர்கள், இளையர்கள், தமிழ் முரசின் நீண்டகால வாசகர்கள் எனப் பல தரப்பினரும் பங்கேற்றனர். ஆண்டுவிழா குறித்த தங்களது மகிழ்ச்சியையும் கருத்துகளையும் தமிழ் முரசிடம் அவர்கள் பகிர்ந்துகொண்டனர்.
b02c53f7-cb45-4881-a15d-3f64e202cab5
பல தரப்பினரும் சந்தித்து, உரையாட வாய்ப்பாக அமைந்த தமிழ் முரசு 90ஆவது ஆண்டுவிழா. - படம்: தமிழ் முரசு

“பெருமுயற்சியுடன் தமிழ் முரசு 90ஆவது ஆண்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது. பல ஆண்டுகளாகச் சந்திக்காத பலரையும் காண முடிந்தது. பிற இந்தியர் நற்பணிச் செயற்குழுக்களைச் சேர்ந்தோரையும் கண்டதில் மகிழ்ச்சி. உணவும் மிகச் சிறப்பாக இருந்தது,” என்றார் மேரிமவுண்ட் இந்தியர் நற்பணிச் செயற்குழு உறுப்பினர் ஜெயஸ்ரீ, 55.

“இலக்கிய, பண்பாட்டுச் சுவையுடன் நிகழ்ச்சி அமைந்துள்ளது. இது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சி. தமிழ் முரசின் விழாவுக்கு அனைவரும் திரண்டிருப்பதில் வியப்பேதும் இல்லை. சிங்கப்பூர் சமூகத்தில் உள்ள தமிழ் மக்கள் அனைவருக்கும் ஏதோ ஒருவகையில் தமிழ் முரசுடன் கண்டிப்பாகத் தொடர்பு இருக்கும். 1949ஆம் ஆண்டிலிருந்து எனக்கும் தமிழ் முரசுக்கும் தொடர்புண்டு. தலைமுறைகளாக நிலைத்திருக்கும் செய்தித்தாள் மேலும் செழித்து வளர வாழ்த்துகள்,” என்றார் மருத்துவர் உமா ராஜன். 

“இவ்வளவு மக்கள் திரண்டு வந்துள்ளது தமிழ் முரசுமீது இந்தியச் சமூகத்தினர் எவ்வளவு மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளனர் என்பதைக் காட்டுகிறது,” என்று சொன்ன கியட் ஹோங் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு உறுப்பினர் நபிலா நஸ்ரின், 44, “இந்நிகழ்ச்சியின் துடிப்பு தமிழ் மக்களின் மனங்களில் தமிழ் முரசு நீங்கா இடம்பெற்றுள்ளதை எடுத்துக்காட்டுகிறது,” என்றார்.

“தமிழ் அமைப்புகளின் தலைவர்கள், உறுப்பினர்களைச் சந்தித்து உரையாடவும், அவர்கள் மேற்கொள்ளும் பல்வேறு சமூகப் பணிகள் குறித்து அறியவும் தமிழ் முரசு வாய்ப்பளித்துள்ளது. இது செயற்கரிய ஒன்றிணைவு,” என்றார் ஃபிரன்டியர் சமூக மன்ற உறுப்பினர் கணே‌ஷ் குமார், 50.

“ஒரு செய்தித்தாள் 90 ஆண்டை எட்டுவது அரிதானது. அவ்விழாவில் இத்துணை மக்களை இணைத்துக் கொண்டாடுவது சாலச் சிறந்தது. அனைவரையும் இந்தியப் பாரம்பரிய உடைகளில் காண்பது மனமகிழ்ச்சி அளிக்கிறது,” என்றார் பிடோக் இந்தியர் நற்பணிச் செயற்குழுவைச் சேர்ந்த நந்தகுமார் ராமகிரு‌ஷ்ணன், 50.

“தமிழ் முரசு 90ஆவது ஆண்டு விழாவில் இளையர்களின் பங்கு அதிகம் இருப்பதைக் காணமுடிந்தது. புதிய பரிமாணங்களுடன் தமிழ் முரசு மேலும் பல்லாண்டுகள் செழிக்க வாழ்த்துகிறேன்,” என்றார் தஞ்சோங் பகார் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு உறுப்பினர் தாம் சண்முகம்.

“நான் தீவிர தமிழ் முரசு வாசகன். என் குழந்தைகளுக்கும் தமிழ் முரசு படிக்கச் சொல்லி வலுயுறுத்தி வருகிறேன். அது மொழிவளத்தை அதிகரிக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை. அப்படி நான் வாசகனாக இருந்த பத்திரிகையின் 90ஆவது ஆண்டு விழாவில் நானும் பங்கேற்பது பெருமை,” என்றார் மஸ்ஜித் ஜாமிஆ சூலியா சார்பில் விழாவில் பங்கேற்ற முஸம்பின்,45.

