பண்பாட்டைப் பறைசாற்றும் சித்திரைப் புத்தாண்டு

தமிழ் மாதங்கள் பன்னிரண்டையும் சிறப்பிக்கும் சித்திரைத் திருநாள்

பண்பாட்டைப் பறைசாற்றும் சித்திரைப் புத்தாண்டு

2 mins read
931f3306-35dc-404b-ba77-565da9707b44
(இடமிருந்து) தாரா தேவி சிவாஜி, 9, கனகேஷ்வரி முத்துக்குமரன், 34, கிரியா தேவி சிவாஜி (குழந்தை), ருத்ரா தேவி சிவாஜி, 5, முத்துக்குமரன் சிவாஜி, 38, ஆகியோர் புத்தாண்டைப் புன்னகையுடன் வரவேற்கின்றனர். - படம்: பே.கார்த்திகேயன்

புத்தாடை அணிந்து பொழுது புலரும் வேளையில் இறைவனை மலர்களால் வழிபட்டுத் சித்திரைப் புத்தாண்டை வரவேற்கின்றனர் கனகே‌ஷ்வரி - முத்துக்குமரன் குடும்பத்தினர். 

சேலையுடன் கூந்தலில் மல்லிகைப் பூ சூடி, தம் மகள்களுக்கும் மல்லிகைப் பூ, பாவாடை, வளையல் ஆகியவற்றை அணிவிப்பார் திருவாட்டி கனகே‌ஷ்வரி.

புத்தாண்டு நாளன்று காய்கறி வகைகள் நிறைந்த தடபுடலான சைவ விருந்தை வாழை இலையில் இட்டு ஒன்றாக அமர்ந்து உணவருந்துவது ஈசூன் வட்டாரத்திலுள்ள இந்தக் குடும்பத்தின் வழக்கம்.

செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 14) வார நாளாக உள்ளபோதும், இதனைத் திருநாளாகக் கொண்டாட வேண்டும் என்ற உறுதியை இப்பெற்றோர் கொண்டுள்ளனர்.

“சிங்கப்பூரிலேயே பிறந்து வளர்ந்தவர்கள் நாங்கள். தமிழ்ப் பண்பாட்டின் மீதான பற்றுடன் நாங்கள் வளர்க்கப்பட்டோம். எல்லாருக்கும் பொதுவான ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடுவதுடன், தமிழர்களுக்கு உரித்தான இத்திருநாளையும் நினைவில்கொள்ள விரும்புகிறோம்,” என்று திருவாட்டி கனகே‌ஷ்வரி குறிப்பிட்டார்.

இறை வழிபாட்டில் ஈடுபடும் குடும்பம்.
இறை வழிபாட்டில் ஈடுபடும் குடும்பம். - படம்: பே.கார்த்திகேயன்

குழந்தை கிரியாவுடன் கொண்டாடப்படும் முதல் புத்தாண்டு என்ற மனநிறைவும் இந்தப் பெற்றோருக்கு உள்ளது. “மூன்று பிள்ளைகளுமே எனக்குப் பெண் பிள்ளைகளாக இறைவன் அருளியிருப்பதை எண்ணி மகிழ்கிறேன்,” என்று தந்தை முத்துக்குமரன் கூறினார். 

சொந்தப் பிள்ளைகளுக்கு மட்டுமன்றி, தொடக்கப்பள்ளி ஆசிரியரான திருவாட்டி கனகேஸ்வரி, தாம் பணிபுரியும் பள்ளியிலும் மாணவர்களுக்கு மரபுக் கலைகளையும் கற்பித்து, பண்பாட்டு அறிவை விதைக்கிறார். 

வேலைச் சூழலால் சித்திரைப் புத்தாண்டை வார நாள்களில் முழுமையாகக் கொண்டாட முடியாமல் போகலாம். ஆனால், அதற்காக அதனை முற்றிலும் தவிர்த்துவிடக் கூடாது என மற்றவர்களுக்குச் சொல்ல விரும்புவதாக இந்த இணையர் கூறுகின்றனர்.

“அன்றைய நாள் வேலைக்குப் போய்விட்டு வந்தாலும்கூட, குடும்பமாக இணைந்து வாழை இலையில் ஒரு வேளையாவது பாரம்பரிய உணவைச் சாப்பிடலாம். கோயிலுக்குச் சென்று வரலாம். ஆங்கிலப் புத்தாண்டை எப்படிக் கொண்டாடுகிறோமோ, அதேபோல இதையும் ஒரு குடும்பமாக இணைந்து கொண்டாட வேண்டும்,” என்று திரு முத்துக்குமரன் கூறுகிறார்.

‘பராபவ’ என்ற வடமொழிப் பெயரைக் கொண்டுள்ளது இந்தப் புத்தாண்டு. சித்திரை முதல் பங்குனி வரையிலான 12 தமிழ் மாதங்களின் அழகான பெயர்களையும் அவற்றின் சிறப்புகளையும் பிள்ளைகளுக்குப் புகட்டுவதற்கு இந்நாள் ஏற்றது என்றார் திருவாட்டி கனகேஸ்வரி.

“எங்கள் பிள்ளைகள் மட்டுமன்றி, எல்லாத் தமிழ்ப் பிள்ளைகளும் தங்களது வேர்களை மறவாமல் பின்பற்றவேண்டும் என்பதே எங்கள் ஆசை,” என்கிறார் இந்தத் தாயார்.

குறிப்புச் சொற்கள்