தமிழர்களிடம் நற்றமிழைக் கொண்டுசேர்க்கும் முனைப்புடன் அயராது உழைத்துவரும் கவிஞர் மகுடேசுவரனுக்கு அவரது சிங்கப்பூர் மாணவர்கள் பொன்விழா எடுத்துக் கொண்டாடினர்.
கவிஞர் மகுடேசுவரன் மாணவர் பாசறை (சிங்கப்பூர்) அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த அந்நிகழ்வு ஜூலை 11ஆம் தேதி சனிக்கிழமை மாலை தேசிய நூலகக் கட்டடத்தின் 16ஆம் தளத்திலுள்ள ‘தி பாட்’ அரங்கில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.
தமிழர்கள் அனைவருமே தமிழுக்காக எதையும் செய்ய முனைப்புடன் இருப்பவர்கள் எனக் குறிப்பிட்ட கவிஞர் மகுடேசுவரன், அவர்களில் ஒருவராகத் தாமும் ஓர் எளிய பணியைச் செய்துவருவதாகக் கூறினார்.
“தமிழாசிரியர்கள் ஊட்டிய தமிழ்ப்பால்தான் இன்று என்னுடைய எழுத்துகளாக விளைந்திருக்கின்றன. இதில் நான் ஒரு கருவி மட்டுமே.
“காலம் கடந்து நிற்க வேண்டிய படைப்புகளில் மொழியின் அடிப்படைப் பண்புகளும் கூறுகளும் மெல்ல மெல்லத் தேய்ந்துகொண்டிருப்பதைக் கண்டேன். மொழியின் இரு கால்களில் ஒன்றான இலக்கியம் வளர்ந்துகொண்டிருந்த நிலையில், இன்னொரு காலான இலக்கணம் வளரவில்லை, பரப்பப்படவில்லை என்று எனக்குத் தோன்றியது. அதுகுறித்த பார்வையுடைய கூட்டம் குறைந்தபோதுதான் நான் அதனைக் கையிலெடுத்தேன்,” என்று கவிஞர் மகுடேசுவரன் நினைவுகூர்ந்தார்.
எவ்வளவு சிறுசெயலாக இருந்தாலும் சரி, அதனைத் தொடர்ந்து செய்யும்போது அது அருஞ்செயலாக, பெருஞ்செயலாக மாறும் என்று மற்றவர்களுக்கும் அவர் ஊக்கமளித்தார்.
கவிதை, கட்டுரை, திரைத்துறை, பயணம் சார்ந்து இதுவரை அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களை இவர் எழுதியிருக்கிறார்.
கவிஞரின் ‘தமிழ் அறிவோம்’ நூல் வரிசையில் இடம்பெற்றுள்ள 15 நூல்கள் குறித்து, அவரிடம் தமிழ் கற்ற மாணவர்கள் ஐவர் மதிப்புரை ஆற்றினர்.
தமிழ் முரசு ஆசிரியர் த.ராஜசேகர், தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் தலைவர் ரஜீத் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
“நூறாயிரம் தமிழறிஞர்களை உருவாக்க வேண்டும் என்ற கவிஞரின் உயர்ந்த நோக்கம் ஊக்கமளிப்பதாக இருந்தது,” என்றார் எழுத்தாளர் எம்.கே.குமார்.
“ஆசிரியரின் இலக்கியப் பங்களிப்பு, வாழ்க்கைப் பயணம் மற்றும் மாணவர்களுடனான அன்புப் பிணைப்பு நிகழ்வெங்கும் வெளிப்பட்டது. ஆசிரியர் - மாணவர் உறவின் மகத்துவத்தை எடுத்துக்காட்டிய இவ்விழா அனைவரின் மனங்களிலும் நீங்கா நினைவாகப் பதிந்தது,” என்று கவிஞர் தியாக இரமேஷ் குறிப்பிட்டார்.
இலக்கணத்தின் முக்கியத்துவத்தை இனிமையாக எடுத்துரைத்த முத்தான நிகழ்வு என்று ஆங்கிலோ சீனத் தன்னாட்சிப் பள்ளியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சரிஃப் பாராட்டினார்.
“கவிஞர் மகுடேசுவரன் பழந்தமிழைப் போற்றுவதோடு மட்டுமல்லாமல் நவீன உலகிற்கேற்ப தமிழ்ச் சொற்களஞ்சியத்தையும் வளப்படுத்தி வருகிறார். தமிழ் ஆசிரியராகவும் முதலீட்டு அறிவைப் பகிரும் வழிகாட்டியாகவும் பலருக்கு ஊக்கமளித்து வருகிறார்,” என்று மென்பொறியாளர் வனிதா கூறினார்.
தமிழர் உணவுகள் இடம்பெற்ற பாரம்பரிய உணவு விருந்தோம்பலும் தங்களை மிகவும் கவர்ந்ததாகப் பார்வையாளர்கள் பலரும் தெரிவித்தனர்.

