ஆ. விஷ்ணு வர்தினி
தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்தின் முதல் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்ற திருவாட்டி உமா குமரன் வெஸ்ட்மின்ஸ்டரில் அடியெடுத்து வைத்து ஓராண்டுகாலம் நிறைவடைய இருக்கிறது.
2024ல் முதன்முதலில் அமைக்கப்பட்ட ஸ்ட்ரேட்ஃபர்ட் ஆண்ட் போ தொகுதியில் அவர் கடந்த ஆண்டுத் தேர்தலில் தொழிற்கட்சிக்கு வெற்றியை ஈட்டித் தந்தார். பகவத் கீதையின்மீது ஆணையிட்டு பதவியேற்ற அவர், அடுத்து வரும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருக்குறளின்மீது ஆணையிடும் வசதியை ஏற்படுத்தும் அவாவில் நாடாளுமன்றப் பேச்சாளரிடத்தில் தமிழ் திருக்குறள் பதிப்பு ஒன்றை வழங்கினார்.
தமிழ் முரசிடம் பேசிய திருவாட்டி உமா, தமிழ்ச் சமூகத்தின் நலனை மனத்திற்கொண்டு பலதரப்புகளில் பணியாற்றி வருவதை விவரித்தார்.
இங்கிலாந்தின் தேசிய சுகாதாரத்துறையில் (என்எச்எஸ்) பணிபுரியும் மருத்துவர்களில் பன்னிரண்டு பேரில் ஒருவர் தமிழர். அதிக அலுவல் நேரம், குறைந்த ஊதியம், தாழ்த்தப்பட்ட ஊழியர்நலன் என பல சிக்கல்களை எதிர்கொண்டுவரும் அவர்களுக்குக் குரல் கொடுப்பதில் திருவாட்டி உமா பங்களித்துள்ளார்.
திருவாட்டி உமா கிழக்கு லண்டனில் பிறந்து வளர்ந்தவர். அதிக தமிழர்கள் வசிக்கும் அப்பகுதியில் திருவள்ளுவர் சிலை நிறுவுவது அவர் தற்சமயம் எடுத்துவரும் முயற்சிகளில் ஒன்று.
இங்கிலாந்து முழுக்க ஏறத்தாழ 40 தமிழ்ப் பள்ளிகள், தமிழர் நல அமைப்புகள், மொழி அமைப்புகள் என பல இருக்க, இத்தகைய கூடுதல் முயற்சிகள் தமிழ் மரபுடைமையையும் வரலாற்றையும் அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதில் பங்காற்றும் என்பது அவரின் திடமான நம்பிக்கை.
1980களில் இலங்கையின் உள்நாட்டுப் போர் சமயத்தில் இங்கிலாந்திற்குக் குடிபெயர்ந்தனர் திருவாட்டி உமாவின் பெற்றோர். ஈழத் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகள் அவரின் மனத்தைவிட்டு அகலாதவை.
தொடர்புடைய செய்திகள்
தமது அரசியல் பயணத்தின் தொடக்கத்திலிருந்தே இலங்கை போர்க்குற்றங்கள் குறித்து விழிப்புணர்வூட்டுவதை முதன்மைப் பணியாய்க் கொண்டிருந்த அவர், அண்மைக் காலத்தில் நாடாளுமன்றத் தளத்தைப் பயன்படுத்தி வருகிறார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் போர்க்குற்றவாளிகள் நால்வரின்மீது இங்கிலாந்து அரசாங்கம் தடைவிதித்ததை அவர் பெரிதும் வரவேற்றார். தொடர்ந்து, ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அனைத்துலக நீதிமன்றத்தில் இக்குற்றங்களை முன்நிறுத்துவதற்கு அவர் உழைத்துக்கொண்டிருக்கிறார்.
இங்கிலாந்து அரசியல் களத்தில் தமிழர்களின் தடம் விரிவடையும் கனவில் பங்கெடுத்து வருகிறார் திருவாட்டி உமா. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் பிரதமர் கியர் ஸ்டார்மரின் தலைமையில் நடந்தேறிய தைப்பொங்கல் விழாவை நினைவுகூர்ந்த அவர், நாடெங்கிலும் இருந்து வருகை புரிந்திருந்த தமிழர்கள் பல்வேறு முக்கியத் துறைகளில் மிளிர்வதை அவ்விழா பறைசாற்றியது என்றார்.
“இங்கிலாந்தில் தமிழர்கள் பிழைக்க மட்டுமல்ல, செழிப்புடன் இருப்பதற்கான சிறந்த சான்றாக அவ்விழா விளங்கியது. நாற்பது ஆண்டுகளுக்கு முன் இங்கு அடைக்கலம் புகுந்த என் பெற்றோர், இப்போது தங்களின் மகள் இங்கிலாந்தின் பிரதமரோடு பணிபுரிவதில் பெருமிதம் கொண்டனர்,” என்றார் அவர். தம்மைத் தொடர்ந்து இன்னும் பல தமிழர்கள் இங்கிலாந்தின் அரசியல், பொதுத்துறையில் இணைவதை அவர் எதிர்பார்த்துள்ளார்.
“இன்னுமொரு தமிழர் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைக்கவேண்டும். அதற்கான அனைத்து முயற்சிகளையும் நான் முன்னெடுப்பேன்,” என்றார் திருவாட்டி உமா. இக்கனவை நனவாக்கும் முனைப்பில் இளம் தமிழர்களைப் பொதுச் சேவையின் பக்கம் ஈர்ப்பதற்கு இந்தக் கோடை விடுமுறையில் சிறப்புப் பயிலரங்கு ஒன்றுக்கு ஏற்பாடு செய்வதில் ஈடுபட்டுள்ளார்.
சிங்கப்பூருக்குச் சிறுவயதில் வந்த திருவாட்டி உமாவின் நினைவுகளில் நிற்பது, பொது இடங்களிலும் சாலைகளிலும் காணப்பட்ட தமிழ்ச் சொற்கள். அன்றாட வாழ்வில் தமிழ் வகிக்கும் பங்குக்கு அவற்றை சான்றாக எடுத்துக் கூறிய அவர், “சிங்கப்பூரின் தமிழ்மொழி மாத விழாக்கள், அரசியலிலும் பொதுச் சேவையிலும் தமிழ்த் தலைவர்களின் பெரும்பங்களிப்பு ஆகியவை இங்கிலாந்து சிங்கப்பூரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை,” என்றார்.
இங்கிலாந்துத் தமிழர்களின் எதிர்காலம் இனி தொடர்ந்து மிளிரும், நாட்டின் முக்கிய மாற்றங்களில் புதிய தமிழ்த் தலைமுறையின் சுவடு இருக்குமென அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