“விழா ஏற்பாடுகள் சிறப்பாக அமைந்துள்ளன. ஒரு நன்மாலை நேரத்தில் பலரை ஒன்றுகூட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மகிழ்ச்சி,” என்றார் கம்போங் கிளாம் சமூக மன்ற உறுப்பினர் காந்திதேவி, 65.

“சமூகத்தில் நேர்மறைத் தாக்கம் ஏற்படுத்திய தலைவர்களை நேரில் பார்க்க இந்நிகழ்ச்சி வாய்ப்பளித்துள்ளது. 90 ஆண்டுகால வரலாறு கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்பது நம் மரபைப் பின்னோக்கிப் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. என் வேர்களுடன் என்னை இணைக்கும் பாலம் தமிழ் முரசு,” என்றார் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக தமிழ் இலக்கிய மன்றத்தைச் சேர்ந்த இளையர் சந்தனப் பிரியா, 21.

“என் குழந்தைப் பருவத்திலிருந்து தமிழ் முரசுடன் வளர்ந்துள்ளேன். மாணவப் பருவத்தில் அத்தாளை விரித்துப் படித்த அனுபவத்தை நினைவுகூர்வது தனிச்சிறப்புமிக்கது. அதன் 90ஆவது ஆண்டுவிழாவில் பங்கேற்பதில் பெருமை,” என்றார் சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழக தமிழ்க் கலாசாரச் சங்கத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த், 23.

“சிங்கப்பூரில் உள்ள பல தமிழர்களை ஒன்றிணைத்து விழா நடத்துவது எளிதானதன்று. அதனைத் தமிழ் முரசு செவ்வனே செய்திருப்பது பாராட்டத்தக்கது,” என்றார் ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் குழுவைச் சேர்ந்த சரோ லிங்கம். 

“ஒரு பாரம்பரிய செய்தித்தாளின் முக்கிய நிகழ்ச்சியில், பார்வையாளர் என்பதைத் தாண்டி, என்னால் இயன்றவரை உதவ தொண்டூழியர் பணி ஆற்றியது சிறப்பு. இதில் நானும் பங்களித்துள்ளேன் என்பது மகிழ்ச்சி,” என்றார் சிங்கப்பூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவி ஸ்ரீநிதி, 21.

“காலத்திற்கேற்ப தமிழ் முரசு எவ்வாறு மலர்ந்துள்ளது என்பதையும், தற்போது என்னென்ன முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது என்பதையும் இந்நிகழ்ச்சியின் மூலம் தெரிந்துகொண்டேன். இது நல்ல அனுபவம்,” என்றார் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கத்தைச் சேர்ந்த ராஜே‌ஷ்.

“கடந்த 90 ஆண்டுகளாக சிங்கப்பூர் தமிழ் மக்களுடன் பயணம் செய்துவரும் தமிழ் முரசு, தனது ஆண்டுவிழாவிலும் மக்களை இணைத்ததுள்ளது. நிகழ்ச்சியின் ஏற்பாடுகளும் சிறப்பு,” என்றார் தமிழ் முரசின் நீண்டகால வாசகரான பாலசுப்பிரமணியம்.

“நிகழ்ச்சியில் இடம்பெற்ற பாடல்கள், கவிதை அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளது. பல்வேறு அம்சங்களுடன் நிகழ்ச்சி களைகட்டியுள்ளது,” என்றார் வாசகர் ராமச்சந்திரன்.

“தமிழ் முரசின் ஆண்டு விழாவை அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடியுள்ளனர். தமிழ் முரசு 90 ஆண்டுகளைக் கடந்து செயல்பட ஆதரவளித்த தமிழ் மக்களைக் கூட்டி இந்நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். இது மிகவும் அர்த்தமுள்ளது,” என்றார் உட்லண்ட்ஸ் இந்தியர் நற்பணிச் செயற்குழு உறுப்பினர் பாரத் ஜிஜே.

“நிகழ்ச்சியின் பலமே தமிழ்ச் சமூகத்தின் ஒன்றிணைவுதான். சமூகத்தின் குரலான தமிழ் முரசு நிகழ்ச்சி சமூகத்தையே இணைத்துள்ளது என்று சொல்லாம்,” என்றார் சிக்லாப் சவுத் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவைச் சேர்ந்த வெங்கா புரு‌ஷோத்தமன்.

குறிப்புச் சொற்கள்